Skip to content

புளியங்கொட்டையின் தொழிற்சாலைப் பயன்கள்

புளியங்கொட்டையின் தொழிற்சாலைப் பயன்கள்: சராசரியாக புளியம்பழம் 55 சதவீதம் சதைப்பற்றுள்ள பகுதியையும், 34 சதவீதம் கொட்டையையும், 11 சதவீதம் நாறும், ஓடும் கொண்ட பகுதியாகும். ஒட்டும் பசை, பெக்டின், கால்நடைத்தீவனம், புரதம் ஆகியவை தயாரிக்க புளியங்கொட்டையின் உள் அமைந்த பருப்புப்பொடி ஆதாரமாக அமைகிறது. பெக்டின் – ஜாம், ஜெல்லி தயாரிக்க பயன்படுகிறது. வியாபார ரீதியாக பழங்களிலிருந்தும், பழத்தோலிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. ஒட்டும் பசை – புளியங்கொட்டையினுள் உள்ள பருப்புப் பொடியில் இருமடங்கு தண்ணீரைச் சேர்த்து 5 சதவீதம் குளுக்கோஸ், 12 சதவீதம் சோடியம் பைகார்பனேட் சேர்த்து ஒட்டும்பசை தயாரிக்கப்படுகிறது. அறை தடுப்புச் சுவர்கள் அமைக்க பயன்படும்.

அட்டைகள் தயாரிக்க ஒட்டும் பசை பயன்படுத்தப்படுகிறது. தோல்பதனிடும் நிறமி – தோலில் உள்ள டேனின் என்ற நிறமி தண்ணீரில் கரையக்கூடிய பாபிடீனாரிக் கூட்டுப் பொருளாகும். டேனின் எதிர் ஆக்ஸி காரணியாகப் பயன்படுகிறது. புளியங்கொட்டையில் மேற்புற ஓட்டில் 20-32 சதவீதம் வரை டேனின் உள்ளது. இது தோல் பதனிடுதலில் நிறமியாகப் பயன்படுகிறது. புளியங்கொட்டை எண்ணெய் – புளியங் கொட்டை சுமார் 4 முதல் 6 சதவிகித எண்ணெய் சத்தைக் கொண்டுள்ளது. ஹெக்ஸேன் அல்லது குளோரோபார்ம் மெத்தனால் கலந்த கலவை கொண்டு எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. இன்றியமையா கொழுப்பு அமிலங்களான பால்சிடிக், ஒலியிக், லின்னோலியிக், ஈகோசனாயிக் அமிலங்கள் புளியங்கொட்டை எண்ணெயினுள் கிடைக்கின்றன.

கடலை எண்ணெய்க்கு நிகரான தன்மையும் கொண்டுள்ளது. புரதம் – பஞ்ச காலங்களில் புளியங்கொட்டை உணவாக பயன்படுத்தப்பட்டதற்கான வரலாறுகள் உண்டு. 13 முதல் 20 சதவீதம் வரை புரதச்சத்து உள்ளது. திரியோன்னன், டிரிப்டோபேன் தவிர மற்ற அமினோ அமிலங்கள் புளியங்கொட்டையில் உள்ளன. மெத்தியோனைன் கன்சலைசின் ஆகிய அமிலங்கள் முறையே 113-475 மில்லி கிராம் என்ற அளவில் புளியங்கொட்டையில் அமைந்த ஒரு கிராம் மொத்த நைட்ரஜனில் உள்ளது. எனவே புளியங்கொட்டையினுள் உள்ள பருப்பை உணவாகப் பயன்படுத்துவதன் மூலம் புரதம் நிறையப்பெற்று புரதக்குறைபாட்டினால் ஏற்படும் நோய்களைத் தவிர்க்கலாம்.

புளியங்கொட்டை கோழித்தீவனம்: புளியங்கொட்டை புரதம், மாவு, எண்ணெய் சத்துக்களைக் கொண்டிருப்பதால் கால்நடை மற்றும் கோழித்தீவனமாகப் பயன்படுத்தலாம். எரிகட்டிகள் : புளியங்கொட்டையின் மேற்புற ஓடுடேனின் பிரித்தெடுக்கப்பட்ட பின்பு சுமார் 13 முதல் 20 சதவிகிதம் வரை நார்ச்சத்து கொண்டுள்ளது. இதனுடன் பழ மேற்புற ஓடும் ஒட்டும் பசையும் கொண்டு அதிக அழுத்தத்தில் எரிகட்டிகள் தயாரிக்கலாம். புளியங்கொட்டையிலிருந்து உணவுப்பொருட்களும் பாலிமர் பொருட்களும் தயாரிக்க பலவிதமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. (தகவல் : ந.கற்பூர சுந்தரபாண்டியன், முனைவர் பெ.ராஜ்குமார், வேளாண் பதன செய் பொறியியல் துறை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சிராப்பள்ளி-620 008. போன்: 0431 – 290 6100)

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj