எலுமிச்சை மரத்தின் கொழுந்து இலை, பூ, விதை, பிஞ்சுக்காய், கனி, கனிச்சாறு, கனியின் தோல், மரப்பட்டை, வேர், வேர்ப்பட்டை, எண்ணெய் இவை அனைத்துமே பயன்பாட்டில் உள்ளன.
எலுமிச்சம் பழச்சாறில் அதிக அளவில் இயற்கையாக அமைந்துள்ள வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து “ஸ்கர்வி என்ற நோயைத் தடுப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நா வறட்சி, அதிக தாகம், கண்நோய், காதுநோய், நகச்சுற்று, நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்போக்கு இத்தகைய எண்ணற்ற பிணிகளைப் போக்கவல்ல ஒரு தேசியப்பழம் என்றும் இது போற்றப்படுகிறது. வளமான குறுமண் நிலம், உரிய உகந்த மழை, தகுந்த ஈரப்பதம், சிறந்த சீதோஷ்ணம் ஆகியவை எலுமிச்சைத் தாவரம் செழிப்பாக வளர்ச்சி அடைவதற்குப் பேருதவியாக அமையும்.
நிலவளம், நீர்வளம் செறிந்த அந்தப் பகுதியில் ஏறத்தாழ எட்டடி ஆழம் வரை ஒரேவிதமான மண் இந்த தாவரத்திற்கு அத்யாவசியமாகும். எலுமிச்சை விதைகளை நட்டு வளர்க்கலாம். முற்றிய, முதிர்ந்த எலுமிச்சம் பழங்களில் உள்ள பருவட்டான விதைகளைத் தேர்ந்தெடுத்து, நன்றாக கழுவி, வெயிலில் காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த அந்த விதைகளை 4 முதல் 3 அங்குலம் உள்ள உயரமான பாத்திகளில், ஒவ்வொரு வரிசைக்கும் 4 அடி தூர இடைவெளியில் இட வேண்டும். இந்த விதைகள் 8 அல்லது 9 மாதங்கள் வரை நாற்றங்கால்களில் இருக்க வேண்டியது அவசியமாகும். குருத்து, ஒட்டு முறையிலும் தொடக்கச் செடிகளை வளம் பெறச் செய்யலாம். ஒட்டுக்கன்றுகளை நட்டு வளர்ப்பது சிறந்தது. இது விரைவாகவும் வளரும். அதிகமான விளைச்சலையும் அளிக்கும். நல்ல மரங்களின் குருத்துக்களைச் சீவிய பின் ஒட்டுக்கட்ட வேண்டும்.
இந்த ஒட்டு இணைந்த பிற்பாடு தனியே வெட்டி எடுக்க வேண்டும். மிகப் பக்குவமாக இதை நிலப்பரப்பில் கவனமாக நட்டு சிரத்தையுடன் வளர்க்க வேண்டும். இதற்குத் தேவைப் படுகின்ற தண்ணீரை (மண்ணை அணை கட்டி) ஊற்றி வர வேண்டும். மாட்டு எரு, செயற்கை உரம் ஆகியவற்றைக் கலவை செய்து, அடிப்பாகத்தைச் சுற்றி இட வேண்டும். பட்டுப்போயிருந்த இலைகளையும் கிளைகளையும் அறவே நீக்க வேண்டும். இளம் செடிகள் பூச்சிகளால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, சுண்ணாம்பு நீர்க்கரைசலை அவ்வப்போது தெளிப்பது நல்லது. நல்ல வளர்ச்சி பெற்ற எலுமிச்சை மரம் ஆண்டு ஒன்றுக்கு ஆயிரம் காய்கள் கூட விளைவிக்கும்.
– எஸ்.நாகரத்தினம், விருதுநகர்.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral