Site icon Vivasayam | விவசாயம்

பயனளிக்கும் பல பயிர் பண்ணையம்

முயற்சி என்பது விதை போல, அதை விதைத்து கொண்டே இரு… முளைத்தால் மரம், இல்லையென்றால் மண்ணிற்கு உரம்” என்கிறார் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். காய்கறி சாகுபடி, நெல் சாகுபடி, எள் சாகுபடி, கடலை சாகுபடியில், அசத்தி வருகின்றனர், சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை பனம்பட்டியை சேர்ந்த விவசாயிகள்.

காரைக்குடியிலிருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ளது இந்த பனம்பட்டி. 10 ஏக்கரில் பல பயிர்களை, ஆண்டு முழுவதும் சாகுபடி செய்து வரும் சித.உடையப்பன் கூறியதாவது: ஒரு ஏக்கரில் வாழை பயிரிட்டுள்ளோம். மூன்று ஏக்கரில் தென்னை, அரை ஏக்கரில் கேழ்வரகு, அரை ஏக்கரில் மக்காசோளம், 20 சென்டில் மரவள்ளி கிழங்கு, தலா 30 சென்டில் கத்தரி, வெண்டை, கீரை, மிளகாய் பயிரிட்டுள்ளோம். 3 ஏக்கர் கடலை பயிரிட்டுள்ளோம். 30 நாளில் பலனை தருவது கொத்தவரங்காய், தட்டைபயிறு, 60 நாளில் பலன் தருவது கத்தரி, 45 நாளில் பலன் தருவது மிளகாய், 120 நாளில் பலன் தருவது கேழ்வரகு, 90 நாளில் பலன் தருவது கடலை, 9 மாதத்தில் பலன் தருவது வாழை. இவை அனைத்தையும் இங்கு பயிரிட்டுள்ளோம்.

கடலை, நெல், தென்னை, வாழை மட்டுமே மொத்தமாக அறுவடை செய்யப்படுகிறது. காய்கறிகள் அன்றாடமும், வாரத்துக்கு ஒரு முறையும் அறுவடை செய்து வருகிறோம். தினமும் பறிக்கும் காய்கறிகள் மூலம் ரூ.300 முதல் 500-ம், வாரத்துக்கு ஒரு முறை சந்தைக்கு செல்லும் காய்கறி மூலம் ரூ.5 ஆயிரமும் வருமானம் கிடைக்கிறது. வெளியே வேலைக்கு சென்றால், ரூ.300 வருமானமாக கிடைக்கும். அதே நம் நிலத்தில் வேலை செய்தால் ரூ.500 தினந்தோறும் வருமானமாக கிடைக்கும். நானும், என்னுடைய அண்ணன் விஸ்வலிங்கமும், வீட்டு உறுப்பினர்களும் தான் உழைத்து வருகிறோம்.

30 சென்ட் கத்தரி மூலம், ரூ.40 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். செலவு போக ரூ.25 ஆயிரம் வருமானமாக கிடைக்கும். நோய் தாக்கம் தான் கத்தரியின் வீழ்ச்சிக்கு காரணம். நோய் தாக்காதவாறு ஒவ்வொரு நாளும் இதை கண்காணிக்க வேண்டும். கொத்தவரங்காய்க்கு உரம், மருந்து அதிகம் தேவைப்படாது. தொழு உரம் மட்டும் இட்டால் போதும்.

ஒரே பயிரை பயிரிட்டு, அதை மட்டுமே நம்பியிருக்காமல், இருக்கின்ற நிலத்தை பல பிரிவாக பிரித்து, பல வகை பண்ணையம் மேற்கொண்டால், பலன் எதிர்பார்த்ததை விட அதிகமாக கிடைக்கும். வீட்டு தேவையும், இதன் மூலம் நிறைவேற்றி கொள்ளலாம், என்றார். கடன்படா வேளாண்மைக்கு கலப்பு சாகுபடி செய்து அசத்தி வரும் இவரை போல், இல்லாவிட்டாலும், இருக்கின்ற இடத்தில், இயன்றவரை தோட்டக்கலை பயிர்களை விவசாயம் செய்து, நம் தேவையை நாம் பூர்த்தி செய்து கொள்ள முன்வர வேண்டும்.

ஆலோசிக்க : 94420 43575
டி.செந்தில்குமார்,
காரைக்குடி
நன்றி: தினமலர்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version