25 சென்ட் நிலத்தில் தலா ஆறரையடி இடைவெளியில், ஓர் அடி ஆழ, அகலமுள்ள 240 குழிகள் அமைக்க வேண்டும். ஒரு குழிக்கு 250 கிராம் மண்புழு உரம், 500 கிராம் ஆட்டு எரு, 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, தலா 20 கிராம் சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து குழியில் இட வேண்டும். இதன் மீது கொஞ்சம் மண்ணைத் தள்ளி, ஒன்றரை அங்குலம் ஆழத்தில் ஒரு விதை ஊன்ற வேண்டும். 25 சென்ட் நிலத்தில் விதைக்க, 250 கிராம் விதை தேவைப்படும்.
விதை ஊன்றிய பிறகு பாசனம் செய்ய வேண்டும். அதன் பிறகு, ஒரு நாள் விட்டு ஒருநாள் தண்ணீர் கொடுக்க வேண்டும். 9 முதல் 12 நாட்களில் முளைப்பு வரும். அதன் பிறகு ஒரு வாரம் முறை தண்ணீர் கொடுக்க வேண்டும். 30 நாளில் செடிகள் ஒன்றேகால் அடி உயரத்துக்கு வளர்ந்திருக்கும். ஏற்கனவே அடியுரம் போட்ட அதே விகிதத்தில் 30, 90, 180 ஆகிய நாட்களில் மண்புழு உரம், ஆட்டு எரு, வேப்பம் பிண்ணாக்கு, உயிர் உரங்கள் கலந்து செடியைச் சுற்றிலும் அரையடி இடைவெளியில், லேசாக பள்ளம் பறித்து இட வேண்டும்.
40 முதல் 50 நாட்களில் செடிகள் 3 அடி உயரத்துக்கு வளர்ந்திருக்கும். அப்போது கிளைகளின் நுனியைக் கையால் கிள்ளிவிட வேண்டும். இதனால் அதிக எண்ணிக்கையில் பக்கக் கிளைகள் உருவாகும். 180-ம் நாளிலிருந்து செடிகள் காய்ப்புக்கு வரும். அடுத்த 6 மாதங்களுக்கு மகசூல் கிடைக்கும். காய்ப்பு ஓய்ந்ததும், தரையில் இருந்து ஓர் அடி உயரத்துக்கு செடியை விட்டுவிட்டு மேற்பகுதியை கவாத்து செய்து, ஏற்கனவே சொன்னதுபோல் உரமிட்டு தண்ணீர் கொடுக்க வேண்டும். 6-ம் மாதம் மீண்டும் காய்ப்புக்கு வந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு மகசூல் கொடுக்கும். ஒரு முறை செடிமுருங்கை சாகுபடி செய்தால் தலா 6 மாத இடைவெளியில் 3 போகங்கள் வரை மகசூல் எடுக்கலாம்.
விதைச் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு !
முருங்கைச் செடியிலேயே காய்களை நன்கு முற்ற வைக்க வேண்டும். நன்கு முற்றிய நெற்றுகளைத் தேர்வு செய்து ஓடுகளை நீக்கிவிட்டு விதைகளை வெளியில் எடுக்கவேண்டும். பிஞ்சு விதைகளை நீக்கிவிட்டு, நன்கு முற்றிய விதைகளை மட்டும் 2 மணிநேரம் வெயிலில் காயவைக்க வேண்டும். 10 கே.ஜி தடிமன் கொண்ட பாலிதீன் பைகளில் போட்டு, ஒரு கிலோ விதைக்கு 15 கிராம் வசம்புத்தூள், தலா 20 கிராம் நன்கு காய்ந்த நொச்சி இலை, வேப்பிலை கலந்து நன்கு கிளறிவிட்டு, காற்றுப் புகாதவாறு கட்டிவைக்க வேண்டும். இதை ஒரு வருடம் வரை வைத்திருந்து விதைப்புக்குப் பயன்படுத்தலாம்.
விதைகள் செதிலுடன் இருந்தால், முளைப்புத்திறன் நன்றாக இருக்கும். எனவே, காய்களில் இருந்து விதை எடுக்கும்போதும், காய வைக்கும்போது செதில் உதிராத வகையில் மிகவும் கவனமாக கையாள வேண்டும். இதுபோன்ற முளைப்புத்திறன் மிக்க விதைகள் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய்க்கு விலை போகும். சற்று தரம் குறைவான, செதில்கள் இல்லாத விதைகளை எண்ணெய் உள்ளிட்ட மருந்துப்பொருட்கள் பயன்பாட்டுக்காக வியாபாரிகள் வாங்கிக்கொள்கிறார்கள். ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் வீதம் விலை கிடைக்கும்.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral