Skip to content

70 நாட்களில் காளான் வளர்ப்பது எப்படி..?

தரமான புது வைக்கோலை 2 முதல் 3 அங்குல நீளத்துக்கு வெட்டி, சுத்தமான தண்ணீரில் 5 மணி நேரம் ஊற வைத்து, நெல் அவிக்கும் டிரம்மில் 45 நிமிடங்கள் அவிக்க வேண்டும். பிறகு, நிழலான இடத்தில் கொட்டி கையில் பிடித்தால், ஈரம் ஒட்டாத அளவுக்கு உலர்த்த வேண்டும். 14 x 26 என்ற அளவில், உள்ள பாலித்தீன் பையில், கொஞ்சம் வைக்கோல் கொஞ்சம் காளான் விதைகள்.. என அடுக்கடுக்காக நிரப்பி பையைச் சுற்றிலும் தொற்று நீக்கம் செய்யப்பட்ட சாக்குத் தைக்கும் ஊசியால் 9 துளைகள் இட வேண்டும். தயாரிப்புக்குப் பயன்படுத்தும் விதைகள், வெண்மை நிறத்தில் இருக்க வேண்டும். மஞ்சள், கறுப்பு நிறங்களில் இருந்தால், அந்த விதைகளைப் பயன்படுத்தக்கூடாது.

இப்படித் தயாரிக்கப்பட்ட படுக்கைகளைப் படுக்கைத் தயாரிப்பு அறையில் தொங்க விட வேண்டும். இந்த அறையின் வெப்பநிலை 24 முதல் 28 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். தினமும் அறையின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றைப் பராமரிக்க தரையில் மணல் பரப்பி, அதன் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும். தொங்கவிடப்பட்ட படுக்கைகளில் 18 முதல் 24 நாட்களில் மைசீலியம் பூஞ்சணம் பரவிவிடும்.

நன்கு பூஞ்சணம் பரவிய படுக்கைகளை கத்தி மூலம் குறுக்காக வெட்டி இரண்டு பைகளாக்க வேண்டும். வெட்டப்பட்ட பகுதியில்.. அவித்து ஆறவைக்கப்பட்ட கரம்பை மண்ணைத் தூவி, காளான் வளர்ப்பு அறையில் (பசுமைக் குடில் போன்ற அறை) வைக்க வேண்டும். படுக்கைகளை வைப்பதற்கு முன்பாக அறையைத் தொற்றுநீக்கம் செய்ய வேண்டும். படுக்கைகளை அடுக்கிய பிறகு, தினமும் கைத்தெளிப்பான் மூலம் தண்ணீர் தெளிக்க வேண்டும். இந்த அறையில் 30 முதல் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் 85 சதவிகித ஈரப்பதமும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பராமரிப்பில் ஈடுபடும் நபர்கள் கால்களை சுத்தமாகக் கழுவிய பிறகே அறைக்குள் நுழைய வேண்டும்.

வளர்ப்பு அறையில் வைத்த படுக்கைகளில் 7 முதல் 12 நாட்களில் மொட்டு வைக்க ஆரம்பிக்கும். 12 முதல் 18 நாட்கள் வரை தொடர்ந்து 6 நாட்கள் வரை அறுவடை செய்யலாம். இது முதல் அறுவடை அடுத்து 7 நாட்கள் கழித்து, ஆறு நாட்கள் வரை இரண்டாவது அறுவடை செய்யலாம். அடுத்து 10 நாட்கள் கழித்து, ஆறு நாட்கள் வரை மூன்றாவது அறுவடை செய்யலாம். படுக்கை தயாரித்தது முதல், கடைசி அறுவடை வரை ஏறக்குறைய 70 நாட்கள் ஆகின்றன. இடைப்பட்ட நாட்களில் களைக் காளான்கள் முளைத்து வரும். அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj