கூழாங்கல் நிலத்தில் தேக்கு சாகுபடி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
மணல் கலந்த கூழாங்கல் நிலத்தில் தேக்கு நன்றாகவே வளரும். ஆறடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழத்தில் குழியெடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி குழி எடுக்கும்போது, ஏக்கருக்கு 1,200 குழிகள் வரை எடுக்கலாம். ஒவ்வொரு குழியிலும் தலா 2 கிலோ வண்டல் மண், தொழுவுரம் ஆகியவற்றைக் கலந்து கொட்டி, கன்றுகளை நடவு செய்து.. மேல் மண்ணைக் கொண்டு மூட வேண்டும்.
மாதம் ஒரு முறை தழை, மணி, சாம்பல் சத்துக்கள் கொண்ட உரத்தை தேக்கு மரங்களுக்குக் கொடுத்து பாசனம் செய்ய வேண்டும். மழை இல்லாத காலங்களில் வாரம் இரண்டு முறை மரம் ஒன்றுக்கு தலா 15 லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, கட்டாயம் பக்கக்கிளைகளை ஒடித்து கவாத்துச் செய்ய வேண்டும். கிளை ஒடிக்கும்போது ஏற்படும் காயம் வழியே நோய்கிருமிகள் புகுந்து சேதப்படுத்த வாய்ப்புண்டு. அதனால், கிளைகளை ஒடித்த இடத்தில் வேப்பெண்ணெய் தடவி விட வேண்டும்.
தேக்குக்கு இடையில் 5 ஆண்டுகள் வரை ஊடுபயிர் சாகுபடி செய்யலாம். நடவு செய்த அத்தனை மரங்களும் ஒரே சீராக வளராது. அதனால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு சுமாரான வளர்ச்சியுள்ள மரங்களை கொஞ்சம் கொஞ்சமாகக் கழித்துக் கொண்டே வர வேண்டும். அப்படிக் கழிக்கும் மரங்களையும் விற்பனை செய்ய முடியும். நன்கு வளர்ந்து வரும் மரங்களை சரியான முறையில் பாசனம் மற்றும் உரம் கொடுத்துப் பராமரித்து வந்தால் பதினைந்து, இருபது ஆண்டுகள் கழித்து நல்ல வருமானம் பெற முடியும்.
நன்றி
பசுமை விகடன்
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral