தமிழகத்தில் நிலவும் தட்பவெப்ப நிலையை, சித்தர்களும், முன்னோர்களும் 6 வகைப் பருவங்களாகப் பிரித்துள்ளனர். கீரைகள் பற்றிய இந்தப் புத்தகத்தில் பருவ காலங்களுக்கு என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம்.
இருக்கிறது, மற்ற உணவுகளைப் போல் கீரை உணவுகள் கிடையாது. மற்றவற்றில் இல்லாத, கிடைக்காத பல ‘நல்ல விஷயங்கள்’ கீரைகளில் உள்ளன. அவற்றை, எந்தவித தடங்கல்களோ, குறைபாடுகளோ இல்லாமல் ‘அனுபவிக்க’ வேண்டும் என்றால், தட்பவெப்ப நிலைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சித்தர்களும், இதைக் கருத்தில் கொண்டுதான் பருவ காலங்களுக்கு ஏற்ப சாப்பிடக்கூடிய கீரைகளைப் பட்டியலிட்டு உள்ளனர். அவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். அதற்கு முன், 6 பருவ காலங்கள் என்னென்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.
இளவேனில் காலம் – (சித்திரை, வைகாசி மாதங்கள்)
முதுவேனில் காலம் – (ஆனி, ஆடி மாதங்கள்)
கார்காலம் – (ஆவணி, புரட்டாசி மாதங்கள்)
கூதிர் காலம் – (ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்)
முன்பனிக் காலம் – (மார்கழி, தை மாதங்கள்)
பின்பனிக் காலம் – (மாசி, பங்குனி மாதங்கள்)
அடுத்து, இந்தக் காலங்களில் தவிர்க்க வேண்டிய கீரைகள் என்னென்ன? சாப்பிடக்கூடிய கீரைகளை எப்படி சமையல் செய்து சாப்பிடுவது போன்றவற்றைப் பார்ப்போம்.
இளவேனில் காலம்
அரைக்கீரை மற்றும் புளிச்சக் கீரை தவிர்த்த மற்ற கீரைகளைச் சாப்பிடலாம். கீரையுடன் பருப்பைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம். மிளகாய், மிளகு, புளி போன்றவற்றை அளவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
முதுவேனில் காலம்
அரைக்கீரை, முள்ளங்கிக்கீரை, கீரைத் தண்டு, சிறுகீரை, பருப்புக் கீரை போன்ற கீரைகளைத் தவிர்த்து, மற்ற கீரைகளைச் சாப்பிடலாம். கீரையுடன் சிறிதளவு மிளகாய் வற்றல், புளி, மிளகு சேர்த்துக்கொள்வது நல்லது.
கார் காலம்
சிறு கீரை, பருப்புக் கீரை, வெந்தயக் கீரை, முள்ளங்கிக் கீரை, பிண்ணாக்குக் கீரை, மூக்கிரட்டைக் கீரை, துத்திக் கீரை, பசலைக் கீரை போன்றவற்றைத் தவிர்த்து பிற கீரைகளைத் தாராளமாகச் சாப்பிடலாம். கீரைகளுடன் மிளகாய், மிளகு, புளியையைக் கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ளலாம். பருப்பு சேர்த்துக் கடைவதைத் தவிர்ப்பது நல்லது.
கூதிர் காலம்
அகத்திக் கீரை, ஆரைக் கீரை, கானாம் வாழைக்கீரை, சிறு கீரை, பசலைக் கீரை, பருப்புக் கீரை, கொடிப்பசலைக் கீரை, பிண்ணாக்குக் கீரை, பண்ணைக் கீரை, பாற்சொரி கீரை, கீரைத்தண்டு, பொடுதலைக் கீரை, முள்ளங்கிக் கீரை மற்றும் மூக்கிரட்டைக் கீரையை தவிர மற்ற கீரைகளை சாப்பிடலாம்.
ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கீரை உணவைச் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். சளி, இருமல், இரைப்பு, ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் கீரை உணவுகளைச் சாப்பிடாமல் இருப்பது நல்லது.
முன்பனிக் காலம்
அகத்திக் கீரை, சிறு கீரை, பசலைக் கீரை, பருப்புக் கீரை, முள்ளங்கிக் கீரை, கொடிப்பசலைக் கீரை, மூக்கிரட்டைக் கீரை போன்ற கீரைகளைத் தவிர்த்து, பிற கீரைகளைச் சாப்பிடலாம். ஆனால், கீரைகளைப் பொரியல் செய்து சாப்பிடக் கூடாது. பருப்பு சேர்த்து சாப்பிட்டால் உடல் குளுமை அடைதல், கப நோய்கள் தோன்றலாம். எனவே, கீரைகளை சூப் வைத்துச் சாப்பிடலாம்.
பின்பனிக் காலம்
சிறு கீரை, பருப்புக் கீரை, பாலக் கீரை, மூக்கிரட்டை மற்றும் பசலைக் கீரையைத் தவிர்த்த மற்ற கீரைகளை தாராளமாகச் சாப்பிடலாம். கீரையை பருப்பு சேர்த்தும் சாப்பிடலாம். சூப் வைத்தும் குடிக்கலாம்.
இதுவரை, அந்தந்த பருவ காலங்களில் சாப்பிடாமல் தவிர்க்க வேண்டிய கீரைகளைப் பார்த்தோம். அடுத்து, எந்தப் பிரச்னையும் இல்லாமல், எல்லா நாள்களிலும் சாப்பிடக் கூடிய கீரைகளைப் பார்ப்போம்.
எல்லா நாள்களிலும் சாப்பிடக்கூடிய கீரைகள்
பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லிக் கீரை போன்றவற்றை எல்லா நாள்களிலும், எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். எந்தப் பிரச்னையும் இருக்காது.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral