வடக்கு கலிபோர்னியாவில் வினோதமான காடு உள்ளது. அந்த காடுகளில் பைன் மற்றும் சைப்ரஸ் போன்ற மரங்கள் காணப்படுகின்றன. இவை உருவில் ராட்சத மரங்களாக வளரக்கூடியவை. ஆனால், இங்கு பென்சாய் மரங்கள் போல குள்ளமாக காணப்படுகின்றன. எனவே இந்த காடு குள்ளக்காடு என்று அழைக்கப்படுகிறது. இதை “ பிக்மி பாரஸ்ட்” அல்லது “ எல்பின் பாரஸ்ட்” என்றும் குறிப்பிடுகிறார்கள்.
வளமற்ற மண்பகுதியில் அமைந்துள்ளதால் இங்குள்ள தாவரங்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடற்கரை பகுதிகள் மற்றும் தீவுகளில் வழக்கமாக குள்ளக்காடுகள் காணப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் கடல் மட்டம் உயர்தல் போன்ற மாற்றங்களால் இது போன்ற காடுகள் உருவாகும்.
கடல் மட்டத்தால் நிகழும் மாற்றங்களில் கடலில் இருந்து மணல் வெளித்தள்ளப்பட்டு குன்றாக குவியும். அது பரந்த மேடான நிலப்பரப்பாகவும் உருவாகும். இப்படி உருவான நிலப்பகுதி ஒரு லட்சம் ஆண்டுகள் பழமையானவையாக உள்ளன. இவை தனிப்பட்ட உயிர்ச்சூழலை கொண்டிருக்கின்றன.
இந்த மணல் மென்மையாகவும், அமிலத்தன்மை கொண்டதாகவும், தாதுக்கள் குறைந்ததாகவும் உள்ளன. இரும்புத்தாது மிகுந்த மணல்பரப்பு சிவந்த நிறமாக காணப்படுகிறது. சில இடங்களில் அதிக அலுமினியம் காணப்படுவதால் இவை வெண்மையாகவும், சுண்ணாம்பு படிவுகள் கொண்டதாகவும் காணப்படுகிறது.
மண்வளம் இப்படி தாதுக்கள் குறைந்ததாக காணப்படுவதால் தாவரங்கள் வலிமையாக வளர முடிவதில்லை. எனவே ஓங்கி உயரமாக வளரக்கூடிய மரங்கள் கூட சிறுவர்களை விட சிறிதளவே உயரம் மிகுந்ததாக வளர்கின்றன.
குள்ளக்காடுகளில் சில அரிய தாவரங்களும், பாசி இனங்களும் காணப்படுகிறது. கடினமான இந்த சூழலில் அவை வளர்வதும், பூப்பதும் வியர்பை ஏற்படுத்துவதாகும்.
தாவரவியல் நிபுணர்கள், குள்ளக்காடுகளை தாவர உலகின் பரிணாம ஆய்வகங்களாகவே கருதுகிறார்கள் அமெரிக்காவில் குள்ளக்காடுகள் உள்ள பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் செய்திகளுக்கு
https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli