Skip to content

மாட்டுச் சிறுநீரை சேகரிக்கும் சூட்சுமங்கள்!

“பால்பண்ணை வைத்துள்ளோம். இந்த ஆண்டு அடிக்கும் கடுமையான வெயிலில் மாடுகள் ரொம்பவே களைத்துவிடுகின்றன. இதைத் தவிர்ப்பதற்கு வழி சொல்லுங்கள்?”

ரா.ஞானதேசிகன், திருநெல்வேலி.

திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியின் உடற்செயலியல் துறை இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர்.எஸ்.ஈஸ்வரி பதில் சொல்கிறார்.

“தட்பவெப்பப் பருவகால நிலையில் திடீரென ஏற்படும் மாற்றங்கள், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதத்துடன் கூடிய சூழ்நிலைகள் போன்றவற்றினால், கால்நடைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். வெப்ப அயற்சியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் உடல் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு, அதிகமான மூச்சிரைப்பு ஏற்படும். தீவனம் உட்கொள்ளும் அளவும் குறைந்துவிடும். இதனால் பால் உற்பத்தியும் குறையும். அனைத்து உடல் உறுப்புகளும் சோர்வடைந்து இனவிருத்தித் திறனிலும், கன்று ஈனும் திறனிலும் பாதிப்பு ஏற்படும். வேலைத்திறனும் குறைந்துபோய், அவற்றின் ரத்தத்தில், ‘கார்டிசால்’ எனும் ஹார்மோனின் அளவு அதிகமாகவும், தைராய்டு ஹார்மோன்களின் அளவு குறைந்தும், நோய் எதிர்ப்புத் திறனின் அளவிலும் குறைபாடு காணப்படும்.

கோடை காலத்தில் சுற்றுப்புற வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது, மனிதர்களுக்குத் தோலுக்கு அடியில் உள்ள வியர்வைச் சுரப்பியில், வியர்வை சுரந்து உடலின் வெப்பநிலையைக் குறைத்துவிடும்.

ஆனால், கால்நடைகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. அவை வாய்மூலமாகவும், சுவாசிப்பதன் மூலமாகவும் காதை அசைப்பதன் மூலமாகவும்தான் உடல் வெப்பத்தைக் குறைத்துக் கொள்ளும். ஆகவே, மாடுகளுக்கு கோடை காலத்தில் நல்லவிதமாக கீற்றுக் கொட்டகை அமைத்துக் கொடுக்க வேண்டும். கொட்டகையின் அமைப்பு, தெற்கு-வடக்கு திசையில் இருக்க வேண்டும். அப்படி அமைத்தால் தான், காலை மற்றும் மாலை வேளைகளில் வெயில் கொட்டகைக்குள் வராது.

மதிய வேளைகளில் மாடுகளைக் குளிப்பாட்டலாம். இந்தச் சமயத்தில் மாடுகளுக்கு எந்நேரமும் சுத்தமான குடிநீர் கிடைக்கும்படியாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். கொட்டகையின் சுற்றுப்புறத்தைக் குளுமையாக வைக்க, சுற்றிலும் மரங்களை வளர்க்கலாம். இதனால், குளுமையான காற்று பண்ணைக்குள் வீசும். வேம்பு, சூபாபுல், கிளரிசீடியா, அகத்தி, முருங்கை, வாகை, தென்னை, எலுமிச்சை ஆகிய மரங்களை வளர்க்கலாம். கோடை காலத்தில் அதிகமாக பசுந்தீவனம் கிடைக்காது. அந்தச் சமயத்தில் இந்த மரங்களின் இலைகளைத் தீவனமாகவும் பயன்படுத்தலாம்.”

“மரச்செக்கு மூலம் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் தயாரிக்க உள்ளோம். லாபகரமாகத் தொழிலை நடத்த ஆலோசனை சொல்லுங்கள்?”

சிவசங்கர், ஈரோடு.

மரச்செக்கு முலம் எண்ணெய் எடுத்து வரும் திருப்பூர் மாவட்டம், நத்தக்காடையூரைச் சேர்ந்த சதீஷ் பதில் சொல்கிறார்.

“தற்போது பாரம்பர்ய உணவுகள் குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்து வருகிறது. இதனால், மரச்செக்குக்கும் மறுவாழ்வு கிடைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏறத்தாழ அழிவு நிலையில் இருந்த மரச்செக்கின் நன்மைகளை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.

முன்பெல்லாம் மரத்தின் மூலம் செய்யப்பட்ட செக்கில், மாடுகள் மூலம்தான் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்… போன்றவற்றை ஆட்டி வந்தார்கள்.

காலப்போக்கில், கால்நடைகள் குறைந்து போனதாலும், மரச்செக்கின் மகத்துவம் தெரியாமல் போனதாலும், இந்தத் தொழிலின் வளர்ச்சி குறைந்து போனது. மரச்செக்குகளின் இடத்தை இயந்திரங்கள் (ரோட்டரி) பிடித்துவிட்டன. ஆனால், மீண்டும் மரச்செக்குகள் வளரத் தொடங்கிவிட்டன. மாடுகளைப் பயன்படுத்தாமல், இப்போதும் கூட, சிறிய  அளவு மின்சார இயந்திரத்தைக் கீழே பொருத்தி, வாகை மரத்தில் செய்யப்பட்ட செக்கைக் கொண்டுதான் எண்ணெய் எடுக்கப்படுகிறது.

மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்போது, எண்ணெய் சூடேறாது. வாசனையும் மாறாமல் இருக்கும். நல்ல ருசியுடனும் ஒரு வருட காலத்துக்குக் கெட்டுப் போகாமலும் இருக்கும். ஒரு முறை மரச்செக்கு எண்ணெயை உணவு வகைகளில் கலந்து சாப்பிட்டு விட்டால்… அதன் ருசி காலாகாலத்துக்கும் மறக்காது. மாதந்தோறும் ஒரு குடும்பத்துக்கு 5 லிட்டர் கடலை எண்ணெய் பயன்படுத்துகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்தக் குடும்பத்துக்கு மரச்செக்கு மூலம் ஆட்டப்பட்ட எண்ணெய் 3 லிட்டர்தான் செலவாகும். காரணம், இந்த எண்ணெய் அடர்த்தியாக இருக்கும். இதனால், குறைவான எண்ணெயைப் பயன்படுத்தினாலே போதும்.

மரச்செக்கு எண்ணெய்க்கு நல்ல விற்பனை வாய்ப்புகள் உள்ளன. முதலில், வாடகைக்கு, எடுத்து மரச்செக்கு மூலம் எண்ணெயை ஆட்டி விற்பனை செய்யுங்கள். இதன் மூலம் அனுபவம் கிடைத்த பிறகு, சொந்தமாக அமைத்துக் கொள்ளலாம். விற்பனை வாய்ப்பு என்று பார்த்தால், இயற்கை அங்காடிகள், ஹோட்டல்கள், மருத்துவமனைகள்…. மரச்செக்கு எண்ணெயை விரும்பி வாங்கிக் கொள்கின்றன. சில ஹோட்டல்களில் மரச்செக்கு எண்ணெயைத்தான் பயன்படுத்துகிறோம் என்று அறிவிப்பு பலகைகூட வைத்துள்ளார்கள்.”

தொடர்புக்கு, செல்போன்:9443588224

“எங்களிடம் நிறைய பசு மாடுகள் உள்ளன. இதன் சிறுநீரைச் சேகரிப்பது சிரமமாக உள்ளது. இதற்கு எளிய வழிமுறைகள் இருந்தால், சொல்லுங்கள்?”

சேலம் மாவட்டம் ‘சுரபி கோசாலை’யைச் சேர்ந்த சுவாமி. ஆத்மானந்தா பதில் சொல்கிறார்.

“பால் கறப்பது போல, பசுவின் சிறுநீரைச் சேகரிப்பதும் ஒருவிதமான கலை என்றுதான் சொல்ல வேண்டும். அமுதக்கரைசல், ஜீவாமிர்தம், பூச்சிவிரட்டி தயாரிக்க மாட்டுச் சிறுநீர் தேவை என்றால், கட்டுத்தரையை சிறிது சாய்வாக அமைக்க வேண்டும். மாட்டின் சிறுநீர் ஓடிச் சென்று சேகரமாவதற்கு வசதியாக சிறிய வாய்க்கால் அமைத்து, சிறுநீரைச் சேகரிக்கலாம். மருந்து தயாரிக்க பசுவின் சிறுநீர் தேவை என்றால், சில கட்டுப்பாடுகள் உண்டு. அதாவது, கன்று போட்ட பசுவின் சிறுநீரில்தான் மருத்துவக் குணம் உண்டு. சினைப்பிடித்த எட்டு மாதத்துக்குப் பிரகு தொடங்கி, கன்று ஈன்ற முதல் மாதம் வரையிலும், கிடைக்கும் சிறுநீர்ப் பயன்படுத்தக் கூடாது என்பது அடிப்படையான விஷயம்.

சிறுநீரைப் பிடிக்கும்போது, முதலில் வெளிவரும் சிறுநீரையும் கடைசியில் வரும் சிறுநீரையும் விட்டு, விட்டு நடுவில் வரும் சிறுநீரை மட்டுமே சில்வர் பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும். பசுவின் சிறுநீரில் உள்ள மருத்துவக் குணங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றால், 3 நாட்களில் அதன் மூலம் மருந்து தயாரித்துவிட வேண்டும்.

வழக்கமாக மாடுகள் அதிகாலை 4 மணி முதல் 5.30 மணிக்குள் சிறுநீர் கழிக்கும். பால் கறக்கும் மாடு என்றால், மடியில் நீர் அடித்தவுடன் சிறுநீர் விடும். கலப்பின மாடுகளைவிட, நாட்டு மாடுகள்தான் லிட்டர் கணக்கில் சிறுநீர் கொடுத்து வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.”

தொடர்புக்கு, செல்போன்: 9443229061

4 thoughts on “மாட்டுச் சிறுநீரை சேகரிக்கும் சூட்சுமங்கள்!”

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj