பழத்தில் $ 1 லட்சத்து 12 ஆயிரம். . .
இலையில் $ 1 லட்சத்து 98 ஆயிரம்!
வாழைப் பழங்களில் பல ரகங்கள் இருந்தாலும் பெரும்பாலும் பூஜைக்கு பூவன் வாழையைத்தான் பயன்படுத்துவார்கள். ஆய்டு முழுவதுமே வாழைப்பழங்களுக்குத் தேவை இருந்தாலும். . . பொங்கல் சமயத்தில் பூவன் வாழைக்கு நல்ல கிராக்கி இருக்கும். அதிலும் தஞ்சவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் விளையும் பூவன் வாழைக்கு தனி மரியாதை, இப்பகுதியின் பிரத்யேக தட்பவெப்ப நிலையால் இந்த வாழை, புள்ளிகள் இல்லாமல், திரட்சியாக இருப்பதுடன் கூடுதல் சுவையும் கொண்டிருப்பது தான் கிராக்கிக்குக் காரணம்.
பொங்கல் சமயத்தில் திருவையாறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான வாழைத்தார்கள் தமிழ்நாடு முழுவதும் பயணிக்கின்றன. இப்படி பயணிக்கும் தார்களில், திருவையாறு தாலுகா, கடுவெளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜ்குமாரின் இயற்கை விவசாய வாழைத்தார்களும்
இயற்கையிலேயே விளையும்!
“மத்த பகுதிகள்ல எல்லாம் தார் விட ஆரம்பிச்ச பிறகு தான் மரம் எட்டு அடிஉயரத்தைத் தொடும். ஆனா, எங்க பகுதி பூவன் வாழை மரங்கள் தார் விடுறதுக்கு முன்னயே எட்டு அடிக்கு மேல வளர்ந்துடும்”
ஒரு மதிய வேளையில் ராஜ்குமாரைச் சந்தித்த போது, “காவிரி ஆத்தங்கரையில் இருக்கறதால நிலங்கள்ல வண்டல் நிறைஞ்சிருக்கு. அதனால் வாழை நல்லா வேர் பிடிச்சு பிறகுதான் மரம் எட்டு அடி உயரத்தைத் தொடும். ஆனா, எங்க பகுதி பூவன் வாழை மரங்கள் தார் விடுறதுக்கு முன்னயே எட்டு அடிக்கு மேல வளர்ந்துடும். இந்தப் பகுதியில் குறைவான அளவுலதான் ரசாயன உரம் பயன்படுத்துறாங்க. ஆனா, மண் வளமா இருக்குறதால இயற்கை முறையிலேயே மரம் அருமையா வளரும்” என்ற ராஜ்குமாரின் வர்த்தைகளுக்கு வலு சேர்த்தன, அவரது தோப்பில் உயர்ந்து நிற்கும் வாழை மரங்கள்.
வழி காட்டிய பசுமை விகடன்!
”2007-ம் வருஷத்திலிருந்தே ‘பசுமை விகடன்’ படிச்சுட்டு இருக்கோம். அதைப்படிக்க ஆரம்பிச்ச பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ரசாயன உரத்தைக் குறைக்கு ஆரம்பிச்சோம். இப்போ, நாலு வருஷமா முழு இயற்கை துறையில் 5 ஏக்கர்ல பூவன் வாழை சாகுபடி செஞ்சுட்டு இருக்கோம். 8 ஏக்கர்ல நெல் இருக்கு. அதை இன்னும் முழுமையா இயற்கைக்கு மாத்தல. ஆனா, சுத்தாம ரசாயன பூச்சிக்கொல்லியைக் கை விட்டுட்டோம்” என்ற ராஜ்குமார், இயற்கை முறையில் வாழை சாகுபடி செய்யும் விதங்களைச் சொன்னார். அது பாடமாக இங்கே. . .
ஏக்கருக்கு 1,000 கன்றுகள்!
‘ஏக்கருக்கு 5 டன் மாட்டு எருவை இட்டு நான்கு சால் உழவு ஓட்டி, வரிசைக்கு வரிசை, கன்றுக்கு கன்று ஆறரை அடி இடை வெளி இருக்குமாறு அரை அடி ஆழத்துக்கு குழி பறித்து வாழை விதைக்கன்றுகளை நடவு செய்யவேண்டும். இந்த இடைவெளியில ஏக்கருக்கு கிட்டதட்ட ஆயிரம் கன்றுகளை நடவு செய்யலாம். நடவு செய்த 3-ம் மாதம் ஒவ்வொரு கன்றுக்கும் அரை கிலோ வீதம் மேம்படுத்தப்பட்ட மாட்டு எரு கொடுக்க வேண்டும் (350 கிலோ மாட்டு எருவோடு தலா 50 கிலோ அசோஸ்பைரில்லம். பாஸ்போ-பாக்டீரியா, சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து தினமும் லேசான ஈரம் இருக்குமாறு தண்ணீர் தெளித்து 45 நாட்கள் வைத்திருந்தால் மேம்படுத்தப்பட்ட எரு தயார்). இதேபோல 5 மற்றும் 7-ம் மாதங்களில் தலா ஒரு கிலோ மேம்படுத்தப்பட்ட மாட்டு எரு கொடுக்க வேண்டும். இதைத் தவிர வேறு எந்த இடு பொருட்களும் கொடுக்கத் தேவையில்லை.
பூச்சி, நோய் தாக்காது!
இயற்கை முறை என்பதால், வேர்புழு, நூற்புழு, சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் வாடல் நோய் உள்ளிட்ட தொந்திரவுகளும் கூட கட்டுப்படும். தவிர்க்க முடியாமல் மட்டைக் காய்ச்சல் நோய் வந்தால். . . 3 லிட்டர் ஜீவாமிர்தத்தில் தலா 1 கிலோ டிரைக்கோ-டெர்மா, விசிடி, சூடோமேனாஸ், பாஸ்போ-பாக்டிரியா ஆகியவற்றைக் கலந்து, இக்கரைசலில் 200 லிட்டர் தண்ணீர்ல கலந்து மட்டைகளில் தெளித்தால், நோய் குணமாகி விடும். நடவு செய்த 7-ம் மாதம் தார் விடத்தொடங்கும். 8-ம் மாதம் 13 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தார்கள் மீது தெளிக்க வேணடும். இந்த அளவு 40 தார்களுக்கு சரியாக இருக்கும். தொடர்ந்து 15 நாட்கள் இடைவெளியில இரண்டு முறை தெளிக்க வேண்டும். தார் விட்ட 90 முதல் 100 நாட்கள்ல தார் முதிர்ச்சி அடைந்து அறுவடைக்குத் தயாராகி விடும்.”
ஒரு தார் 200 ரூபாய்!
சாகுபடிப்பாடம் முடித்த ராகுமார், “ஒவ்வொரு தாரும் இரண்டரை அடியில் இருந்து 4 அடி உயரம் வரை இருக்கும் ஒரு தார் சராசரியாக 18 கிலோ எடை இருக்கும். ஒரு தாருக்கு சராசரியா 200 ரூபாய் கிடைக்கும். ஓரு ஏக்கர்ல ஆயிரம் மரங்கள் வளர்த்தா, சராசரியாக 700 தார்கள் நல்ல முறையில் வளர்த்து விற்பனைக்குத் தேறும். வேலி ஓரங்கள்ல இருக்குற மரங்கள்ல தார் சுமாராகத்தான் இருக்கும். இந்த வகையில் சுமரான தரத்துல 200 தார்கள் கிடைக்கும். மொத்தமா விற்பனை செய்றப்போ. . . ஒரு ஏக்கர்ல பூவன் வாழை மூலமா 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல எல்லா செலவும் போக, 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் நிகரலாபம்.
இரண்டாம் போகத்தில் இலை மூலம் வருமானம்!
தார் அல்லது முடிச்ச பிறகு, மட்டைகளை மட்டும் நீக்கிட்டு, தாய் மரத்தின் தண்டுப்பகுதியை விட்டுடுவோம். அடுத்த போகத்துல இலை மூலமா வருமானம் எடுப்போம். ஒவ்வொரு தாய் மரத்துல இருந்தும் அஞ்சுல இருந்து ஏழு பக்கக் கன்றுகள் உருவாகும். இதுல 4 கன்றுகள் மட்டும் தராமா வளரும். அந்த கன்றுகள்ல மூணாவது மாசத்துல இருந்து இலைகளை அறுவடை செய்யலாம். ஒரு மரத்துல இருந்து மாசத்துல குறைந்தபட்சம் 2 இலைகள் கிடைக்கும். ஒரு முழு இலை 7 அடி நீளம் இருக்கும். ஒரு இலை 6 ரூபாய் அளவுக்கு விற்பனையாகும். ஒரு ஏக்கர்ல மாசத்துக்கு 4 ஆயிரம் இலைகள் கிடைக்கும். இதை விற்பனை செய்றப்போ 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அறுப்புக்கூலி உள்ளிட்ட செலவுகள் 7 ஆயிரத்து 500 ரூபாய் போக, மாசத்துக்கு நிகர லாபமாக, 16 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும். வருஷத்துக்கு 2 லட்ச ரூபாய் அளவுக்கு லாபம் கிடைச்சுடும்” என்ற ராஜ்குமார் நிறைவாக,
“இயற்கை விவசாயத்துல மரத்தின் வேரும், தண்டும் நல்லா உறுதியா திடகாத்திரமா இருக்குறதுனால, என்னதான் வேகமா காத்தடிச்சாலும் இங்க உள்ள வாழை மரங்கள் முறிவது இல்லை. இதனால் ஒரு மரத்துக்கு 55 ரூபாய் வீதம் முட்டுக்கால் கொடுக்குற செலவும் மிச்சம். இயற்கை இப்படி எனக்கு லாபத்தைக் கொடுக்குறதால, இனி நெல் சாகுபடியையும் முழுக்க இயற்கைக்கு மாத்தப்போறேன்” என்று சொல்லி விடை கொடுத்தார்.