Site icon Vivasayam | விவசாயம்

அருமையான லாபம் கொடுக்கும் ஆட்டுக்கிடா வளர்ப்பு…!

‘மாடு மறுவருஷம்… ஆடு அவ்வருஷம்’ என்று கிராமங்களில் சொல்வடை சொல்வார்கள். அதாவது மாடு வாங்கினால், அடுத்த வருஷத்தில் இருந்துதான் பலன் கிடைக்கும். ஆடு வாங்கினால், அந்த வருஷத்திலேயே பலன் கிடைக்கும் என்பதைக் குறிப்பிட்டுத்தான் இதைச் சொல்லி வைத்திருக்கிறார்கள். இதேபோல, மாட்டுச் சாணத்தை மட்க வைத்துதான் மண்ணில் இட வேண்டும். ஆட்டு எருவை அப்படியே மண்ணில் இடலாம். அதனால் மாட்டுச் சாணம் மூலம் அடுத்த ஆண்டில்தான் மகசூல் கிடைக்கும். ஆட்டு எரு மூலம் அந்த ஆண்டிலேயே மகசூல் கிடைக்கும் என்றும் விளக்கம் சொல்வார்கள். ஆக, ஆடு வளர்ப்பாக இருந்தாலும் சரி… ஆடு கொடுக்கும் இயற்கை உரமாக இருந்தாலும் சரி, உடனடி பலன் என்பது உண்மை.

இந்த உண்மையை உணர்ந்திருப்பதால்தான், பணம் கொட்டும் தொழில்களில் ஒன்றாக இருந்து வருகிறது, ஆடு வளர்ப்பு. சரியான முறையில் பராமரித்து, ஆடு வளர்ப்பில் பலரும் நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். இவர்களில் ஒருவர்தான், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகேயுள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த பரமசிவம். ஒரு காலைப் பொழுதில் பண்ணை தேடிச் சென்றபோது, ஆடுகளுக்கு அகத்திக் கீரையைக் கொடுத்துக் கொண்டிருந்தார், பரமசிவம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

வழிகாட்டிய கருத்தரங்கம்!

“விவசாயம்தான், பரம்பரைத்தொழில். பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கினதுகூட இல்லை. மானாவாரி நிலம்கிறதால, கிடைக்கிற மழையை வெச்சு, மக்காச்சோளம், பருத்தி, உளுந்துனு சாகுபடி பண்றேன். எப்பவுமே அடியுரமா ஆட்டு, மாட்டு எருவைத்தான் போடுவேன். ஆரம்பத்துல இயற்கை விவசாயம்பத்தியெல்லாம் தெரியாததால, ரசாயன உரத்தைத் தான் போட்டுக்கிட்டிருந்தேன். இப்போ, ஏழு வருசமா ‘பசுமை விகடன்’ இயற்கை விவசாயத்தைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு ரசாயன உரத்தை விட்டுட்டேன்.

அருப்புக்கோட்டைக்குப் பக்கத்துல இருக்குற கோவிலான்குளம் மண்டல ஆராய்ச்சி நிலையத்துல ஒரு பயிற்சி நடந்துச்சு. அதுல, மண்புழு உரம், அமுதக்கரைசல், பஞ்சகவ்யா தயாரிக்க முறைகளைத் தெரிஞ்சுக்கிட்டேன். அதேமையத்துல ஆடு வளர்ப்புப் பத்தி நடந்த கருத்தரங்குலயும் கலந்துக்கிட்டேன். அங்கதான் எனக்கு ஆடு வளர்ப்பு அறிமுகமாச்சு. தொடர்ந்து, பசுமை விகடன்ல வந்த செய்திகளையும் படுச்சு, ஆடு வளர்ப்பைப் பத்தி முழுமையா தெரிஞ்சுக்கிட்டு அஞ்சு வருஷமா ஆடு வளர்த்துக் கிட்டிருக்கேன்” என்று முன்னுரை கொடுத்த பரமசிவம், தொடர்ந்தார்.

செவலை, கருப்பு ஆடுகளுக்கு கிராக்கி!

 “ஆரம்பத்துல 20 ஆடுகளை வாங்கிட்டு வந்தேன். பசுந்தீவனம், உலர்தீவனம்னு கொடுத்தும் எடை வரவே இல்ல. ஆடுகளை விக்கிறப்பவும் வியாபாரிகள் கிட்ட நிறைய ஏமாந்தேன். அதுக்கப்பறம் நானே சந்தைக்குப் போக ஆரம்பிச்சேன். அப்பதான், ஆடுகளை வாங்கறது, விக்கிறதுல இருக்குற நடைமுறை விஷயங்களைக் கத்துக்கிட்டேன். எப்படி ஆடுகளைத் தேர்வு செய்றது, எந்த சமயத்துல ஆடுகளுக்கு அதிக விலை கிடைக்குங்கிறது மாதிரியான வி9ஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டு, ஆடுகளை வளர்க்க ஆரம்பிச்சேன்.

இரண்டு முறைகள்ல ஆடு வளர்க்கலாம். தாய் ஆடுகளை வாங்கிட்டு வந்து இனப்பெருக்கம் செஞ்சு குட்டிகளை விக்கிறது ஒரு முறை. கிடாக்களை வாங்கிட்டு வந்து வளர்த்து விக்கிறது, இன்னொரு முறை. நான் கிடாக்களை வாங்கி வளர்த்து வித்துட்டு இருக்கேன் இதுல கொஞ்சம் அலைச்சல் அதிகம். ஆனா, குறைவான பராமரிப்புல நல்ல வருமானம் பாக்கலாம். ஒவ்வொரு முறையும் சந்தையில 50 கிடாக்களை வாங்கிட்டு வந்து, மூணு மாசம் வளர்த்து வித்துட்டிருக்கேன். 25 சென்ட்ல சூபாபுல், 20 சென்ட்ல வேலிமசால் பயிர் பண்ணியிருக்கேன். இதைத்தான் பசுந்தீவனமா கொடுத்துட்டு இருக்கேன். தென் மாவட்டங்கள்ல ஆடுகளை பலி கொடுக்குற கோவில்கள் அதிகமாக இருக்கறதால, பெட்டை ஆடுகளைவிட கிடாக்களுக்குத்தாம் அதிககிராக்கி. பலி போடுறதுக்கு கருப்பு, சுத்த செவலை நிற ஆடுகளைத்தான் அதிகமாக வாங்குவாங்க. அதனால அந்த மாதிரி ஆடுகளாத்தான் வளர்க்குறேன்” என்ற பரமசிவம் ஆடு வளர்ப்பு முறை அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டார்.

கொட்டகையே போதும்!

 “கிடாக்களை  வளர்க்க பரண் முறை தேவையில்லை. வேலையாட்களும் அதிகமாகத் தேவையில்லை. சாதாரண கொட்டகையில அடைத்து, நேரத்துக்கு தீவனம், தண்ணீர் கொடுத்து, மூன்று மாதங்கள் பராமரித்தால் போதும். கொட்டகைக்கும் அதிக செலவில்லாமல், தென்னை மட்டை, தகரம் ஆகியவை மூலமாக அமைத்தாலே போதுமானது.

புதிய ஆடுகள் கவனம்!

புதிதாக வாங்கி வரும் ஆடுகளை, ஏற்கனவே பண்ணையில் இருக்கும் ஆடுகளோடு சேர்த்து அடைக்கக்கூடாது. அவற்றுக்கு ஏதேனும் நோய் இருந்தால் பண்ணையில் உள்ள ஆடுகளுக்கும் தொற்ற வாய்ப்புண்டு. புது ஆடுகளை நன்றாகக் குளிப்பாட்டி, பருத்தித் துணியால் மூக்குகளை சுத்தப்படுத்த வேண்டும். தேவையான தடுப்பூசி, மருந்துகளைக் கொடுத்து ஒரு வாரம் வரை தனிக்கொட்டகையில் வைத்திருக்க வேண்டும். பிறகு தான் பண்ணை ஆடுகளுடன்விட வேண்டும்.

கொட்டகை சுத்த அவசியம்!

கொட்டகை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். கால்நடைத்துறை மூலம் வழங்கப்படும் தாது உப்புக் கட்டிகளை கொட்டகையில தொங்கவிட வேண்டும். தேவைப்படும் ஆடுகள் இதை நக்கிக்கொள்ளும். கோடைக்காலத்தில் ஒரு ஆட்டுக்கு சராசரியாக 5 லிட்டர் தண்ணீரும், குளிர்காலத்தில் அரை லிட்டர் தண்ணீரும் தேவை. பசுந்தீவனங்களை தரையில் போடானல், கட்டித் தொங்க விட்டால் வீணாகாது. மக்காச்சோளம், கம்பு, கோதுமை கலந்த அடர்தீவனத்தையும் தண்ணீரில் பிசைந்து, தினமும் கொடுக்க வேண்டும். இப்படி மூன்று மாதங்கள் வரை வளர்த்து, எடை வந்த பிறகு, உடனே விற்பனை செய்யலாம்.

சுழற்சி முறையில் நல்ல லாபம்!

நிறைவாக வருமானம் பற்றிப் பேசிய பரமசிவம், “30 கிலோ எடை இருக்குற கிடாக்களை, உயிர் எடையா கிலோ 250 ரூபாய் விலைக்கு வாங்கிட்டு வருவேன். ஒரு ஆடு, 7 ஆயிரத்து 500 ரூபாய் விலை ஆகும். நல்ல தீவனம் கொடுத்து மூணு மாசம் வளர்த்தா, 45 கிலோ வரை எடை வரும். ‘கொழுகொழு’னு வந்ததும், உயிர் எடைக்கு கிலோ 250 ரூபாய்ல இருந்து 300 ரூபாய் வரைக்கும் வித்துடுவேன். சந்தைக்குக் கொண்டு போனா விலை குறைவாத்தான் போகும். ஆனா, பண்ணைக்குத் தேடி வர்றவங்ககிட்ட நல்ல விலை கிடைக்கும். குறைஞ்ச விலையா கிலோவுக்கு 250 ரூபாய்னு வெச்சுக்கிட்டாலும், 45 கிலோ ஆட்டுக்கு 11 ஆயிரத்து 250 ரூபாய் கிடைக்கும். இதுல, மூணு மாசத்துக்கு ஒரு ஆட்டுக்கு  தீவனம், மருந்துக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். கொள்முதல் விலை, செலவு எல்லாம் சேர்த்து ஆயிரத்து 500 ரூபாய் போனாலும் ஒரு ஆடு மூலமா மூணு மாசத்துல, 1750 ரூபாய் லாபம் கிடைக்கும். ஒரு தடவைக்கு 50 ஆடுகள்னு வாங்கி வளக்குறப்போ, கணிசமான அளவுல லாபம் பாக்காலாம். தொடர்ந்து சுழற்சி முறையில வளர்த்தா, கூடுதல் லாபம் கிடைக்கும்” என்ற பரமசிவத்துக்கு 2013-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் ‘சிறந்த ஆடு வளர்ப்பு விவசாயி’ விருது கிடைத்திருக்கிறது.

“ஆடு வளர்ப்பு விருது வாங்க டெல்லி போய், மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் கையால வாங்கினேன். டிரெயின்லகூட போகாத என்னை, ஏரோ பிளேன்ல போக வெச்சது இந்த ஆடுகள்தான்” என்று பெருமையோடு  சொன்னார்.

மேலும், சில தகவல்கள் அவர் கூறியது…….

எந்த நிற ஆடுகள் எந்த மாதத்தில் அதிகம் விற்பனையாகும்!

மாதம்                நிறம்

சித்திரை, வைகாசி    கறுப்பு

ஆனி, ஆடி           கரும்போர், செவலைப்போர்

ஆவணி, புரட்டாசி     கன்னி

மாசி, பங்குனி        நாட்டு ரகம்

கொட்டகை கவனம்!

கொட்டகையை, காலை, மாலை இரண்டு வேளைகளும் சுத்தம் செய்ய வேண்டும்.

                ********************************

ஒவ்வொரு முறையும் தீவனத்தட்டுகளை கழுவி, சுத்தம் செய்துவிட வேண்டும்.

                ********************************

குடிக்க வைக்கும் தண்ணீரை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

டயர் தட்டு!

பழைய லாரி டயர்களை பாதியாக வெட்டி, நன்றாகக் கழுவி காய வைத்து, தீவனம்வைக்கும் பாத்திரமாகப் பயன்படுத்துகிறார், பரமசிவம். இதன்மூலம், தீவனம் வீணாவது தடுக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை வைக்கும்  தீவனத்தையும் ஆடுகள் சாப்பிட்ட பிறகு கழுவிவிட்டால், நோய்த் தொற்றுகள் இருக்காது. டயர் என்பதால், ஆடுகள் முண்டியடிக்காமல் வட்டமாக நின்று சாப்பிட வசதியாக இருக்கிறது.

எந்த ஊருக்கு எந்த நிறம்!

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், கோயிலில் பலி கொடுக்க வெள்ளை தவிர்த்து, மற்ற நிற கிடாக்களை வாங்குகிறார்கள். திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சுத்த கருப்பு கிடாக்களை விரும்புகிறார்கள். இதற்கு அதிக விலை கொடுக்கவும் தயங்குவதில்லை. திருநெல்வெலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், உடம்பு  கருப்பாகவும், அடிப்பகுதி வெள்ளையாகவும், முகத்தில் நாமம் இருக்கும் கன்னி ரக ஆடுகளை அதிகம் விரும்புகிறார்கள்.

அடர்தீவனம்!

மக்காச்சோளம்-40 கிலோ, கோதுமை-30 கிலோ, கம்பு-30 கிலோ ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அரைத்துக் கொண்டால், 100 கிலோ தீவனம் கிடைக்கும். இதனுடன் 100 கிலோ பருத்திக்கொட்டை, 100 கிலோ சிவப்புச்சோளம் ஆகியவற்றையும் கலந்து, அடர்தீவனமாகக் கொடுக்கலாம். இந்த அடர்தீவனத்தை அதிக நாட்கள் இருப்பு வைத்தால், பூச்சி, வண்டுகள் வர வாய்ப்பு உண்டு. அதனால், தேவையான அளவுக்கு மட்டும் தயாரிப்பது நல்லது.

புதிய ஆடுகள் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை!

தோல் ரப்பர் போல இருக்க வேண்டும். கடினமாக இருந்தால் எடை கூடாது.

                     ******************

கால்கள் திரட்சியாக இருக்க வேண்டும்.

                     *******************

ஒரே ஈத்தில் இரண்டு குட்டிகளுக்கு மேல் பிறந்திருந்தால், அந்தக் குட்டிகளை வாங்கக் கூடாது.

                     *******************

கொம்பு ஆங்கில ‘வி’ வடிவில் இருக்க வேண்டும்.

மாதம் 5 கிலோ எடை அதிகரிக்க, தீவனப் பட்டியல்! (ஒரு ஆட்டுக்கு)

காலை 9 மணி     –       காய்ந்த விதை நீக்கப்பட்ட கொத்தவரைப்

                           பொட்டுகள் அரை கிலோ + தண்ணீர்

காலை 11 மணி     –      வேலிமசால் அரை கிலோ

மதியம் 3 மணி      –      மக்காச்சோளம், கோதுமை, கம்பு கலந்த

                           கலவை 250 கிராம் + தண்ணீர்

மாலை 5 மணி      –      சூபாபுல் அரை கிலோ

மாலை 7 மணி      –           பருத்திக்கொட்டை, சிவப்புச் சோளம் 250 கிராம்

தொடர்புக்கு,

பரமசிவம்,

செல்போன்: 97879-82183.

நன்றி

பசுமை விகடன்

Exit mobile version