விற்பனைக்கு வழிகாட்டும் வேளாண் பல்கலைக்கழகம்!
பருவகால மாறுபாடுகள், ஆட்கள் பிரச்சனை, தண்ணீர்த் தட்டுப்பாடு எனப் பலவிதமான பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும், ஓயாது உழைத்து உற்பத்திச் செய்வதைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் விவசாயிகள். ஆனால் எந்தப் பட்டத்தில் எந்தப் பயிரை விதைத்தால், நல்ல விலை கிடைக்கும் என்பது தெரியாமல்தான் பலர் தவிக்கிறார்கள். இதற்காகவே, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், மாதம்தோறும் பலவகையான பயிர்களுக்கு முன்னறிவிப்பை வெளியிட்டு, விவசாயிகள் லாபமீட்டுவதற்கு வழிகாட்டி வருகிறது.
“தமிழ்நாட்டில் விளையும் முக்கியமான பயிர்களுக்கு எந்த மாதத்தில் அதிக விலை கிடைக்கும்? எந்தச் சந்தையை அடிப்படையாகக் கொண்டு விளைபொருட்களின் விலையைத் தெரிந்து கொள்ளலாம்?” என்பது பற்றியெல்லாம் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைத் தகவல் மையத்தின் பேராசிரியர் அஜயனிடம் கேட்டபோது,
“எங்கள் மையம், 2004-ம் ஆண்டு துவங்கப்பட்டது. 2009-ன் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு 25 வகையான பயிர்களுக்கு விலை முன்னறிவிப்பு வழங்கி வருகிறது. இங்கிருக்கும் வல்லுநர்கள், அந்தந்த மாதங்களில் வெளியிட வேண்டிய முன்னறிவிப்புக்காக… தமிழகத்தில் மிகவும் நல்லமுறையில் இயங்கிவரும் குறிப்பிட்ட சில ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களின் விலைகள், சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட விலைகள் போன்றவற்றை ஆய்வுசெய்வதுடன், பல ஆண்டுகளாக வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடமும் பேசி போதுமான தகவல்களைத் திரட்டுகின்றனர். அவற்றை அடிப்படையாக வைத்து, முன்னறிவிப்பு வெளியிடுகிறோம். எங்களுடைய முன்னறிவிப்பில்… தக்காளி, வெண்டை மாதிரியான காய்கறிப் பயிர்கள் 80 சதவிகிதமும், மற்ற பயிர்களில் 90 சதவிகிதமும், கணிப்பு சரியாக இருந்திருக்கிறது” என்ற அஜயன்,
“அதிகபட்ச விலை கிடைக்கும் காலம் என்று நாங்கள் கணித்திருக்கும் மாதங்களில், அறுவடைக்கு வருவது போல, திட்டமிட்டு சரியான நேரத்தில் விதைத்தால், நல்ல லாபம் கிடைக்கும். மேலும், சந்தேகங்கள் இருந்தால், எங்கள் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்” என்றார்.
தமிழகம் தழுவிய அளவில் விளைபொருட்களுக்கான விற்பனை விலையை முக்கிய விற்பனைக்கூடங்கள்/ சந்தைகள், அதிகபட்ச விலை கிடைக்கும் காலம், உற்பத்திப் பொருட்களுக்கான தரம் ஆகியவை பற்றி உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிச் சந்தைத் தகவல் மைய பேராசிரியர் அஜயன் தந்த தகவல்கள் இங்கே பட்டியலாகத் தரப்பட்டுள்ளன…உங்களின் வசதிக்காக.
பயிர் | ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்/சந்தைகள் தொடர்பு எண்கள் | நிபந்தனைகள் | அதிகபட்ச விலை கிடைக்கும் காலம் |
மக்காச்சோளம் | உடுமலைப்பேட்டை04252-223138 | 12 சதவிகிதத்துக்கு குறைவான ஈரப்பதம், நல்ல நிறம், வண்டு மற்றும் பூஞ்சணத்தாக்குதல் இருக்கக் கூடாது | பிப்ரவரி மற்றும் ஜீன் முதல் செப்டம்பர் வரை |
கொண்டைக்கடலை | உடுமலைப்பேட்டை04252-223138 | நல்ல தரம் மற்றும் நிறம். பூச்சித்தாக்குதல் இருக்கக் கூடாது | ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை |
சோளம் | திருப்பூர்0421-2212141 | நல்ல தரம்(கல், மண் நீக்கம் செய்யப்பட்டது), ஒன்பது சதவிகிதத்துக்கு குறைவான ஈரப்பதம் | பிப்ரவரி முதல் ஏப்ரல் மற்றும் ஜீலை முதல் செப்டம்பர் வரை |
உளுந்து | விழுப்புரம்04146-222075 | திரட்சியான, நல்ல நிறமான, பூச்சித் தாக்குதல் இல்லாதது | மார்ச் முதல் ஏப்ரல் வரை. ஜனவரி, பிரவரி மற்றும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் |
பச்சைப்பயறு மற்றும் கம்பு | விழுப்புரம்04146-222075 | திரட்சியான, நல்ல நிறமான, பூச்சித் தாக்குதல் இல்லாதது | பிப்ரவரி, ஜீன், ஜீலை |
கேழ்வரகு | திண்டிவனம்04147-222019 | தரமான கேழ்வரகு | ஏப்ரல் மற்றும் நவம்பர் |
கடலை | சேவூர்04296-2287255 | தோலின் நிறம், பருமன், எண்ணெய் அளவுகள் ஆகியவற்றைப் பொருத்து விஅலி நிர்ணயிக்கப்படும்.(கடலை மிட்டாய், எண்ணெய் தேவைகளுக்காக வியாபாரிகள் நிலக்கடலைப் பருப்புகளைக் கொள்முதல் செய்கின்றனர். திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கடலைப்பருப்புகள் விற்பனை செய்யப்பட்டாலும், சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்தான் விலை யூகம் செய்ய சிறந்த இடம்) | ஜீன், ஜீலை |
எள் | சிவகிரி04204-240380 | 7 சதவிகிதத்துக்கும் குறைவான ஈரப்பதம், நல்ல நிறம், தரம் | டிசம்பர் மற்றும் மார்ச் |
பருத்தி | கொங்கணாபுரம்04283-265562 | கல் தூசி இல்லாத, நீளமான நூலிழைகள் கொண்டு, விலை நிர்ணயம் செய்யப்படும். | பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை |
தேங்காய் | பொள்ளாச்சி04259-226032 | 500 முதல் 550 கிராம் எடையுள்ள தேங்காய்களுக்கு நல்ல விலை கிடைக்கும் | அக்டோபர் மற்றும் ஏப்ரல் |
கொப்பரை | அவல்பூந்துறை0142-231279 | எண்ணெயின் அளவு, சுருக்கங்கள் அற்ற உட்புறம், வெண்மை நிறம், பூஞ்சணத்தாக்குதல் அற்ற உலர்ந்தப் பருப்பு | ஏப்ரல் மற்றும் அக்டோபர் |
சூரியகாந்தி | வெள்ளக்கோவில்04257-260504 | 5 சதவிகித ஈரப்பதத்துடம், தரமான முதிர்ச்சியடைந்த விதைகள் | ஜீன் முதல் ஆகஸ்ட் வரை |
மஞ்சள் | ஈரோடு0424-2212113 | தரமான, நல்ல நிறத்தில் பூச்சித்தாக்குதல் இல்லாத மஞ்சள் | அக்டோபர், ஜனவரி |
கொத்தமல்லி(தனியா) | விருதுநகர்04562-245038 | பொன்னிறமாக அறுவடை செய்யப்படும் கொத்தமல்லிக்கு நல்ல விலை கிடைக்கும் | ஆகஸ்ட் முதல் அக்டோப்ர் வரை |
மிளகாய் | விருதுநகர் | செப்டம்பர், மார்ச் | |
உருளைக்கிழங்கு | மேட்டுப்பாளையம்(நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம்)04254-222537 | நல்ல மஞ்சள் நிறத்தோல் மற்றும் கடினத்தன்மை | மே முதல் ஜீலை வரை |
கேரட் | மேட்டுப்பாளையம் | நல்ல நிறம் மற்றும் பளபளப்புத் தன்மை | ஜீலை முதல் நவம்பர் வரை |
பீட்ரூட் | மேட்டுப்பாளையம் | நல்ல நிறம் மற்றும் பளபளப்புத் தன்மை | ஜீலை முதல் நவம்பர் வரையிலும் அதிகப்பட்ச விலை கிடைக்கும். |
சின்னவெங்காயம் | திண்டுக்கல்0451-2400959 | 20 முதல் 25 சென்டிமீட்டர் விட்டம் மற்றும் காரத்தன்மை ஆகிய அளவீடுகளை வைத்து விலை நிர்ணயிக்கப்படும். | செப்டம்பர் முதல் டிசம்பர் வரை |
தக்காளி | ஒட்டன்சத்திரம்04553-240358 | அடர்ந்த சிவப்பு நிறம் மற்றும் பளபளப்புத் தன்மை | மார்ச், ஏப்ரல் மற்றும் நவம்பர், டிசம்பர் |
கத்திரி | ஒட்டன்சத்திரம்04553-240358 | நல்ல நிறம் மற்றும் பளபளப்புத்தன்மை | அக்டோபர் முதல் டிசம்பர் வரை |
வெண்டை | ஒட்டன்சத்திரம்04553-240358 | இளம் பச்சை நிறம், காயின் அளவு மற்றும் பளபளப்புத்தன்மை | ஜனவரி, பிப்ரவரி மற்றும் அக்டோபர், நவம்பர் |
மரவள்ளிக் கிழங்கு | சேலம்0427-2331233 | மாவுப்பொருட்களின் அளவு 28 சதவிகிதத்துக்கு மேல் இருந்தது, நல்ல வடிவம் கொண்ட கிழங்குகள் | செப்டம்பர் முதல் நவம்பர் வரை |
பூவன் மற்றும் நேந்திரன் உள்ளிட்ட வாழை ரகங்கள் | கோயம்புத்தூர்0422-2312477 | மஞ்சள் நிறம், முதிர்ச்சியுடன் விரிசல் இல்லாமல் இருக்கவேண்டும். | பிப்ரவரி முதல் மே வரை மற்றும் செப்டம்பர் |
நன்றி
பசுமை விகடன்