Vivasayam | விவசாயம்

ஒரே நிலத்தில் மூன்று வகை விவசாயம்; பூவந்தி விவசாயி புதிய முயற்சி

பூவந்தி: பூவந்தி அருகே விவசாயி ஒருவர் ஒரே நிலத்தில் மூன்று வகை பயிர்களை சாகுபடி செய்து லாபம் ஈட்ட புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார். பூவந்தி அருகே கட்டையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அய்யாவு. தனது நிலத்தில் வாழை பயிரிட்டு வந்தார். நாள் முழுவதும் வாழைக்கு தண்ணீர் வேண்டும், சாகுபடி நேரம் அதிகமாவதுடன் தண்ணீரின் தேவையும் அதிகமாகி வந்தது. இதனை குறைக்க சீசனுக்கு ஏற்றவாறு தர்ப்பூசணி செடியை பயிரிட்டுள்ளார். மூன்று மாத கால பயிரான தர்ப்பூசணி செடி நிழலில் அதிக எடையுடன் வளரும் என்பதால் நிழலுக்காக சூரியகாந்தி செடியை பயிரிட்டுள்ளார். சூரிய காந்தியும் மூன்று மாத கால பயிர் என்பதால் ஒரே நேரத்தில் மூன்று வித பயிரில் இருந்து லாபம் கிடைக்கும் என நம்புகிறார். தற்போது சூரியகாந்தியும் நன்கு விளைந்து ஒரு பூ அரை கிலோ எடை அளவில் வளர்ந்துள்ளது. சூரியகாந்தி பெரும்பாலும் ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் பகுதிகளில் தான் விளையும். முதன் முறையாக வறட்சி மாவட்டமான சிவகங்கை பூவந்தி பகுதியில் விளைந்துள்ளதால் பூவந்தியை சுற்றியுள்ள அரசனூர், கிளாதரி, திருமாஞ்சோலை, பூஞ்சுத்தி பகுதி விவசாயிகள் சூரியகாந்தி, தர்ப்பூசணி, வாழை பயிரிட முடிவு செய்துள்ளனர். அய்யாவு கூறும் போது, ஒட்டன்சத்திரத்தில் கிலோ 500ரூபாய் என விதை வாங்கி ஒரு ஏக்கரில் சூரியகாந்தி நடவு செய்துள்ளேன். வாழை 12 மாத பயிர், ஆனால் சூரியகாந்தி, தர்ப்பூசணி மூன்று மாத காலப்பயிர் என்பதால் வாழை விளைச்சலுக்கு வருவதற்குள் நான்கு முறை தர்ப்பூசணி, சூரியகாந்தியை அறுவடை செய்துவிடலாம், என்றார். யாருடைய ஆலோசனையும் இன்றி ஒரு புதிய முயற்சியாக இதனை செய்து வருகிறார் அய்யாவு.

Untitled-1

************************* Thanks to www.dinamalar.com ************************

Exit mobile version