விவசாய கடன் திட்டங்களால் யாருக்கு நன்மை என்பது குறித்து ஆராய வேண்டும் என, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், அண்மையில் கருத்து தெரிவித்த நிலையில், கடன் தள்ளுபடி திட்டங்களை கைவிட வேண்டும் என, வங்கிகளும் ஒருமித்த குரலெழுப்பியுள்ளன.
புனேயில் நடைபெற்ற வங்கிகள் மாநாட்டில், வங்கித் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, மத்திய அரசுக்கு பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டன.குறிப்பாக, வங்கித் துறை வளர்ச்சிக்கு, தடையாக உள்ள விவசாய கடன் தள்ளுபடி திட்டங்கள் குறித்து, மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும், 3 லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடன்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட வட்டி வரம்பை நீக்க வேண்டும் எனவும், கோரிக்கை விடுக்கப்பட்டது. நில ஆவணங்கள் உட்பட, 30 முக்கிய துறைகளை கணினிமயமாக்கினால், போலி ஆவணங்கள் மூலம் நடைபெறும் மோசடிகளை தடுக்கலாம் என, வங்கி தலைவர்கள் தெரிவித்தனர்.
இத்துடன், வங்கி பரிவர்த்தனைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மொபைல்போன் வாயிலான வங்கிச் சேவையை விரிவுபடுத்தவும், தகவல் வங்கிக்கான, கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தவும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வங்கிகள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
*முந்தைய ஐ.மு., அரசின், 2008ம் ஆண்டு, வேளாண் கடன் தள்ளுபடி திட்டத்தில், 3.69 கோடி சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளும், 60 லட்சம் இதர விவசாயிகளும், 52,516 கோடி ரூபாய் மானியம் பெற்றனர்.
*இதில், மிகப் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது; அரசின் கடன் தள்ளுபடி, பாதிக்கப்பட்டோருக்கு கிடைக்காமல், தகுதியற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது என, மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.