குறுகிய காலப் பயிராகவும், அதிக லாபம் ஈட்டும் பயிராகவும் உள்ள மக்காச்சோளத்தைப் பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என திரூர் நெல் வேளாண்மை அறிவியல் நிலையத்தினர் தெரிவித்தனர்.
விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற 100 முதல் 105 நாள்களில் மகத்தான மகசூலையும் வருவாயையும் ஈட்டித் தரும் மக்காச்சோளத்தை சாகுபடி செய்யலாம்.
இதுகுறித்து வேளாண் அறிவியல் நிலைய அதிகாரிகள் தெரிவித்த தகவல்கள்:
பயிரிடும் காலம்: குறுகிய காலப் பயிரான மக்காச்சோளத்தில் கோ ஹெச் (எம்) 5 வீரிய ஒட்டு ரகங்களைப் பயிரிடலாம். இதை டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை பயிரிடலாம்.
சிறப்புகள்: அதிக மகசூல் தரும் ஒட்டு ரகங்கள், அடிச் சாம்பல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. தண்டு துளைப்பான் பூச்சித் தாக்குதலுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. பெரிய மஞ்சள் நிற தானியம். 68.7 சதவீத மாவுச் சத்து, 8.23 புரதச் சத்து உடையது. விதை உற்பத்தி செய்வது எளிது.
உரமிடுதல், பயிர் பாதுகாப்பு முறைகள்: மண்ணின் வளத்தை மேம்படுத்த ஏக்கருக்கு 5 டன் தொழு உரமிட வேண்டும். பொதுப் பரிந்துரையான 54 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல் சத்து தரவல்ல உரங்களை இட வேண்டும்.
30 கிலோ யூரியா, 156 கிலோ சூப்பர் பாஸ்பேட், 33 கிலோ பொட்டாஷ் உரங்களை
அடியுரமாக இட வேண்டும். நுண்ணூட்டச் சத்துப் பற்றாக்குறையைத் தவிர்க்க ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணூட்ட உரக் கலவையை 20 கிலோ மணலுடன் கலந்து விதைகளை ஊன்றுவதற்கு முன் மேலுரமாக இட வேண்டும். மண்ணின் தன்மைக்கு ஏற்றாற் போல் 10 முதல் 12 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் விட வேண்டும்.
குருத்துப்புழு, சாம்பல் வண்டைக் கட்டுப்படுத்த எண்டோசல்பான் 4டி அல்லது பாசலோன் 4 கிலோ தூளை 16 கிலோ மணலுடன் கலந்து இலையும்,
தண்டுப் பகுதியும் சேரும் இடங்களில் உள்ள இடைவெளியில் இடவேண்டும்.
விதைமூலம் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்திட ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து 24 மணிநேரம் கழித்து தலா ஒரு பாக்கெட் அசோஸ்பரில்லம், பாஸ்போ பாக்டீரியா உயிர் உரங்களை ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்த வேண்டும். பின்னர் அந்த விதையை விதைப்பு செய்ய வேண்டும்.
அறுவடை முறை: மக்காச்சோளக் கதிரின் மூடிய உறை மஞ்சளாகவும், விதைகள் சற்று கடினமாகவும் மாறிய பின் கதிரை மட்டும் தனியாக அறுவடை செய்ய வேண்டும்.
மக்காச்சோளத் தட்டையை காயவிடாமல் பச்சையாக அறுவடை செய்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தலாம்.
ஏக்கருக்கு இறவையில் 2 ஆயிரத்து 500 கிலோ முதல் மூவாயிரம் கிலோ வரை மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.6 முதல் 10 வரை விற்பனை செய்யலாம். அதன் மூலம் ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை லாபம் ஈட்ட முடியும்.
ஒவ்வொரு மண்ணின் தன்மைக்கு ஏற்ப பயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். எனவே இதுகுறித்த மேலும் சந்தேகங்களுக்கு அந்தந்தப் பகுதியில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தை அணுகலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
************************Thanks to www.dinamani.com ***********************
makka solam payeridum murai ple fast ans