நடப்பு 2014-2015ம் ஆண்டிற்கு தருமபுரி மாவட்டத்தில் பயறுவகை பயிர்கள் சுமார் 800 எக்டர் பரப்பில் விதைப்பண்ணை அமைத்து 400 மெ.டன் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலமாக தராமான சான்று பெற்ற விதை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பயறு வகை பயிர்களான துவரை, உளுந்து, பாசிப்பயறு மற்றும் தட்டைப்பயறு ஆகிய பயிர்களில் தருமபுரி மாவட்டத்தில் இது நாள் வரை 556 ஏக்கரில் விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
தற்சமயம், இப்பயிர்கள் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் உள்ளது. விதைப்பயிர்களில் தரமான சான்று விதியினை உற்பத்தி செய்ய,கீழ் காணும் தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
துவரையில் நுனி கிள்ளுதல் :
நாற்று விட்டு நடவு செய்த துவரை விதைப்பயிகளில் நட்ட 20-25 நாட்களில் நுனி கிள்ளிவிட வேண்டும். அவ்வாறு நுனி கிள்ளும் பட்சத்தில் பக்க கிளைகள் அதிக அளவில் கிளைத்து , அதிக மகசூல் பெற ஏதுவாகும்.
இலைவழி நுண்ணுட்டம் :-
பயறுவகை பயிர்களில் பூக்கும் தருணத்தில் உள்ள அனைத்து விதைப்பயிர்களுக்கும் இலைவழி நுண்ணூட்டமாக ஒரு லிட்டர் தண்ணீரில் DAP 20 கிராம் அல்லது யூரியா 20 கிராம் கலந்து பூக்கும் தருணத்தில் ஒருமுறையும், 15 நாட்கள் கழித்து மறு முறையும் தெளிக்க வேண்டும்.
கலவன் அகற்றுதல்:
அமைக்கப்பட்டுள்ள பயறு வகை விதைப்பண்ணைகளில் வயலாய்வின்போது விதைச்சான்று அலுவலர்களால் அல்லது வட்டார உதவி அலுவலர்களால் சுட்டிக்காட்டப்படும் பிற ரக கலப்பு செடிகள் அகற்ற வேண்டும்.
விதைப்பண்ணைகளில் கலவன் செடிகள் அகற்றும் பணி மிக முக்கியமான பணியாகும். விதைப்பயிர்களில் கலவன் அதிகமாக இருக்கும் பட்சத்தில், விதைப்பயிரின் இனத்தூய்மை பாதிக்கப்படும். அதனால் விதைப்பயிர் தள்ளுபடி செய்ய நேரிடும். எனவே, உரிய பருவத்தில் பிற ரக கலப்பு பயிர்களை அகற்ற வேண்டும்.
மேலும், தற்சமயம் நல்ல மழை பெறப்பட்டுள்ளதாலும், கொள்ளு, கொண்டை கடலை பயிர்களை விதைக்க ஏற்ற தருணமாக உள்ளதாலும், பயறுவகை பயிர்களில் தரமான சான்று விதைகள் கொள்முதல் செய்ய உள்ளூர் அங்காடி விலையுடன், ஊக்கத்தொகை மற்றும் கூடுதலாக மத்திய, மாநில அரசு மூலம் உற்பத்தி மான்யம் கிலோவிற்கு ரூ. 15 ம் வழங்கி கொள்முதல் செய்யவிருப்பதாலும், தரமான சான்று பெற்ற பயறு விதை உற்பத்தியில் மேற்காணும் தொழில்நுட்பங்களை கடைபிடிக்க வேண்டும்.
நன்றி
வேளாண்மை உதவி இயக்குநர்
தருமபுரி