உரங்களின் வகைகள் | தழை | மணி | சாம்பல் |
மொத்த சிபாரிசு | 60 | 20 | 20 |
அடியுரம் | 30 | 20 | 10 |
முதல் மேலுரம் 21-வது நாள் | 10 | – | 5 |
2-ம் மேலுரம் கதிர் உருவாகும் பருவம் | 10 | – | – |
3-ம் மேலுரம் | 10 | – | 5 |
வெள்ளைப்பொன்னி மற்றும் பையூர் 1 இரகங்களுக்கு தழை, மணி, சாம்பல் சத்தான 30:20:20 கிலோவை தழை மற்றும் சாம்பல் சத்தை 3 சம பங்குகளாக பிரித்து தூர்கட்டும், கதிர் உருவாகும் மற்றும் கதிர் வெளிவரும் சமயங்களில் இட வேண்டும். முழு அளவு மணிசத்தை அடியுரமாக இட வேண்டும்.
ஜிங்க் சல்பேட் இடல்:-
நடவு வயலில் நன்கு சமன் செய்து நடவிற்கு முன் களர் நிலமாக இருந்தால் ஏக்கருக்கு 16 கிலோ ஜிங்க் சல்பேட்டும் மற்ற நிலங்களுக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட்டும் 20 கிலோ மணலுடன் கலந்து சீராக தூவவும். ஜிங்க் பற்றாகுறையினை நீக்க இலைவழி நுண்ணூட்டமாக 0.5 சதம் ஜிங்க் சல்பேட் கரைசல் மற்றும் ஒரு சதம் யூரியா கரைசலினை தெளிக்க வேண்டும்.
உயிர் உரம் இடல்:-
நாற்று பறித்தவுடன் இரண்டு பொட்டலம் அசோஸ்பைரில்லம் மற்றும் இரண்டு பொட்டலம் பாஸ்போபாக்டீரியாவினை 10 கிலோ மக்கிய தொழுவுரத்துடன் கலந்து நாற்றங்காலில் குழப்பறித்து இடவும். நடுவதற்கு முன் வேர்கள் நன்கு உயிர் உர கரைசலில் 3 நிமிடம் நனையும்படி பார்த்துக் கொள்ளவும். ஒரு ஏக்கருக்கு 4 பொட்டலம் அசோஸ்பைரில்லம், 4 பொட்டலம் பாஸ்போபாக்டீரியா கலவையை 20 கிலோ தொழுவுரத்துடன் கலந்து நடவு வயலில் நடவு செய்வதற்கு முன் இட வேண்டும்.
நடவு வயலில் களைக்கொல்லி இடுதல்:-
ஏக்கருக்கு பூட்டோகுளோர் 1 லிட்டர், தயோபென்கார்ப் 1 லிட்டர் புளுகுளோரலின் 400 மி.லி. பென்டிமெதிலின் 1.2 லிட்டர், அனிலோபாஸ் 500 மி.லி., புரொடிலாகுளோர் 500 மி.லி. இவைகளில் ஏதாவது ஒன்றை 20 கிலோ மணலுடன் கலந்து நட்ட 3-4 நாட்களில் சீராக தூவ வேண்டும். தண்ணீரை எந்த காரணம் கொண்டும் 2 நாட்களுக்கு வடிக்கவோ, பாய்ச்சவோ கூடாது.
நீர் நிர்வாகம்:-
நடவு செய்த 7 நாள் வரை 2.5 செ.மீ. ஆழத்திற்கு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். இதனால் நடவு செய்த பயிர்கள் நன்கு வேர் ஊன்றும். அதன் பிறகு அறுவடைக்கு 10 நாள் முன்னர் வரை 5 செ.மீ. ஆழம் வரை நீர் பராமரிக்க வேண்டும். (ஒரு குச்சியில் 5 செ.மீ. அளவிற்கு பெயின்ட் மார்க் செய்து அந்த அளவில் நீர் பராமரிக்கப்பட வேண்டும்). தண்ணீர் முழுவதும் வற்றிய பின் மறுபடியும் 5 செ.மீ.அளவிற்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
திருந்திய நெல் சாகுபடி:-
தற்போது நீர் வள ஆதாரங்களை குறைந்து கொண்டு வருவதாலும், உற்பத்தி செலவு அதிகமாவதாலும், திருந்திய நெல் சாகுபடி முறைகளை கையாள வேண்டியது அவசியமாகிறது. இம்முறையில் சிக்கன பாசனமூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க முடியும். மண்ணின் காற்றோட்டத்தையும், நுண்ணுயிர் செயல்பாட்டினையும் அதிகரிக்க முடியும். பயிரின் தழைச்சத்து தேவையை குறைக்க இயலும். களைகளை இயற்கை உரமாக மாற்றலாம். விதை நெல்லின் தேவை குறைக்கப்படுகிறது. மொத்தத்தில் நெல்லின் விளைச்சல் கூடுகிறது
1) தரமான சான்று பெற்ற உயிர் விளைச்சல் / வீரிய ஒட்டு நெல் இரகங்களைப் பயன்படுத்த வேண்டும்.
2) ஏக்கருக்கு 3 கிலோ விதை போதுமானது.
3) ஒரு சென்ட் பரப்பில் ஒரு மீட்ட்ர் அகல மேட்டுப்பாத்தி அமைத்து தூள் செய்த டி.ஏ.பி. உரம் 2 கிலோ தூவி விட்டு விதைக்கவும். மேட்டுப்பாத்திகள் மூழ்கும் அளவுக்கு நீர் பாய்ச்சுதல் வேண்டும்.
4) நடவு வயலினை துல்லியமாக சமன் செய்ய வேண்டும்.
5) 10-14 நாட்கள் வயதுடைய நாற்றுகளை நடவு செய்தல்.
6) 25 x 25 செ.மீ இடைவெளியில் நடவு செய்தல்.
7) சரியான இடைவெளியில் நடவு செய்ய மார்க்கர் கருவியினை பயன்படுத்த வேண்டும்.
8) குத்துக்கு 1 நாற்று வீதம் நடவு செய்தல்.
9) முதல் ஒரு மாதத்திற்கு ஒரு அங்குலத்திற்கு (2.5 செ.மீ) நீர் மறைய கட்ட வேண்டும்.
10) கேனோவீடர் களைக்கருவியை உபயோகித்தல்.
11) இலை வண்ண அட்டையை உபயோகித்து தழைச்சத்து உரத்தினை இடுதல்.
நேரடி நெல் விதைப்பு:
தற்போதைய சூழ்நிலையில் தமிழக மாவட்டங்கள் அனைத்திலும் அதிகரித்து வரும் தொழிற்சாலைகள், இதர அதிக வருவாய் தரக்கூடிய சிறு தொழில்கள் பெருகி வருவதால் நெல்லை சரியான தருணத்தில் நடவு செய்வதற்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுகின்றது. நடவு முறை நெல் சாகுபடியில் நாற்றங்கால் தயாரித்தல், நாற்றங்கால் பராமரித்தல், நாற்றுப்பறித்தல், நடவு வயலுக்கு நாற்றூகளை எடுத்துச் செல்லுதல், வீசுதல், நடவு செய்தல் போன்ற பணிகளுக்கு மட்டும் சாகுபடி செலவில் 20 முதல் 25 சதம் வரை செலவாகின்றது. ஆகவே, நடவு முறையில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க நேரடி நெல் விதைப்பு முறை அவசியமாக கருதப்படுகின்றது. ஒரு ஏக்கருக்கு தேவையான விதையை முளைப்புக் கட்டி நேரடியாக விதைப்புக் கருவி மூலமாக விதைப்பது நேரடி நெல் விதைப்பு எனப்படுகிறது. இச்சாகுபடி முறையில் நாற்றங்கால், நடவு பணிகள் தவிர்க்கப்படுவதால் ஆள் பற்றாக்குறையைப் போக்கி சாகுபடி செலவையும் குறைக்க வாய்ப்புள்ளது. நேரடி நெல் விதைப்பு கருவியைத் திறன்மிக்கதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சில மாறுதல்கள் செய்து சேற்றில் எளிதாக இயக்கக்கூடிய வகையில் உருவாக்கி உழவர்கள் பயன்பாட்டிற்கு தந்துள்ளது. இக்கருவி வரிசைக்கு வரிசை 20 செ.மீ. இடைவெளியில் எட்டு வரிசை விதைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
விதையளவு:
நேரடி நெல்விதைப்பு கருவி மூலம் விதைப்பதற்கு ஏக்கருக்கு 8 முதல் 10 கிலோ விதை தேவை. விதைக்கப்படும் வயல் பெரிய அளவில் இருந்தால் (50 சென்ட்) ஏக்கருக்கு 8 கிலோ விதையே போதுமானதாக இருக்கும்.
விதை தயாரித்தல்:
விதைப்பதற்கு தேவையான விதையை சாக்கு பையில் போட்டு நன்கு கட்டி தொட்டியில் 24 மணி நேரம் ஊற வைக்கவும். இதில் 200 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டிரியா நுண்ணுயிர் கலவைகளை தொட்டியிலுள்ள நீரில் கரைத்து விடவும். ஊறவைத்த விதைகளை நன்கு தண்ணீர் வடியும் வரை வைத்து அதை திரும்பவும் 24 மணி நேரம் இருட்டறையில் வைத்து அந்த முளைப்பு கட்டிய விதைகளை விதைக்க பயன்படுத்த வேண்டும். முளைப்பு அதிகமாக காணப்பட்டால் விதைப்பு பெட்டி துவாரத்திலிருந்து விதை விழுவதற்கு ஏதுவாக அமையாது. ஆகவே, தகுந்த தருணத்தில் விதைப்பது நல்லது.
நிலம் தயாரித்தல்:
- நிலத்தை நன்கு உழுது நீர் அங்கும், இங்கும் தேங்காமல் குண்டும் குழியும் இல்லாமல் சமப்படுத்த வேண்டும்.
- நிலத்தை நன்கு சமப்படுத்துவதன் மூலம் விதைகள் அனைத்து பகுதிகளிலும் சீராக முளைக்க ஏதுவாக அமையும்.
- நேரடி நெல் விதைப்பில் நெல்லை விதைப்பதற்காக நெல்லை ஊற வைக்கும்போதே நிலத்தை உழுது சமப்படுத்துதல் அவசியம்.
- விதைப்பதற்கு 5-8 மணி நேரத்திற்உ முன்னதாக நீரை நன்கு வடித்து, சேறு மட்டும் இருக்கும் படியாக, நீர் தேங்காமல் நிலம் இருக்க வேண்டும்.
- விதைஇபுக் கருவியின் மூலம் விதைத்த பின்பு முதல் 5 நாட்களுக்கு சிறீதளவு லேசாக சுமார் ½ இன்ச் அளவுக்கு தண்ணீரைக் கட்டவும்.
- பின்பு 5 முதல் 15 நாட்களுக்கு நன்கு தண்ணீரை கட்டி மண்ணை இறுகாமல் பார்த்து கொள்வதோடு களைகளும் வளராமல் பார்த்து கொள்ள வேண்டும்.
விதைப்புக் கருவி – பயன்படுத்தும் முறை:
- விதைப்பெட்டியில் முளைவிட்ட விதை நெல்லை நிரப்பவும், விதைப்பெட்டியின் மூன்றில் இரண்டு பாகம் அல்லது பாதி அளவு மட்டுமே விதையாக் நிரப்ப வேண்டும்.
- விதைப்பெட்டியின் கதவுகளை இறுகமூட வேண்டும்.
- கருவியை சராசரியாக மணிக்கு 1 கி.மீ. வேகத்தில் முன்னோக்கி இழுக்கவும்.
- முதல் தடவை செல்லும் பொழுது சக்கரத்தின் மூலம் ஏற்படும் பதிவை அடுத்த தடவை செல்வதற்கு குறியீடாக பயன்படுத்தி வரிசைக்கு வரிசை இடைவெளியை 20 செ.மீ. இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
- இதைப்போலவே விதைப்பதைத் தொடரவும்.
- விதைப்பெட்டியில் நான்கில் ஒரு பகுதியாக விதை வரும்பொழுது மீண்டும் விதையை நிரப்பி விடவும்.
- விதைக்கும் பொழுது அவ்வப்போது விதைப்பெட்டியிலிருந்து விதை சரியாக விழுகிறதா என சரிபார்த்துக் கொள்ளவும்.
- வரப்புகளின் ஆரம்பத்திலும், முடிவிலும் விதைப்புக் கருவியை முன்னும் பின்னும் ஆட்டி அடுத்த வரிசைக்கு விதைப்பதற்கு மாற்றூவதால் பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க முடியும்.
- வயலிம் முடிவின் போது வரப்பு ஓரங்களில் விதைப்பு செய்யும்போது, மீதமுள்ள இடத்தின் அகலத்திற்கு தகுந்தவாறு, ஒன்று அல்லது இரண்டு பெட்டிகளில் மட்டும் விதையை நிரப்பி மீதமுள்ள பெட்டிகளைக் காலி செய்து விதைத்து பூர்த்தி செய்தல் வேண்டும்.
- மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டால் விதைப்பதைத் தவிர்த்து அல்லது மழைநீரை வடிகட்டியபின் விதைக்கவும்.
- விதைப்பு நாளில் மழை தொடர்ந்து காணப்பட்டால் முளைப்பு கட்டிய விதையை நிழலில் உலர்த்தி அதிக முளைப்பு வராமல் பார்த்து கொண்டு அடுத்த நாளில் விதைக்கலாம்.
விதைப்புக் கருவியின் நன்மைகள்:
- குறைந்த ஆட்களை வைத்து சுலபமான முறையில் விதைக்கலாம். ஆகவே, ஆள் செலவு குறைகின்றது.
- சீரான இடைவெளியில் விதை விதைக்கப்படுகின்றது. ஆகவே, பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்படுகின்றது.
- எடை மிக குறைவாக இருப்பதால் மிகவும் எளிது.
- ஒரு நாளில் 2 ½ ஏக்கர் விதைக்கலாம்.
- குறைந்த விதை அளவு ஏக்கருக்கு 8 முதல் 10 கிலோ விதை போதுமானது (சேமிப்பு ஏக்கருக்கு ரூ.400)
- நாற்றங்கால் இல்லை (சேமிப்பு ரூ.500)
- நடவு இல்லை (சேமிப்பு ஏக்கருக்கு ரூ. 1500-2000)
- நடவு செய்த நெல்லைவிட 10 நாட்களுக்கு முன்னரே அறுவடைக்கு வந்து விடுகிறது.
- பின்செய் நேர்த்தி பணிகளான களை எடுத்தல், பூச்சி நோய் தடுபு மருந்து தெளித்தல் ஆகியவற்றை எளிதாக செய்யலாம்.
- நடவு பயிரை விட அதிக விளைச்சலைப் பெறலாம்.
- சாகுபடி செலவுமிக குறைவு.
- நிகர வருமானம் அதிகமாக கிடைக்கும்.
மேற்கூறிய வெவ்வேறு நெல் சாகுபடி முறைகளை மண் வகை, காலநிலை, ஆள்பற்றாக்குறை, சாகுபடி செலவு, விளைச்சல் திறன் மற்றும் வருமானம் ஆகிய காரணங்களைக் கருத்தில் கொண்டு தங்கள் சூழ்நிலைக்கேற்ப கடைப்பிடிப்பதால் அதிக விளைச்சளையும், வருமானத்தையும் பெருக்கி தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி கொள்ளலாம்.
நன்றி!
வேளாண்மை இயக்குனர்
தருமபுரி