போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தால் எதிர்காலத்தில் இன்னும் எத்தனை வருடம் பூமிக்கடியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் கிடைக்கும் என்று சொல்ல முடியவில்லை. பெட்ரோல் மற்றும் டீசலின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணையை இந்தியா இறக்குமதி செய்வதால் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, நமது செலவாணி செலவாகிறது. மேலும் பல்வேறு வாகனங்களும் வெளியற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்களால் நமது வெளிமண்டலம் பாதிக்கப்படுகிறது.
இதன் விளைவுகள் தான் ஆங்காங்கே ஏற்படும் வறட்சியும், பெருமழையும், பெருவெள்ளமும், பரவும் நோய்களும், கடல் நீர்மட்டம் உயர்வதும் ஆகும். இத்தகைய பாதிப்புகளில் இருந்து உலகம் விடுபட்டாக வேண்டும். அதற்கு என்ன செய்வது?
மாற்று எரிசக்தி பொருட்களை கண்டறிய வேண்டும். அத்தகைய எரிசக்தி, வளம் கொண்டதாகவும், புதுப்பித்துக்கொள்ள தக்கதாகவும் இருக்க வேண்டும். இத்தகைய அணுகுமுறையோடு மேற்கொண்ட தேடலின் பயனாக கண்டறியப்பட்டதே பயோ-டீசல் ஆகும். பயோ-டீசலை, ஜெட்ரோபா என்னும் காட்டாமணக்கு செடியில் இருந்து பெறலாம். காட்டாமணக்கு விவசாயம் பரவலாக மேற்கொள்ளப்பட்டு, பயோ-டீசல் உற்பத்தியும் வணிக அளவில் நடைபெற்றால் வாகனங்கள் அனைத்தும் பயோ-டீசலை பயன்படுத்தி இயங்கும் வாய்ப்பு உள்ளது. டீசல் இயந்திரங்களில் ஒரு மாற்றமும் செய்யாமல், இப்போது பயன்படுத்தப்படும் பெட்ரோலிய டீசலோடு, 2.20 சதவீதம் வரை பயோ- டீசலை கலந்து பயன்படுத்தி வாகனங்களை ஒட்டலாம். இதனால் டீசல் உற்பத்தியில் ஓரளவு தன்னிறைவு பெறமுடியும். எரிபொருளுக்கு செலவாகும் அந்நிய செலவாணியை குறைக்க முடியும். சுற்றுப்புற சூழல்கேட்டையும், உலகம் வெப்பமயமாவதையும், நோய்களின் பிடியில் சிக்குவதையும் தவிர்க்க இயலும். மேலும் காட்டாமணக்கு உற்பத்தியை பரவலாக மேற்கொள்ளும் போது, தரிசு நிலங்கள் தரிசிக்கத்தக்க நிலங்களாக மேம்படும். கிராமப்புற மக்களுக்கு பெருமளவு வேலைவாய்ப்புகள் பிறக்கும். அவர்களது பொருளாதார நிலையும் சிறக்கும்