நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுலா தலமான கொல்லிமலை கடல் மட்டத்தில் இருந்து 1300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு அபூர்வ மூலிகைகள் அதிகளவில் உள்ளன. கொல்லிமலைக்கு செல்லும்பாதை 70 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். குளுமையான சீதோஷண நிலை, பச்சைபசேல் என வயல்வெளி, காய்த்து குலுங்கும் பலாப்பழம், வாழை, அன்னாசி, குட்டிகுட்டி நீரோடைகள், காண துடிக்கும் சிறிய அருவிகள் போன்றவை கொல்லிமலையின் அடையாளங்கள்.
மலைப்பகுதியில் சிதறி கிடைக்கும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ்மக்கள் வசித்து வருகின்றனர். கொல்லிமலை மற்ற மலைபிரதேசங்களை இந்த அளவுக்கு அதிக கொண்டை ஊசி விளைவுகள் கிடையாது. இங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் இருந்து கொட்டும் தண்ணீர் மூலிகை மணம் வீசுகிறது. இதில் குளித்தால் பல்வேறு நோய்கள் காணாமல் போய்விடும்.
இத்தகைய பெருமைமிக்க கொல்லிமலையின் மற்றொரு சிறப்பு காபி, மிளகு, அன்னாசி பழங்கள். கொல்லிமலையில் விளையும் மிளகு இந்திய அளவில் தரமிக்கது. இங்கு சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் காபி, மிளகுகள் பயிரிடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மிளகு அறுவடை சீசன் மே மாதம் தொடங்கும்.
இதேபோல் காபி சீசனும் மே, ஜீன் மாதங்களில் துவங்கும். கொல்லிமலையில் விளையும் காபி மிகவும் சுவை மிக்கது. காபி சீசனில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்ய கொல்லிமலைக்கு வந்து குவிகின்றனர். கொல்லிமலையின் மற்றொரு சிறப்பு காய்த்து தொங்கும் அன்னாசி மற்றும் பலாப்பழ வகைகள், குறிப்பாக, இங்கு விளையும் அன்னாசி பழங்கள் ருசியானது.
சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் அன்னாசி பழங்கள் விளைவிக்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு கொல்லிமலையில் இருந்துதான் அன்னாசி பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், அன்னாசி பழங்களை வாங்கி சுவைக்க மறப்பதில்லை. இதன் சீசன் மே மாதம் இறுதியில் தொடங்கி, 3 மாதங்கள் வரை இருக்கும். இதேபோல், கொல்லிமலை பலாப்பழங்களும் சுவைமிக்கது.
நன்றி
தமிழ் முரசு