சேலம் மாவட்டத்தில் பேளூர், ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், தும்பல் உள்ளிட்ட வாழாப்பாடி தாலுகாவில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு தென்னை மரத்தில் ஒரு வெட்டுக்கு 50 காய் முதல் 100 காய்கள் வரை அறுவடை செய்யப்படுகிறது.
தென்னை வளர்வதற்கான ஏற்ற மண்வளம் உள்ளதால் அதிக மகசூல் கிடைக்கிறது. தேங்காய்க்கு சரியான விலை கிடைப்பதில்லை என்பதால், கொப்பரையாக விற்று வருவாய் ஈட்டுகின்றனர்.
தென்னை அறுவடை செய்து, கொப்பரையாக மாற்றப்படுகிறது. தேங்காயில் இருந்து உரித்தெடுக்கப்படும் தேங்காய் மட்டை, கொட்டங்குச்சியில் இருந்து கணிசமான வருவாய் கிடைக்கிறது. ஒரு காலத்தில் தேங்காய் ஓடான கொட்டாங்குச்சி கேட்பாரற்று மட்கி எதற்கும் பயன்படாமல் மண்ணோடு மண்ணாகி கிடந்தது. ஆனால் அது இப்போது நல்ல வருவாய் கொடுத்து வருகிறது.
கொட்டாங்குச்சி கரியிலிருந்து கொசு விரட்டிகள் சாம்பிராணிகள் மற்றும் அகர்பத்திகள் தயாரிப்பு அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மட்டுமின்றி வடமாநிலங்களுக்கும் அதிகம் அனுப்பி வைக்கப்படுகிறது. பக்கத்து மாவட்டமான ஈரோடு, காங்கேயம், பெருந்துறை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கொட்டங்குச்சிகளை கொள்முதல் செய்து வருவதால், வாழப்பாடி கொட்டாங்குச்சிக்கு மவுசுகூடியுள்ளது.