Skip to content

கிருஷ்ணகிரியில் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் மாங்கன்றுகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் மாங்கனி உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. இங்கு 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது.மாஞ்செடி உற்பத்தியிலும் முதலிடத்தில் உள்ள இம்மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு அதிகளவில் மாஞ்செடிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

போச்சம்பள்ளி, சந்தூர், பட்டகப்பட்டி, ஜெகதேவி, தொகரப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மாஞ்செடிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தொழிலில் மட்டும் சுமார் 5 ஆயிரம் குடும்பங்கள் ஈடுப்பட்டுள்ளன.

இம்மாவட்ட விவசாயிகள், மாங்கூழ் உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து மாங்கொட்டைகளை டன் கணக்கில் வாங்கி வந்து விதைப்பார்கள். அந்த மாங்கொட்டைகள் செடிகளாக சுமார் 1 வருடத்திலிருந்து 2 வருடம் வளரும். அவ்வாறு வளரும் செடிகளை வேருடன் எடுத்து, மாஞ்செடி உற்பத்தி செய்யப்படுவதற்காக தயார் செய்யப்படும் பிரத்யேகமண் சட்டிகளில் வைக்கின்றனர். இந்த செடிகளுக்கு 45 நாட்கள் காலை, மாலை என 2 முறை தண்ணீர் விடுகின்றனர்.

பின்னர் அந்த மண்சட்டியில் உள்ள செடிகளை கொண்டு, ஏற்கனவே நன்கு வளர்ந்துள்ள தாய் செடியில் உள்ள கிளைகளை வெட்டி சீவி புதிய செடியில் இணைத்து தண்ணீர் புகா வண்ணம் பிளாஸ்டிக் கொண்டு கட்டி விடுகின்றனர். ஒவ்வொரு தாய் செடியிலிருந்தும் குறைந்தபட்சம் 10 செடிகள் உற்பத்தி செய்கின்றனர். அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மாங்கன்றுகள் விற்பனை செய்யப்படிகிறது.

மாங்கன்றுகள் பெங்களூரா, செந்தூரா, பைனப்பள்ளி, காலப்பட், பங்கனப்பள்ளி, மல்கோவா என பல ரகங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு மாங்கன்றின் விலை சீசனை பொறுத்தும், ரகத்தை பொறுத்தும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்படவெளி மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் நேரடியாக கிருஷ்ணகிரிக்கு வந்து மாங்கன்றுகளை வாங்கி வாகனங்கள் மூலம் ஏற்றி செல்கின்றனர்.

குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் ஜீலை முதல் அக்டோபர் மாதம் வரை மாங்கன்றுகள் விற்பனை தீவிரமாக நடக்கும். இதன் மூலம் ஆண்டிற்கு ரூ.20 கோடி வரை வர்த்தகம் நடைபெறுகிறது. மாங்கன்றுகள் வளர்ப்பு, விற்பனை மூலம் பல்லாயிரக்கணக்கான விவசாய தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

நன்றி

தமிழ் முரசு

1 thought on “கிருஷ்ணகிரியில் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் மாங்கன்றுகள்”

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj