தமிழகத்தில் ரோஜா உற்பத்தியில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதலிடம் வகிக்கிறது. இங்கு நிலவும் மிதமான தட்வெப்ப நிலை, செம்மண் கலந்த மணல் பாங்கான நிலம் மலர் சாகுபடிக்கு மிகவும் உகந்ததாக உள்ளது. ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதிகளில் சாதாரண நிலத்திலும், பசுமை குடில்கள் அமைத்தும் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா சாகுபடி செய்யப்படுகிறது.
சுட்டெரிக்கும் கோடை காலத்திலும் மலர் உற்பத்தி பாதிக்கமால் இருக்க வெளிநாட்டிலிருந்து பிரத்யேகமான பாலித்தீன் பேப்பர்களை இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றனர்.
ஓசூரில் விளையும் பல வண்ண ரோஜா மலர்கள் பல நாட்களுக்கு பசுமை, புத்துணர்ச்சி மாறாமல் இருக்கும். இதனால் நாட்டில் பல இடங்களில் ரோஜா சாகுபடி செய்தாலும் ஒசூர் மலருக்கு எப்போதும் மவுசு அதிகம். இதனால் வெளிநாட்டினர் ஓசூர் ரோஜவை அதிகளவில் விரும்பி வாங்குகின்றனர். ஓசூர் விவசாயிகள், தாஜ்மகால், பர்ஸ்ட்ரேட், கார்வெட், கோல்டுஸ்கைப், கத்தாரியா உள்ளிட்ட வகைகளை அதிகம் சாகுபடி செய்கின்றனர்.
ஓசூரில் இருந்து இங்கிலாந்து, தாய்லாந்து, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. குறிப்பாக காதலர் தினம், கிறிஸ்துமஸ் போன்ற விழக்காலங்களில் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த சீசனில் மட்டும் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது.
பெரிய விவசாயிகள் குளிர்ப்பதன கிடங்களில் இருப்பு வைத்து விழக்காலங்களில் விற்பனைக்கு அனுப்புகின்றனர். ஏற்றுமதியின் மூலம் அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் அதற்கேற்ப தரமான மலர்களை பயிரிட்டு வருகின்றனர். இதன் மூலம் நாட்டுக்கும் அதிக வருவாய் கிடைக்கிறது.
நன்றி
தமிழ் முரசு