‘ஆள் பாதி ஆடை பாதி’ என்ற பழமொழிக்கேற்ப மனிதனை அடையாளப்படுத்தும் கருவியாக விளங்குவது ஆடைகள். அந்த ஆடைகளை தயாரிக்க பயன்படுவது பருத்தி. காற்றில் குறிப்பிட்ட அளவு ஈரப்பதம் உள்ள தட்பவெப்பநிலையிலேயே பருத்தி நன்றாக விளையும். கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பருத்தி விளைச்சல் அதிகம்.
முக்கிய பணப்பயிராக விளங்கும் பருத்தியின் மதிப்பு சந்தையில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால ‘வெள்ளை தங்கம்’ என்று அழைக்கின்றனர். மானாவாரியாகவும், சில இடங்களில் இறவைப்பயிராகவும் இப்பயிர் சாகுபாடி செய்யப்படுகிறது. இதில் அதிக மகசூல் பெற விதை நேர்த்தி அவசியம். அதுபற்றி பார்ப்போம்.
கந்தக அமிலத்தை பயன்படுத்தி பருத்தி விதைகளின் மேல் உள்ள பஞ்சுகளை நீக்கும் அமில விதை நேர்த்தி முக்கியமான ஒன்றாகும். இதற்கு பிளாஸ்டிக் வாளி, அடர் கந்தக அமிலம், மரக்குச்சி மற்றும் தண்ணீர் ஆகியவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பிளாஸ்டிக் வாளியில் பஞ்சுடன் கூடிய விதையை எடுத்துக் கொண்டு, 1 கிலோ பஞ்சுடன் கூடிய விதைக்கு 100 மிலி அடர் கந்தக அமிலம் என்ற அளவில் ஒரே சீராக நிதானமாக ஊற்றவும், மரக்குச்சி கொண்டு, விதைகள் அடர் பழுப்பு (அ) காப்பிக்கொட்டை நிறம் அடையும் 23 நிமிடங்களுக்கு நன்கு கலக்கவும்.
பின்பு விதைகளை ஐந்தாறு முறை தண்ணீர் விட்டு அமிலம் நீங்கும் வரை நன்கு கழுவவும். நீரின் மேலாக மிதக்கும் உடைந்த, பூச்சி மற்றும் நோய் தாக்கிய, சிறிய மற்றும் முற்றாத விதைகளை நீக்கிவிடவும், நல்ல விதைகளை நிழலில் உலர வைத்து பூஞ்சாண மற்றும் உயிர் உர விதை நேர்த்தி செய்து பின் பயன்படுத்த வேண்டும்.
அமில விதை நேர்த்திக்கு இரும்பு, கண்ணாடி, பீங்கான் போன்ற பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாது. அமிலம் கையாளும் போது மிகவும் கவனம் தேவை. அமிலம் ஊற்றிய விதைகளை கைகொண்டு கலக்கக் கூடாது. விதைகளை கழுவிய தண்ணீரை செடி கொடிகள் மற்றும் பிராணிகள் மீது ஊற்றக் கூடாது. அமில விதை நேர்த்தி செய்வதால், நோய் கிருமிகள் அகற்றப்பட்டு விதைஉறையின் மீதுள்ள காய் புழுக்களின் முட்டைகள் மற்றும் கூட்டுப்புழுக்கள் அழிக்கப்படுகின்றன.
விதைப்பது எளிதாகின்றது. முளைப்புத்திறன் அதிகரிப்பதனால் ஒரு குழிக்கு ஒரு விதையே போதுமானது. பூஞ்சாண மற்றும் உயிர் உர விதை நேர்த்தி செய்வது எளிதாகும். இயந்திரங்கள் மூலம் விதைப்பது எளிது. இவ்வாறு அமில விதை நேர்த்தி செய்வதால் தரமான பருத்தி விதைகள் கிடைக்கும். இவற்றை பயிரிடும்போது நல்ல மகசூல் மற்றும் அதிக லாபம் கிடைக்கும்.
நன்றி
தமிழ் முரசு