கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி பகுதிகள் காய்கறி உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. குறிப்பாக சூளகிரி, பேரிகை, மருதாண்டப்பள்ளி, மாரண்டப்பள்ளி, மைலோப்பள்ளி, உலகம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகளின் பிரதான பயிராக கொத்தமல்லி, புதினா உள்ளது.
இந்த பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலை, மண்வளம் ஆகியவற்றால் இந்த பயிர்கள் செழித்து வளருகின்றன. மேலும் சுவை, மணமும் கூடுதலாக உள்ளது. சென்ட் கணக்கில்நிலம் இருந்தாலே போதும் என்பதால் ஏராளமான விவசாயிகள் இவற்றை விரும்பி பயிரிடுகின்றனர்.
கொத்தமல்லி விதைத்த 70 நாள் முதல் அறுவடை செய்யப்படுகிறது. மல்லி செடிகளை பிடுங்கி கட்டு கட்டி விற்பனைக்கு அனுப்புகின்றனர். இதற்காக சூளகிரியில் மல்லி மார்க்கெட் ஆண்டு முழுவதும் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சேலம், கோவை, மதுரை, சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா, புதுவை மாநிலங்களுக்கும் அனுப்பி விற்பனை செய்யப்படுகிறது.
குறைந்த செலவில் நிறைந்த லாபம் கிடைப்பதால் விவசாயிகள் கொத்தமல்லியை விரும்பி பயிரிடுகின்றனர். இதுபோல புதினாவும் அதிகம் பயிரிடப்படுகிறது. செடிகளைவேருடன் பிடுங்காமல் அதன் கிளைகளை மட்டுமே கிள்ளி எடுப்பதால் விவசாயிகளுக்கு செலவு குறைவு. ஒரு முறைசெடி நடவு செய்தால் ஓராண்டுக்கு அறுவடை செய்யலாம். அதுவும் 15 நாள் முதல் 20 நாளைக்குள் ஒவ்வொரு முறையும் அறுவடை செய்யலாம். பல இடங்களில் பயிரிட்டாலும் சுளகிரி பகுதியிலும் விளையும் மல்லீ, புதினாவிற்கு சுவையும், மணமும் அதிகம் என்பதால் கிராக்கி அதிகம் இருக்கிறது.
நன்றி
தமிழ் முரசு