Skip to content

விவசாயிகளுக்கு வளம் தரும் தக்காளி-தென்னை

ht1222

சேலம் மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கு ஏற்ற இடமாக வாழப்பாடி தாலுகா உள்ளது. தக்காளி உற்பத்தியில் வாழப்பாடி முன்னிலையில் உள்ளது. வாழப்பாடி, பேளூர், மங்களாபுரம் ,கருமந்துறை உள்ளிட்ட வாழப்பாடி பகுதியில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தக்காளி சாகுபாடி செய்யப்பட்டுள்ளது. வாழப்பாடி, பேளூரில் தக்காளி மண்டி உள்ளது. வாழப்பாடி சுற்று வட்டார பகுதியில் அறுவடை செய்யப்படும் தக்காளி மண்டிகளுக்கு தினமும் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து சென்னை, சேலம், கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களுக்கு தக்காளி செல்கிறது.

வாழப்பாடி தக்காளியில் அதிக புளிப்பு தன்மை உள்ளதால், சமையலில் முக்கிய பங்கை பெறுகிறது. கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால், ஏரி, குளம், கிணறுகளில் தண்ணீர் இல்லை. இதனால் தக்காளி சாகுபடி பரப்பு தற்போது குறைந்துள்ளது.

இதுகுறித்து தக்காளி வியாபாரிகள் கூறுகையில், ‘வாழப்பாடி சுற்றுவட்டார பகுதியில் தக்காளி அதிகளவில் விளைகிறது. கோடை காலத்தில் அதிக விளைச்சல் தருவதால் விலை குறைந்து, விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. தற்போது தக்காளிக்கு நல்ல விலை கிடைக்கிறது.

அரசு சார்பில் ஒழுங்கு முறை விற்பனை கூடம், குளிர் சாதன வசதி கொண்ட ஸ்டாக் குடோன் ஆகியவற்றை அரசு ஏற்படுத்தி தரவேண்டும். விலை குறைந்து காணப்படும்போது, ஸ்டாக் வைத்து பின்னர் தக்காளியை விற்பனை செய்தால் விவசாயிகளின் வருவாய் இழப்பை ஈடுகட்ட முடியும், ‘என்றனர்.

20 ஆயிரம் பேருக்கு வேலை

வாழப்பாடி அடுத்த கல்ராயன்மலையில் உற்பத்தியாகும் வெள்ளாறு, அருநூற்றுமையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதியின் ஆற்றுப்படுகை கிராமங்களிலும், பாப்பநாயக்கன்பட்டி, கரிய கோயில் அணை, புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை பாசன வசதி பெறும் கிராமங்களிலும், விளைநிலங்களில் தோப்புகளாக அமைத்து பராமரித்து வருகின்றனர். கிணறு மற்றும் வாய்க்கால், வயல்வெளி வரப்பு ஓரங்களில் தென்னை பயிரிட்டு வருகின்றனர். நீண்டகாலம் பலன் தரும் பணப்பயிராக தென்னை இருப்பதால் விவசாயிகள் ஆர்வத்துடன் பராமரித்து வருகின்றனர்.

மேலும் விவசாய தொழிலாளர்களின் பற்றாக்குறையால் விவசாயிகள் தங்களது நிலங்களில் தென்னையை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். வாழப்பாடி சுற்றுவட்டாரத்தில் விளைவிக்கப்படும் தேங்காய்கள் ருசி மிகுந்து காணப்படுவதோடு, நீண்ட நாட்களுக்கு இருப்பு வைத்திருந்தாலும் கெடாத தன்மை பெற்றுள்ளது. இதனால், விவசாயிகளிடம் ஆண்டு குத்தகை முறையிலும் எண்ணிக்கை அடிப்படையிலும் தேங்காய்களை கொள்முதல் செய்யும் தனியார் தேங்காய் மண்டி அதிபர்களும், சிறு வியாபாரிகளும் கூலிதொழிலாளர்களை கொண்டு மட்டைகளை உரிக்கின்றனர். இதன் மூலம் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

 மட்டை உரிக்கப்பட்ட தேங்காய்களை தரம் பிரித்து, முதல் தர தேங்காய்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், பீஹார், மஹாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கும் ஆண்டு முழுவதும் அனுப்பி வருகின்றனர்.

இதனால் மரமேறும் தொழிலாளர்கள், தேங்காய் மட்டை உரித்தெடுக்கும் கூலித் தொழிலாளர்கள், லோடு மேன்கள், தென்னை நார் பிரித்தெடுக்கும் தொழிலாளர்கள், சில்லரை வியாபாரிகள், கயிறு திரிக்கும் கைவினைஞர்கள் என 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

– நன்றி –

தமிழ் முரசு

Leave a Reply

Murali Selvaraj

Murali Selvaraj