கால்சியம் நிறைஞ்ச கேழ்வரகு…!
சிறுதானிய உணவு வகைகளைக் குறித்து சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் சுமதி பகிர்ந்து கொண்ட தகவல்கள்.
“கேழ்வரகுல தோசை, அடை செஞ்சு சாப்பிட்டா, அவ்ளோபிரமாதமா இருக்குது. அரிசியை வெச்சு செய்யற எல்லா பலகாரங்களையும்… சிறுதானியங்கள்லயும் செய்ய முடியும். கேழ்வரகு அவலை வெச்சு, உப்புமா செஞ்சும் சாப்பிட முடியும். கேழ்வரகுல அதிக கால்சியம் சத்துக்கள் இருக்கறதால, எலும்புகளுக்கு நல்லது. அதனால உடம்புக்குக் கூடுதல் பலம் கிடைக்குது. தேவையான கால்சியம் சத்துக்கள் கேழ்வரகிலே கிடைச்சுடுறதால, பாலோட தேவையைக் குறைச்சுக்கலாம்.
எங்க வீட்ல கம்பு, வரகு, பருப்பு, சோளம் இதையெல்லாம் ஊறவெச்சு, செய்யுற அடையை விரும்பி சாப்பிடுவாங்க. அதோட திணையரிசியில் செய்ற சர்க்கரைப் பொங்கலும் அவ்ளோ ருசியா இருக்கும். அரிசியில் கிடைக்காத சுவையும் சத்தும் சிறுதானியங்கள்ல கிடைக்கது” என்றவர்.
“சிறுதானியங்கள சாப்பிடறதால பலவித நன்மைகள் இருக்குற மாதிரியே அதை விளைவிக்கறதுலயும் பல நன்மைகள் இருக்கு. தண்ணியும் குறைவாதன் தேவைப்படும். பூச்சிக்கொல்லியும், ரசாயன உரங்களும் போட வேண்டியத் தேவையிருக்காது. இதனால, நிலமும் வளமாயிருக்கும். விவசாயிகளுக்கும் வேலை குறைச்சலா இருக்கும்” என்றார்.
தேவையானப் பொருட்கள்:
கடலை மாவு – அரை கப்
கேழ்வரகு மாவு – ஒரு கப்
மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய், நெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி, முட்டைகோஸ் – 2 கப்
தேவையான அளவு வெங்காயம், பச்சைமிளகாய்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கடலை மாவு, கேழ்வரகு மாவு, மிளகாய்த்தூள், உப்பு, நெய், நறுக்கி வைத்த கறிவேப்பிலை, கொத்தமல்லி, முட்டைகோஸ் உடன் சிறிது நீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதனுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி, சேர்த்துக் கலக்கவும். பிறகு, கொதிக்கும் எண்ணெயில் போட்டு, பொன்நிறம் வரும்வரை பொரித்தெடுத்தால்… ராகி பகோடா ரெடி.
நன்றி
பசுமை விகடன்