Site icon Vivasayam | விவசாயம்

வேளாண் துறை மேம்பாட்டிற்கு அறிவிப்புகள்

பட்ஜெட்டில், வேளாண் மேம்பாட்டிற்காக, பல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து, இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

  • காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசின் தவறான உரக் கொள்கையால், அவற்றின் விலை மும்மடங்கு உயர்ந்து விட்டது. இதனால், சாகுபடி செலவு அதிகரித்து, விவசாயிகள் தவித்து வருகின்றனர்.’உரக் கொள்கையில் மாற்றம் செய்யப்படும்’ என, தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது ஆறுதல் தருகிறது.
  • விவசாய கடன்கள் வழங்க, எட்டு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்திய உணவு கழகத்தை சீரமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • நதிகளை இணைக்க, மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ள நிலையில், இதுகுறித்த பூர்வாங்க ஆய்விற்காக, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விவசாயிகள் பலன் பெறும் வகையில், கிசான் ‘டிவி’ சேனல் துவக்க, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நிலமற்ற விவசாயிகள், ஐந்து லட்சம் பேருக்கு நபார்டு கடனுதவி வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அனைத்து மாநிலங்களிலும், உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
  • வறட்சி பாதிப்பிற்காக, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • நீர் பாசன வசதிகளை மேம்படுத்த, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, பல அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது வரவேற்க தக்க வகையில் அமைந்துள்ளது. இவற்றை, சுணக்கம் காட்டாமல், உடனுக்குடன் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

‘வளர்ச்சி திட்டங்களை உள்ளடக்கிய பட்ஜெட்’: 

”மத்திய அரசின், பட்ஜெட், வளர்ச்சி திட்டங்களை உள்ளடக்கியதாக திகழ்கிறது,” என, இந்திய தொழில் கூட்டமைப்பு தென் மண்டல துணை தலைவர், ராஜ்ஸ்ரீபதி தெரிவித்தார். இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், பட்ஜெட் விவாத நிகழ்ச்சி, சென்னை, கிண்டியில், நேற்று, நடந்தது. இதில், ராஜ்ஸ்ரீபதி பேசியதாவது: மத்திய அரசின், பட்ஜெட் மூலம், வேளாண், அடிப்படைகட்டமைப்பு, தயாரிப்பு துறைகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அதிகளவில் வேலைவாய்ப்பு உருவாகும்.நாட்டின், பொருளா தாரம் நிலை நிறுத்தப்படுவதுடன், அதிகளவில், முதலீடுகள் ஈர்க்கப்படும். மக்களிடம், சேமிப்பை ஊக்குவிக்கும். எனவே, பட்ஜெட், பல்வேறு வளர்ச்சி திட்டங்களை உள்ளடக்கியதாக திகழ்கிறது.

– நிருபர்-

                                                                                                                                      நன்றி

                                                                                                                               தினமலர்

Exit mobile version