Skip to content

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-15)

பொக்கிஷத்தில் புதைந்த ஏரி

நம் எல்லோருக்கும் தெரிந்த கதை தான்  பொன்முட்டையிடும் வாத்தின் கதை அதில் வரும் முட்டாள் எஜமானைப் போல பல நிகழ்வுகள் வரலாற்றில் நடந்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் பெரும் பழமை வாய்ந்த ஏரியை வெறும் வதந்தியை நம்பி வாரி  அழித்தது. துருக்கி தேசத்தின் கம்ஷேன் எனும் பகுதியில் டுமாலி என்னும் கிராமத்தில் உள்ள டிபிஸ் ஏரி பெரும் பழமை வாய்ந்த பனி கட்டி சூழ்  நன்னீர் ஏரி இது மலைக்குள் உள்ள ஒரு சிறு பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது 12000 வருடம் பழமை வாய்ந்தது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கணிக்கபடுகிறது. அப்படி பட்ட இயற்கை எழில் சூழ்ந்த ஏரி.

ஆனால் வெறும் ஒரு வதந்தியை நம்பி இன்று அதை பலி கொடுத்து விட்டனர். துருக்கியில் அமைந்த ரோம சாம்ராஜ்யத்தின் 15 ஆவது படை பிரிவு அந்த ஏரிக்கு கீழ் தான் பெரும் புதையல் இருக்கிறது என்று சிலர் நம்பியதால் ஏற்பட்ட விளைவு. இது பின் 5 நாள் அகழ்வாய்வு செய்தும் ஏதும் கிடைக்காததால் அதை தற்பொழுது மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று போராடுகின்றனர் சமூக ஆர்வலர்களும் சூழலியலாளர்கள்.

துருக்கி போன்ற தேசங்களில் ஏரிகளில் பெரும் பெரும் ராஜ்ஜியங்களின் மாளிகைகள், பேராலய வளாகங்கள் எல்லாம் கிடைப்பதை படித்திருப்போம். ஆனால் புதையல் உள்ளதாக எந்த வித அறிவியல் ஆய்வும் இன்றி வெறும் 5 நாட்களில் 12000 ஆண்டுகால சூழலியலை நாம் சிதைத்து விட்டோம். அது மட்டும் அல்ல. துருக்கி தேசத்தில் பாதுகாக்கப்பட்ட இடம் தவிர மற்ற இடங்களில் எவ்வித புதையல் தேடலும் செய்யலாம் அதற்கு எவ்வித தடையும் இல்லை என்பது போன்ற சட்டங்களும் தான் காரணம் என்கின்றனர்.

சரி நம் இந்தியாவிலும் இப்படி ஒரு ஏரி அழிகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம்…

ஜம்முவில் இருந்து 60கி.மீ தூரத்தில் சம்பா மாவட்டத்தில் இருந்து 100 மீட்டர் உயரத்தில் அமைந்த ஏரி தான் மன்சார் ஏரி இதுவும் பனிக்கட்டிகள் சூழ் நன்னீர் ஏரி தான். ஆனால் இன்று அதன் நிலை? மனித நடமாட்டத்தாலும் பருவ நிலை மாற்றத்தாலும் அவ்வேரியை நாம் வெகுவாக இழந்து வருகிறோம். அங்கு வாழும் மீன்களும், ஆமைகளும் மனிதர்கள் போட்ட குப்பைகளை குறிப்பாய் நெகிழி குப்பைகளை உண்டு வாழ்கின்றன. அருகில் இருக்கும் விவசாய பகுதிகளில் பயன்படுத்தப்படும் பூச்சி கொல்லிகள் சுத்தப்படுத்த படாத கழிவு நீர் என அந்த ஏரியே பாழ்பட்டு நிற்கிறது.

ஜம்மு பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் காங்ஜோ இவ்வாறு குறிப்பிடுகிறார், மழைப் பொழிவு குறைதல், மாசு இவை இரண்டும் தான் இந்த இடத்தின் முக்கியமான வருந்தத்தக்க செய்திகள் ஆகும். இவை இப்படியே தொடர்ந்தால் ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஏரிகளை காப்பது எளிதல்ல என்று மேலும் சில மக்கள் இதை கடவுளின் சாபமாக கருது கின்றனர். ஆனால் என்னை பொறுத்தவரை தன் குட்டியை  தானே தின்று அழிக்கும் மீன் போல் மனிதன் தன் அழிவுக்கு தேடி கொண்ட செயல் அன்றி வேறென்ன?

-தொடரும்…

கட்டுரையாளர்: அன்பன் செ. விக்னேஷ், இளநிலை வேளாண்மை பட்டதாரி, குளித்தலை, தொடர்பு எண்: 8344848960, மின்னஞ்சல்: vickysvicky42@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news