Skip to content

நேரடி நெல் விதைப்பில் களைக்கட்டுப்பாடு

பொதுவாக தமிழ்நாட்டில் நெல் சாகுபடி நாற்று விட்டு நடவு செய்தல், நேரடி நெல் விதைத்தல் என இரு மாறுபட்ட சூழ்நிலைகளில் செய்யப்படுகின்றது. தமிழ்நாட்டில் இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம் (கிழக்கு கடற்கரை ஒட்டிய மாவட்டங்கள்) காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் நேரடி விதைப்பு பெருமளவில் மேற்கொள்ளப்படுகின்றது. நேரடி நெல் சாகுபடியில் அதிக மகசூலுக்கு பெரும் சவாலாக இருப்பது களைகள்.

களைகளின் எண்ணிக்கை, களைகளின் வகைகள் மற்றும் காலத்தைப் பொறுத்து, களை விதையும், நெல்விதையும் சேர்ந்து ஒரே சமயத்தில் வளர்தல் ஆகியவை முக்கியம். களைகளானது, நெற்பயிருடன் சத்துக்கள், ஈரப்பதம், சூரிய ஒளி மற்றும் இடைவெளி ஆகியவற்றிற்காக கடுமையானப் போட்டி-போன்றவற்றால், நேரடி நெல் விதைப்பில் 30-55 சதவீதம், மகசூல் இழப்பு ஏற்படுவதோடு மட்டுமின்றி தானியத்தின் தரமும் பாதிக்கப்படுகின்றன.

நடவு வயலைப் போலின்றி, நேரடி நெல் விதைப்பில், நிலத்தை பண்படுத்தாமல் விதைகளை அப்படியே விதைப்பதால் களைகளின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்படும். எனவே நேரடி நெல் விதைப்பில் அதிக மகசூலுக்கு விதைத்த 15 நாட்கள் முதல் 45 நாட்களுக்குள் களைகளின்றி பயிரைப் பராமரிப்பது மிகவும் இன்றியமையாததாகும்.

மருந்து (களைக்கொல்லி) பயன்படுத்த வேண்டிய அளவு

  • ஏக்கருக்கு 100 மி.லி. பிஸ்பைரிபேக் சோடியம் 10% SC தனியாகவோ அல்லது களைகளின் தன்மை மற்றும் பன்மையினைப் பொருத்து ஏக்கருக்கு 8 கிராம் குளோரிமுரான் + மெட்சல்புரான் மீத்தைல் (அல்மிக்ஸ்) 15 % (அல்லது) ஏக்கருக்கு 350 மி.லி. பினாக்சோ புரோப்பி ஈத்தைல் 6.9 % EC களைக்கொல்லியை தெளித்தும் களைகளை கட்டுப்படுத்தலாம்.

பயன்படுத்த வேண்டிய நேரம்

  • விதைப்புக்கு பின்பு 15-25 நாட்களில்- (அல்லது) புதிதாக முளைக்கின்ற மற்றும் 4-6 இலைகள் கொண்ட களைகள்.

களைக்கொல்லி தெளிக்கும் போது

செய்ய வேண்டியவை

  • பரிந்துரைக்கப்பட்ட அளவில் உபயோகிக்கவும், ஒரு ஏக்கருக்கு தேவையான மருந்து மற்றும் 150-200 லிட்டர் தண்ணீர்.
  • களைக்கொல்லி பயன்படுத்தும் போது வயலில் ஈரம் இருந்தால் களைகள் நல்ல முறையில் கட்டுப்படும்.
  • வயலில் உள்ள தண்ணீரை வடிகட்டிய பின் களைக்கொல்லி தெளிக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு பின்னர் போதுமான அளவுக்கு நீரினை பராமரிக்கவும்.
  • விதைப்புக்கு பின்பு 12-15 நாட்களில் / 2-4 இலைகள் கொண்ட களைகளை கட்டுப்படுத்த களைக்கொல்லி மட்டும் தனியாக பயன்படுத்தவும்.
  • மருந்து தெளித்த பின்பு 2-3 மணி நேரம் மழை இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

செய்யக்கூடாதவை

  • பரிந்துரைக்கப்பட்ட அளவை விடக் குறைந்த அளவிலோ அல்லது அதிக அளவிலோ தெளிக்கக்கூடாது.
  • விதைப்புக்கு முன்பே மருந்து தெளிக்கக் கூடாது.
  • நன்றாக வளர்ந்த களைகள் மீது தெளிப்பதைத் தவிர்க்கவும்.
  • எந்தவித மருந்தையும், களைக்கொல்லியுடன் கலந்து தெளிக்கக்கூடாது.
  • காற்றில் (drift) அடித்துச் செல்லப்படுவதைத் தவிர்க்கவும்.

கட்டுரையாளர்கள்:

  1. முனைவர். ஆ. குழந்தைவேல் பிள்ளை, தொழில்நுட்ப வல்லுநர், கோத்ரேஜ் அக்ரோவெட் லிட், – திருச்சி. மின்னஞ்சல்: kuzhandhai635@gmail.com
  2. ஜெ. சரவணன், விற்பனை பிரதிநிதி, கோத்ரெஜ் அக்ரோவெட் லிட், தஞ்சாவூர். மின்னஞ்சல்: saravanan89@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news