பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 9

0
77

கடந்த இதழ்களில் நான் பசுமைப் புரட்சியின் தலைப்பில் எழுதிய அனைத்து கட்டுரைகளும் வரலாற்று நிகழ்வுகளையும் அரசின் புள்ளி விவரங்களையும் கொண்டவை. அவற்றை யாராலும் பொய் என்றோ மிகைப்படுத்தப்பட்டது என்றோ சொல்ல முடியாது. ஆனால் இந்தப் பகுதி என்னுடைய சொந்த கருத்தை முன் வைக்கப்போகிறேன். அதில் பலருக்கு உடன்பாடு இருக்கலாம், இல்லாமல் போகலாம். பசுமைப் புரட்சியைப் பற்றிக் கடந்த ஐம்பது ஆண்டுகளாக நடந்து வரும் இருதரப்பட்ட விவாதங்களின் ஒரு பகுதியாக அதை எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

இந்தத் தலைப்பு எடுக்கும் போதே பலர் வேண்டாம் என்றனர். இது ஒரு நிலையில்லாத தலைப்பு. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் இரண்டு பக்கமும் இருக்கும் என்று கூறினர். உண்மைதான். பசுமைப் புரட்சிக்கு ஆதரவும் எதிர்ப்பும் எப்போதும் இருந்துக்கொண்டே இருக்கிறது. நான் இந்த இரண்டு பக்கத்தின் நியாயங்களை முன்னிறுத்துவதாக இந்தத் தொடர் இருக்க ஆசைப்பட்டேன். அதற்காக இரண்டு பார்வைகளிலும் புத்தகங்களைப் படித்தேன். பசுமைப் புரட்சியின் அங்கமான எம்.எஸ்.சுவாமிநாதன் முதல் அதன் எதிர்ப்பாளரான வந்தனா சிவா வரைக்கும் எழுதிய புத்தகங்களைப் படித்தேன். பசுமைப் புரட்சியைப் பற்றி 1960-80களில் வந்த செய்தித்தாள்கள், புள்ளி விவரங்கள், கணக்கெடுப்பு அறிக்கைகள் போன்ற தரவுகளின் அடிப்படையில் இதை எழுதினேன்.

உண்மையில் இந்தியாவில் அந்தக் காலத்தில் ஒரு பஞ்சம் வரவிருந்ததும், அதை நாம் பசுமைப் புரட்சியின் மூலம் எதிர்கொண்டது உண்மைதான். ஒருவேளை நமக்குப் பசுமைப் புரட்சி இல்லாமல் இருந்திருந்தால் நாம் அதை எதிர்கொள்ளும் போது பல உயிர்களை இழந்திருக்க வேண்டியதிருக்கும் என்பதே உண்மை. அந்த ரீதியில் பார்க்கும்போது பசுமைப் புரட்சி ஒரு வரம் தான். ஆனால் அது அமல்பட்ட முறைகள் தான் தவறாக இருக்கிறது. சில புராண கதைகளில் வரம் வாங்கியவன் தலையே சாபத்தால் அழிவது போலக் கதைகளைக் கேட்டிருக்கிறோம். அதுபோல ஆகிவிட்டது பசுமைப் புரட்சி.

நாம் விதைத்த புது விதைகள் அதிக நீர் தேவை, அதிக ரசாயன உரத் தேவை, நவீன வேளாண்மை என்று அதைச் சுற்றி புதிய ஒரு சுழற்சியை ஆரம்பித்துவிட்டது. இந்தச் சுழற்சியின் வெளிப்பாடு மண்வள பாதிப்பு, விவசாயிகள் பிரச்சினை, பூச்சிக்கொல்லிகளின் தேவை, உணவுப்பொருள்களில் ரசாயன மிச்சங்கள் என்று பிரதிபலித்தது. இது எதையுமே நம்மால் மறுக்க முடியாது. உற்பத்தி வருகிறது, அதற்காக இதைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்று நம்மால் சமாளிக்க மட்டுமே முடியும்.

இங்குப் பல ஒப்புதல்கள் தேவை. எந்தத் துறையில் பிரச்சினை என்றாலும் அந்தத் துறை சார்ந்தவர்கள் அதைப் பெரிதும் ஒப்புக்கொள்வதில்லை. வேளாண்மையிலும் அப்படித்தான். “ஆம் நாங்கள் ரசாயனங்களைப் பயன்படுத்துகிறோம். எந்தத் தலைமுறையிலோ அந்தப் பயன்பாடு வந்துவிட்டது. அதன் காரணமாக ஒரு பக்கம் விளைச்சல் வந்தாலும், இன்னொரு பக்கம் பல தீங்கும் நடந்திருக்கிறது. வருங்காலங்களில் அதைத் தீர்க்க முயல்வோம்” என்ற இந்த ஒப்புதல் நமக்குத் தேவை. நான் ஒரு வேளாண் மாணவன் என்பதால் நான் பசுமைப் புரட்சியில் எந்த தவறும் இல்லை, ரசாயன மருந்துகளில் எந்த பாதிப்பும் இல்லை என்று மூடி மறைக்க வேண்டிய கட்டாயமில்லை. உண்மையில் வேளாண் தளத்தில் இருக்கும்போது தான் இதை மாற்றுவதற்கான கடமை எனக்கு வருகிறது.

வேளாண் மாணவர்கள் தொடங்கி வேளாண் பேராசிரியர்கள், வேளாண் அலுவவர்கள், அதிகாரிகள், மாநில மற்றும் மத்திய வேளாண் அமைச்சர் வரைக்கும் இந்த ஒப்புதல் தேவை. நாம் எப்போது நமது தவறை ஒப்புக்கொள்கிறோமோ அன்று தான் நாம் அடுத்தக்கட்டத்திற்கான மாற்றங்களைச் சிந்திக்க முடியும். இந்த ஒப்புக்கொள்ளுதல் கொஞ்சம் கடினம் தான். ஏனென்றால் பசுமைப் புரட்சி உருவாக்கிய வேளாண்மையில் பெரும் கார்ப்பரேட் முதலீடுகள் இருக்கிறது. ஆனால் இந்த ஒப்புக்கொள்ளுதல் நடந்தால் மட்டுமே இயற்கையான முறையில் விளைச்சல் பெற புதிய முயற்சிகள் நடக்க ஆரம்பிக்கும். முழுமையான இயற்கை முறை சாத்தியமில்லை என்றாலும், முதலில் கொஞ்சம் கொஞ்சம் ரசாயனத்துடன் ஆரம்பித்து வருங்காலங்களில் இயற்கையை நோக்கிய பயணத்தில் முதல்படியாக அமையும்.

பசுமைப் புரட்சி வரமும் சாபமும் கலந்த ஒன்று. அதனால் நாம் பலனும் அடைந்து இருக்கிறோம், தீமையும் அடைந்திருக்கிறோம். சரியான திட்டமிடலுடன் அடுத்த ‘உண்மையான’ பசுமைப் புரட்சிகள் வருங்காலத்தில் வரும் என்ற நம்பிக்கையில் இந்தத் தொடரை முடிக்கிறேன்.

-முற்றும்.

கட்டுரையாளர்: ர.சிவக்குமார், இளமறிவியல் வேளாண்மை இறுதியாண்டு மாணவர்,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மின்னஞ்சல்: aamorsk3210@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here