Skip to content

சிப்பி காளான்- சாகுபடி முதல் சந்தைப்படுத்தல் வரை (பகுதி – 2)

மூலப்பொருள் தயாரித்தல் :

முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு அதை 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும்.  அடுத்து அந்த வைக்கோலை 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும் அல்லது வைக்கோலை 10 கிராம் கார்பென்டாசிம் மற்றும் 100 மில்லி ஃபார்மலின் கலந்த நீரில் 16 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின் வைக்கோலை உலர்த்திக் கொள்ள வேண்டும்.  கைகளால் வைக்கோலை எடுத்து பிழிந்தால் தண்ணீர் வராமல் இருக்க வேண்டும். கிட்டதட்ட 65% ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

காளான் படுக்கை தயாரித்தல்:

காளான் படுக்கைகள் தயார் செய்வதற்கு 60 X 30 செ.மீ அளவுள்ள, 80 Gauge கனமுள்ள பாலீத்தின் பைகளை பயன்படுத்த வேண்டும். பாலிதீன் பையின் அடிப்பகுதியை சணலால் கட்டி அதை உள்பக்கமாக திருப்பிவிட வேண்டும். பாலீதீன் பைக்குள் 5 செ.மீ உயரத்திற்கு நன்கு அழுத்தவும். பின்பு 25 கிராம் காளான் வித்தைத் தூவ வேண்டும். இதில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதைப்போலவே மாறி, மாறி பை முழுக்கவும் ஐந்து முறை செய்யவேண்டும்.  ஐந்து அடுக்குகள் வந்தவுடன் பையை நன்றாக இறுக்கி கட்டிவிட வேண்டும். இதற்கு ரப்பர்பேண்டை பயன்படுத்தலாம். பாலிதீன் மையப்பகுதியில் பென்சில் அளவுள்ள 5-10 துளைகள் போடவேண்டும். பிறகு பாலீதீன் பையை குடிலினுள்   உள்ள பரண் போன்ற இருப்பில் கட்டித் தொங்க விடவேண்டும்.

காளான் வித்து பரவும் முறை:

  • மேற்கூறிய முறையில் தயாரிக்கப்பட்ட உருளைப் படுக்கைகளை வயரில் கட்டி தொங்கவிட வேண்டும்.
  • படுக்கையில் பூசண விதைகள் பரவுவதற்கு 15 நாட்கள் ஆகும். பின் படுக்கைகளைக் காளான் தோன்றும் அறைக்கு மாற்ற வேண்டும்.

செலவு விகித அறிக்கை :

  • ஒரு காளான் பை (12×24 இன்ச்) செய்ய தேவையான செலவு ரூ.40 முதல் ரூ.50 [1.பாலிதீன் பை, 2.வைகோல் 3.காளான் விதை]
  • அந்த காளான் பையில் கிடைக்கும் காளான் அளவு 2.5 கிலோ முதல் 3 கிலோ வரை { இந்த காளான் மூன்று முதல் நான்கு அறுவடையில் கிடைக்கும்} [18ம் நாள் முதல் அறுவடை, அடுத்த 2 அல்லது 3 நாட்கள் இடைவெளியில்  அடுத்த அடுத்த அறுவடை ]
  • 200 கிராம் பாக்கெட் காளான் சில்லரை விற்பனை விலை ரூ.50 முதல் ரூ.60.
  • (1 கிலோ 250 முதல் 300 – சீசன் பொறுத்து விலை அதிகரிக்கும்)
  • சில்லறையாக விற்கும்பொழுது லாபம் ரூ 450 (ஒரு காளான் பைக்கு)
  • அதவாது, 2 கிலோ [ஒரு காளான் பையில் ] சில்லரை விலை – ரூ 500
  • ஒரு காளான் பை உற்பத்தி செலவு ரூ .50.
  • லாபம் = 500-50= ரூ 450 (ஒரு காளான் பைக்கு )
  • 200 கிராம் பாக்கெட் காளான் மொத்த விலை ரூ.27 முதல் ரூ.30.
  • (1 கிலோ ரூ 135 முதல் ரூ 150 – சீசன் பொறுத்து விலை அதிகரிக்கும்)
  • மொத்தமாக விற்கும்பொழுது லாபம் ரூ.220 (ஒரு காளான் பைக்கு) அதவாது, 2 கிலோ [ஒரு காளான் பையில் ] மொத்த  விலை – ரூ.270
  • ஒரு காளான் பை உற்பத்தி செலவு ரூ .50.
  • லாபம் = 270-50= ரூ 220 ( ஒரு காளான் பைக்கு )

காளான் அறுவடை:

விதைத்த பதினைந்து, இருபது நாட்களில் காளான் படுக்கை முழுவதும் வெண்மையான காளான் இழைகள் படர்ந்திருப்பதைக் காணலாம்.  பிறகு சுத்தமான கத்தியைக் கொண்டு பாலித்தீன் பையைக் கிழிக்க வேண்டும். தினமும் கைத்தெளிப்பான் கொண்டு காளான்படுக்கையில் தண்ணீர் தெளிப்பது அவசியம்.

பாலீதீன் பைகளை கிழித்த 3 ஆம் நாளில் காளானின் மொட்டுகள் சிறு திறள் போன்று காணப்படும். இருபத்துமூன்று நாட்களில் காளான் முழுவளர்ச்சி அடையும். தண்ணீர் தெளிக்கும் முன்னரே காளான் அறுவடை செய்துவிட வேண்டும்.

முதல் அறுவடைக்கு பின் ஒரு தகடு போன்ற பொருள் கொண்டு காளான் படுகையை இலேசாக சுரண்டுவிடு வேண்டும் அல்லது பாலிதீன் பைகளின் நான்கைந்து துளைகளை கூடுதலாக இட வேண்டும். ஒவ்வொரு படுக்கையிலிருந்தும் இரண்டு அல்லது மூன்று முறை அறுவடை செய்து பயன்பெறலாம்.  ஒவ்வொரு பையிலிருந்தும் 600 கிராம் வரை காளானை அறுவடை செய்யலாம்.

  • ஒரு வார இடைவெளியில் மீண்டும் காளான் அறுவடைக்கு வரும்.
  • இதுபோல் 3 முறை அறுவடை செய்யலாம்.
  • ஒரு படுக்கை தயார் செய்ய 500 கிராம் வைக்கோல் பயன்படுத்தினால் 900 கிராம் மகசூல் கிடைக்கும்.

மேற்கூறிய முறையில் சிப்பி காளான் வளர்ப்பு செய்து அதிக மகசூல் பெற்று விவசாயிகள் பயனடையலாம். காளான் உற்பத்தி செய்வது என்பது ஒரு கடினமான வேலையில்லை. வருடம் முழுவதும் உற்பத்தி செய்யலாம். ஆனால் கோடை காலத்தில் 30 – 40% மகசூல் குறைவாக கிடைக்கும்.

சந்தைப்படுத்தல் :

அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். 200 கிராம் இருபது ரூபாய் என்ற விலையில் விற்கலாம். ஒரு கிலோ காளான் 100 ரூபாய்க்கும் விற்கலாம். அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு கொடுக்கலாம். காளானைக் கொண்டு பலவித உணவுப்பொருட்களை தயாரிக்கிறார்கள். எனவே இந்த காளான்களுக்கு எப்போதுமே அதிக தேவை உண்டு.  வீட்டிலிருந்தபடியே நமது வருமானத்தை பெருக்கிக்கொள்ள இது ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகும்.

கட்டுரையாளர்:

செல்வி. சௌந்தர்யா காசிராமன், முனைவர் பட்டப்படிப்பு ஆராய்ச்சி மாணவி, தாவர நோயியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,

மின்னஞ்சல் : soundaryakasiraman@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news