Skip to content

மேகாலயா மாநிலத்தில் பெண் விவசாயிகள் அதிகாரம் பெற உதவிய பலாப் பழ சாகுபடி

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பிரபல “The Guardian” இதழில் இந்தியாவின் பலாப் பழம் குறித்த தவறான செய்தி சர்வதேச அளவிலும் நமது நாட்டிலும் பல சர்ச்சைகளை உருவாக்கியது. தவறான புரிதல்களுடன் எழுதப்பட்ட இக்கட்டுரையின் எதிர்வினையாக இந்திய ஊடக உலகில், சமூக தளங்களில் பலாப் பழத்தின் சிறப்புகள் குறித்து பலதரப்பட்ட கட்டுரைகள் வெளியிடப்பட்டது. இத்தகைய சூழலில் அதிகப்படியான எதிர்வினைகள் கேரளா மாநிலத்தில் இருந்து வந்தது. கேரளா மாநிலத்தின் திரிசூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சிகளில் வீடுகளில் ஜூன் 5ம் நாள் உலக சுற்றுச்சூழல் தினத்தை (World Environment Day) முன்னிட்டு அனைத்து வீடுகளிலும், காலியாக உள்ள இடங்களில் ஊர் பொது மக்கள் தென்னை, மா மற்றும் பலா மரங்கள் நட வேண்டும் என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இது ஒரு மக்களின் பங்களிப்புடன் கூடிய ஒரு சமுதாய இயக்கமாக உருமாறி பலா  மர சாகுபடியை விட்டு தோட்டங்களில் பெருக உதவியது.

மேகாலயா மாநிலத்தில் பலா சாகுபடி மற்றும் புதிய விற்பனை முயற்சிகள்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் பலா சாகுபடியின் முக்கியத்துவத்தை தனது பொருளாதாரத்தில் அறிந்து மாநில அரசு கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் வாழ்வுரிமை வாய்ப்புகள் பெருகும் வண்ணம் ஒரு புதிய மாநில கொள்கையின் அடிப்படையில் பலா மரத்தில் உள்ள பலாப் பழங்களைக் கொண்டு பல மதிப்புக் கூட்டிய பொருட்களை பெண்கள் சுய உதவிக்குழுக்களால் உருவாக்கப்பட்டு, விற்பனை பணிகளைத் துவக்கியது. இந்த மதிப்புக் கூட்டு பணிகளுக்கு தேவைப்படும் பலாப் பழங்கள் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. இவ்வாறு பெறப்பட்ட பலாப் பழங்களில் இருந்து பலா சீவல்கள் (Jack Chips), பலா ஊறுகாய் (Jack Pickles),  பலா அப்பளம் (Jack Papads) போன்றவை உருவாக்கப்பட்டு உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் மக்களிடம் பலா மதிப்புக் கூட்டிய பொருட்களுக்கு அதிக வரவேற்பு இருந்த காரணத்தால் தற்போது பல சந்தைகளில், வணிக வளாகங்களில் பலா மதிப்புக் கூட்டிய பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதன்

வாயிலாக கிராமப்புற பல பெண்களுக்கு வேலை வாய்ப்புகள், புதிய வணிக வாய்ப்புகள், அதிக வருமானம் போன்றவை கிடைத்து வருகிறது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பலா மதிப்புக் கூட்டும் பணியில் ஈடுபடும் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மாதந்தோறும் ரூ.8000 வரை வருமானம் பெற்று வருவதாகவும் இத்தகைய உயர்வான வருமானம் தங்கள் கல்வி செலவுகள் மற்றும் ஆக்கப்பூர்வமான செலவுகளுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு பலாப் பழ சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டுதல் வாயிலாக சுய உதவிக்குழு பெண்கள் அதிகளவு வருமானம் பெறுவதன் வாயிலாக மேகாலயா மாநிலத்தின் பெண் விவசாயிகள், பெண் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வாழ்வில் அதிகாரம் பெற பெரிதும் உதவியுதுடன், மேகாலயா மாநிலத்தின் கிராமப்புற வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.

கட்டுரையாளர்:

முனைவர் தி. ராஜ் பிரவின், இணைப் பேராசிரியர், வேளாண் விரிவாக்கத்துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம். மின்னஞ்சல்: trajpravin@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news