Skip to content

உயர்தொழில்நுட்ப தோட்டக்கலையில் பாதுகாக்கப்பட்ட சாகுபடியின் வெற்றிக் கதை

முன்னுரை

உயர்தொழில்நுட்ப தோட்டக்கலை என்பது நவீனமான, கட்டுப்படுத்தப்ட்ட சுற்றுச்சூழலை சார்ந்த, அதிக முதலீடுள்ள, உற்பத்தித்திறனை மேம்படுத்த மற்றும் விவசாயிகளின் வருமானத்தை பன்மடங்காக்கும் ஒரு தொழில்நுட்பமாகும். பாதுகாக்கப்பட்ட சாகுபடியில் பல்வேறு முறைகளில் பசுமை இல்லங்கள் (காலநிலை கட்டுப்பாடு, இயற்கையான காற்றோட்டம், அதிக உற்பத்தித்திறன், உற்பத்தியில் சிறந்த தரம், நாற்றங்கால் வளர்ப்பு மற்றும் தாவரங்களை கடினப்படுத்துதல், சிறந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மகாராஷ்டிராவில் உள்ள உயர்தொழில்நுட்ப தோட்டக்கலை பற்றிய வெற்றிக் கதை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட சாகுபடியின் பரப்பளவு

மகாராஷ்டிராவில் 2005-06 முதல் 2017-18 வரையிலான காலக்கட்டத்தில் தேசிய தோட்டக்கலை திட்டத்தின் (என்.எச்.எம்) கீழ் பாதுகாக்கப்பட்ட சாகுபடியின் மொத்த பரப்பளவு 16025 ஹெக்டேர் ஆகும் (அட்டவணை 1), இதில் பாலித்தீன் மூடாக்கின் பங்கு மிக உயர்ந்தது (65%) அதனை தொடர்ந்து நிழற்கூடம் (17%), இயற்கையான காற்றோட்டம் (10%), விலை மதிப்புள்ள காய்கறிகள் மற்றும் பூக்களின் நடவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான பசுமைக்கூடம் மற்றும் நிழற்கூடம்   (3.89%), பறவை விரட்டும் வலை (1.23%) மற்றும் பசுமைக்கூட அமைப்பு  (0.25%) ஆகியவை அடங்கும் (படம் 1).

அட்டவணை 1:  மகாராஷ்டிராவில் பாதுகாக்கப்பட்ட சாகுபடியின் பரப்பளவு

விவரங்கள் பரப்பளவு (ஹெக்டேர்)
பாலித்தீன் மூடாக்கு 10364
நிழற்கூடம் 2747
இயற்கையான காற்றோட்டம் 1639
விலை மதிப்புள்ள காய்கறிகள் மற்றும் பூக்களின் நடவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான பசுமைக்கூடம் மற்றும் நிழற்கூடம் 964
பறவை விரட்டும் வலை 219
பாலித்தீன் சுரங்கம் 51
பசுமைக்கூட அமைப்பு (விசிறி மற்றும் திண்டு அமைப்பு) 41
மொத்தம் 16025

               

படம் 1: மகாராஷ்டிராவில் பாதுகாக்கப்பட்ட சாகுபடியின் பரப்பளவு (%)

பாதுகாக்கப்பட்ட சாகுபடியை மேம்படுத்துவதற்கான திட்டங்கள்

மகாராஷ்டிராவில் தோட்டக்கலை பயிர்களின் முக்கிய உற்பத்தியாளராக புனே மாவட்டம் உள்ளது. அம்மாவட்டத்தில் ஆறு அரசு மற்றும் 43 தனியார் நாற்றங்கால் பண்ணைகள் பாதுகாக்கப்பட்ட மற்றும் திறந்த வயல் சாகுபடிக்கான நடவு பொருட்களின் தேவையை பூர்த்தி செய்கின்றன.  ரோஜா, ஜெர்பெரா, கார்னேஷன், குடைமிளகாய், திராட்சை, மாதுளை, சீத்தாபழம் போன்றவை இம்மாவட்டத்தில் பயிரிடப்படும் முக்கிய தோட்டக்கலை பயிர்களாகும்.

மகாராஷ்டிரா மாநில வேளாண் சந்தைப்படுத்தல் வாரியம் புனேவின் தலேகான்-தபாடேயில் தோட்டக்கலை பயிற்சி மையத்தை நிறுவியுள்ளது. இதை தவிர மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (MIDC) உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளின் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக புனேவில் உள்ள தலேகானில் 300 ஏக்கர் பரப்பளவில் ஒரு மலர் வளர்ப்பு பூங்காவை உருவாக்கியுள்ளது.

தலேகான் புனேவில் உள்ள மலர் வளர்ப்பு பூங்கா

இந்த பூங்காவில் 102 விவசாயிகளுக்கான அறைகள் உள்ளன, சராசரியாக 1.35 ஹெக்டேர் நிலம், இரண்டு நாற்றங்கால் மற்றும் ஒன்று அறுவடைக்கு பின் தொழில்நுட்ப மையம் உள்ளது.  இது தவிர, அறுவடைக்கு பிந்தைய வசதிகளான தரம், குளிரூட்டல், குளிர் சேமிப்பு மற்றும் பொதி ஏற்பாடுகள் போன்றவை தோட்டக்கலை வணிகத்திற்கு உதவுகின்றன.  பூக்கள் ஏற்றுமதி செய்வதற்கான உகந்த காலம் செப்டம்பர் முதல் மார்ச் வரை ஆகும். அதேசமயம், உள்நாட்டு சந்தையில் ஏப்ரல் முதல் ஜூன் வரை தேவை உள்ளது. ஜூலை முதல் ஆகஸ்டு வரை தேவை மிக குறைவாக உள்ளது. தலேகானில் உள்ள எம்ஐடிசி மலர் வளர்ப்பு பூங்காவில் அமைந்துள்ள ‘பெர்ரி ரோஸஸ்’ மற்றும் ‘பெட்டல்ஸ்’ நிறுவனங்கள் ஜப்பான், ஐரோப்பியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு பூக்களை ஏற்றுமதி செய்து வருகிறது. மொத்த பூக்கள் உற்பத்தியில் 60% தலேகான் ஏற்றுமதி செய்கிறது, மீதமுள்ள 40% வர்த்தகர்கள் மூலம் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.

 

பூங்காவின் வசதிகள்

●       போதுமான நீர் வழங்கல் வசதி

●       தொழில்துறை பகுதிகளின் பராமரிப்பு

●       வடிகால் அமைப்புகள்

●       நவீன போக்குவரத்து வசதிகள்

●       மின்சாரம்

●       தீயணைப்பு நிலையம்

●       குளிர் சேமிப்பு அறைகள்

●       அறுவடைக்கு பிந்தைய சுத்திகரிப்பு நிலையங்கள்

●       சந்தை நிபுணத்துவம் மற்றும் அதனை சார்ந்த வசதிகள்

படம் 2: தலேகானில் உள்ள மலர் வளர்ப்பு பூங்காவின் அமைப்பு

புனே மாவட்ட பூ உற்பத்தியாளர்கள் சங்கம்  இப்பகுதியில் உள்ள பூக்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதில் அறிவையும் தொழில்நுட்பத்தையும் வழங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. இச்சங்கம் உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் இதர இடுபொருட்கள் வழங்குவதோடு மட்டுமல்லாமல், தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கிறது.

பாதுகாக்கப்பட்ட சாகுபடியை மேம்படுத்துவதற்கான மானியம்

தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக 4000 சதுர மீட்டர் பரப்பளவுக்கு (ஒரு ஏக்கர்) இந்த தொழில்நுட்பத்தை செயல் படுத்துவதற்கு மொத்த செலவில் 50% மானியத்தை இந்திய அரசு வழங்குகிறது.

பாதுகாக்கப்பட்ட சாகுபடியில் பயிரிடப்படும் பயிர்கள்

புனே மாவட்டத்தில் உள்ள தலேகான், மாவல் மற்றும் ஹவேலி தொகுதிகளில் பாதுகாக்கப்பட்ட சாகுபடியின் கீழ் வளர்க்கப்படும் பிரபலமான தோட்டக்கலை பயிர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாதுகாக்கப்பட்ட சாகுபடியின் பொருளாதாரம்

தோட்டக்கலை பயிர்களான ரோஜா, ஜெர்பெரா, கார்னேஷன் மற்றும் குடைமிளகாய் ஆகியவற்றின் விளைபொருள்கள் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் அதிக வருமானம் பெறுவதற்காக விற்கப்படுகின்றன (படம் 4). கார்னேஷனில் இருந்து பெறப்பட்ட நிகர வருமானம் ₹ 2.22 லட்சம், அதைத் தொடர்ந்து ரோஜா (₹ 1.64 லட்சம்), ஜெர்பெரா (₹1.63 லட்சம்) மற்றும் குடைமிளகாய் (₹1.04 லட்சம்) ஆகிய குறிப்புகள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. 12% தள்ளுபடி வீதத்துடன் வரவு செலவு விகிதம் மதிப்பிடப்பட்டது, இதில் கார்னேஷன் (1.66) என்ற பயிருக்கு மிக உயர்ந்தது, அதைத் தொடர்ந்து ஜெர்பெரா (1.60) ரோஜா (1.58) மற்றும் குடைமிளகாய் (1.54). ஒட்டுமொத்தமாக, பாதுகாக்கப்பட்ட சாகுபடியின் கீழ் தோட்டக்கலை பயிர்களை பயிரிடுவது லாபகரமானது.

பயிர்

 

மொத்த செலவு (₹. லட்சம் /1000 சதுர மீட்டர்)

 

நிகர வருமானம் (₹. லட்சம் /1000 சதுர மீட்டர்) வரவு செலவு விகிதம்

 

முதலீடு திரும்ப பெரும் காலம் (ஆண்டுகள்)
ரோஜா 4.49 1.64 1.58 2.34
ஜெர்பெரா 4.59 1.63 1.60 2.03
கார்னேஷன் 4.60 2.22 1.66 1.48
குடைமிளகாய் 3.14 1.04 1.54 2.07

முடிவுரை

பாதுகாக்கப்பட்ட சாகுபடியை மேம்படுத்துவதற்காக மகாராஷ்டிரா அரசு பல முயற்சிகளை எடுத்துள்ளது. புனே மாவட்டம் மலர்கள் வளர்ப்பின் முக்கிய உற்பத்தியாளராகவும் மற்றும்  ஏற்றுமதியாளராகவும் உருவெடுக்க எம்ஐடிசி மலர் வளர்ப்பு பூங்கா நிறுவப்பட்டது மிக முக்கிய காரணமாகும். உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் பூக்களின் தேவையை பூர்த்தி செய்ய இதே மாதிரி பகுதிகளில் பூக்கள் வளர்க்கப்படும் பிற மாநிலங்களிலும் இதுபோன்ற திட்டங்களை பிரதிபலிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இது இறுதியில் விவசாயிகள் மற்றும் பிற பங்குதாரர்களின் சமூக பொருளாதார மற்றும் வாழ்வாதார நிலைமைகளை மேம்படுத்த உதவும். முடிவில், ஆத்மாநிர்பார் பாரதத்தின் (Atmanirbhar Bharat) பார்வையில் இந்தியாவில் தோட்டக்கலைத் துறையை உயர்த்துவதற்காக ஆராய்ச்சியாளர்கள்-விரிவாக்க அதிகாரிகள்-தொழில் முனைவோர்கள்-விவசாயிகள் மற்றும் சந்தைப்படுத்தும் நபர்கள் இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு பலப்படுத்துவதன் மூலம் சுய சார்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தியில்  தன்னிறைவை மிக எளிதில் அடைய முடியும்.

மேலும் விவரங்களுக்கு: முனைவர் ப.பிரகாஷ், விஞ்ஞானி, ஐ.சி.ஏ.ஆர்-மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீகாரியம், திருவனந்தபுரம், கேரளா -695017 மின்னஞ்சல்: prakashiari@yahoo.com

கட்டுரையாளர்கள்: முனைவர்கள் ப. பிரகாஷ்1, து. ஜெகநாதன்1, பிரமோத் குமார்2 மற்றும் ஷீலா இம்மானுவேல்1,

1ஐ. சி. ஏ. ஆர் – மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிலையம், திருவனந்தபுரம் 695017, கேரளா

2 ஐ. சி. ஏ. ஆர் – இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையம், புது தில்லி 110012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news