Skip to content

கத்தரியில் நாற்றழுகல் நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட கத்தரி இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளில் பெருமளவில் பயிரிடப்படும் காய்கறியாகும். கத்தரி உற்பத்தியில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.இந்தியாவில் ஆண்டுக்குத் தோராயமாக 128.13 லட்சம் டன்கள் கத்தரி உற்பத்தி செய்யப்படுகிறது. கத்தரியில் பல்வேறு வகையான நோய்கள் தோன்றினாலும் நாற்றழுகல் நோய் மிக முக்கியமான ஒன்றாகும். இந்நோயானது பலவகை காய்கறிப் பயிர்கள், தோட்டப் பயிர்கள், அலங்காரச் செடிகள், காட்டுவகை மரங்கள் போன்றவற்றின் நாற்றாங்கால்களில், இளம் நாற்றுகளைத் தாக்கி, அதிக சேதம் விளைவிக்கக்கூடியது. கத்தரியில் நாற்றழுகல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றியும் இக்கட்டுரையில் பார்ப்போம்.

நோய்க்காரணி

இந்நோயயானது பித்தியம் டிபாரியேனம் மற்றும் பித்தியம் அஃபனிடெர்மேட்டம்  என்ற பூசணத்தால் உண்டாகிறது.

இதன் பூசண இழைகள் மென்மையாகவும், நன்கு கிளைத்தும், நிறமற்றும், குறுக்குச் சுவர்கள் இல்லாமலும், திசுவறைகளின் உள்ளேயும் காணப்படும்.

 

நோயின் அறிகுறிகள்

இந்நோயக்காரணி இரண்டு விதமான நாற்றழுகல் அறிகுறிகளைத் தோற்றுவிக்கக் கூடும்.

(i) விதைகள் முளைத்து, நாற்றுக்கள் நிலப்பரப்பிற்கு மேல் வரும் முன்னரே அழுகி விடுதல்: விதைகள் முளைத்து, விதை இலைகள் தோன்றுவதற்கு முன்னரே நோய்க்காரணிகளால் தாக்கப் படுவதால், முளைக்குருத்து மற்றும் முளை வேர் ஆகியவை வெளிவரும் போதே முழுவதும் அழுகிவிடும். ஆகவே நாற்றுக்கள் நிலப்பரப்பிற்குமேல் வரும் முன்னரே அழுகி மடிந்து விடும். ஆகவே இந்த அறிகுறியானது பெரும்பாலும் வெளியேத் தெரிவதில்லை.

(ii) நாற்றுக்கள்   நிலப்பரப்பிற்கு மேல் வந்தப் பின்னர் அழுகுவது : இந்த அறிகுறிதான் வெளிப்படையாகத் தெரியக்கூடியது. விதைகள் முளைத்து, இளஞ்செடிகள் நிலப்பரப்பிற்கு மேல் வந்துப் பின்னர் அழுகி, ஒடிந்து விழுந்து, மடிந்து விடும். நாற்றுக்களின் தண்டுப்பாகம் கடினமாகும் முன்னரே இந்த அறிகுறிகள் தென்படும். நாற்றுக்களின், நிலப்பரப்பை அடுத்துள்ள, அல்லது நிலத்தின் அடியிலுள்ள தண்டுப்பாகம் நோய்க்காரணிகளால் தாக்கப் பட்டு, அந்தப் பகுதியிலுள்ள திசுக்கள் நீர்க்கசிவுடனும், மென்மையாகவும், கரும்பழுப்பு நிறமாக மாறியும், அந்தப் பகுதியிலிருந்து, ஒடிந்து விழுந்து, பின்னர் நாற்று முழுவதும் அழுகி, மடிந்து விடும். ஒன்று அல்லது இரண்டு நாட்களில் குத்து குத்தாக நாற்றுக்கள் அழுகி, மடிந்து விடும்.

நோய் பரவும் விதமும் பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்

  • நல்ல காற்றோட்டமும், போதிய வடிகால் வசதியும் இல்லாத, கெட்டியான களிப்பு நிலத்தில் இந்நோய் அதிகமாகக் காணப்படும். மண்ணில் அதிகளவு ஈரப்பதமும் 25 – 300  செ.கி. வரையிலான மிதமான வெப்ப நிலையும், நோய் பரவுவதற்கு ஏற்றவை.
  •  நாற்றுக்கள் அதிக நெருக்கமாகவும், நிலத்தில் அதிகளவு அழுகிய கரிமப் பொருட்களும் காணப்படும் போது நோயின் தீவிரமும் அதிகமாகும்.
  • ஊஸ்போர் என்னும் கடின உறை வித்து உறுப்பு, நீண்ட காலம் மண்ணில் முளைப்புத் திறன் மாறாமல் இருந்து மறுபடியும் புதிதாக நோயைத் தோற்றுவிக்கக் கூடியது. இந்நோயக்காரணி மண்ணில் இயற்கையாகவே காணப்படக் கூடிய ஒரு பகுதி இறந்த திசுவாழ் உயிரி. புகையிலை, தக்காளி, மிளகாய், கத்தரி போன்ற பல முக்கியமானப் பயிர்களில் இந்நோயக்காரணிகள் நாற்றழுகல் நோயைத் தோற்றுவிக்கின்றன.

 

நோய்க்கட்டுப்பாடு

உழவியல் முறைகள்

(i) மேட்டுப்பாங்கான, களிப்புத் தன்மையில்லாத, நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்தில் மேட்டுப் பாத்திகளாக நாற்றாங்கால்களை அமைக்க வேண்டும்.

(ii) சரியான அளவு விதைகளை உபயோகப்படுத்தி , நாற்றங்காலில் நாற்றுக்கள் அதிக நெருக்கம் இல்லாதவாறு பராமரிக்க வேண்டும்.

(iii) தேவைக்கேற்றபடி குறைந்த அளவு நீர் பாய்ச்ச வேண்டும்.

விதை நேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு திரம் – 4 கிராம் அல்லது காப்டான்  – 4 கிராம் வீதம், விதைப்பதற்கு குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்னரே கலந்து வைத்திருந்து, பின்னர் விதைக்க வேண்டும். ட்ரைக்கோடெர்ம்மா விரிடே என்ற உயிரி உரத்தை ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் விதைப்பதற்கு குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்னரே கலந்து வைத்திருந்து, பின்னர் விதைக்க வேண்டும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

(i) நாற்றாங்கால் அமைக்கும் நிலத்தில் ஃபார்மலின் மருந்தை 1:50 என்ற விகிதத்தில் நீரில் கலந்து சுமார் 10 செ.மீ. ஆழம் வரை மண் நன்கு நனையுமாறு ஊற்ற வேண்டும். இந்த சிகிச்சையை விதைப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்னதாகவே செய்ய வேண்டும். விதைப்பதற்கு  சில நாட்களுக்கு முன்னர், மண்ணை நன்கு கிளறி விட்டு, மருந்தின்  நச்சுத்தன்மை மண்ணில் இல்லாதவாறு செய்து , பின்னர் விதைக்க வேண்டும். மருந்தின் நச்சு மண்ணில் காணப்பட்டால், விதை முளைப்பு திறன் பாதிக்கப்படும்.

(ii) நாற்றாங்காலில் நோய் தென்பட்டால், ஒரு சதவீத போர்டோ கலவை அல்லது தாமிர ஆக்சிகுளோரைட் பூசணக் கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் மருந்து அல்லது காப்டான் பூசணக் கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.25 கிராம் என்ற விகிதத்தில் கலந்து நாற்றுக்களின் தண்டு மற்றும் வேரைச் சுற்றியுள்ள மண் நன்கு நனையுமாறு ஊற்ற வேண்டும்.

நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்கள்

ப்ளாக் பியூட்டி, பிரிஞ்ஜால் ரவுண்டு, சுரதி போன்ற இரகங்கள் இந்நோயைத் தாங்கி வளரும் திறன் கொண்டவை.

கட்டுரையாளர்:

கு.விக்னேஷ்,

முதுகலை வேளாண் மாணவர் -தாவர நோயியல் துறை,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,

அண்ணாமலை நகர் – 608002

தொடர்பு எண்: 8248833079

மின்னஞ்சல் – lakshmikumar5472@gmail.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news