Skip to content

மீன் அமினோ அமிலத்தின் பயன்கள் மற்றும் தயாரிக்கும் முறைகள்

மீன் கழிவுகளைப் பயன்படுத்தி  தயாரிக்கப்படும் மீன் அமிலம் என்பது அமினோ அமிலங்களையும், நைட்ரஜன் சத்தையும் கொண்ட ஒரு சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகும். மீனில் உள்ள புரதங்கள் நுண்ணுயிர்களால் செரிக்கப்பட்டு அமினோ அமிலங்களாக பிரிகின்றன. இந்த அமினோ அமிலங்களில் நைட்ரஜன் சத்து (தழைச்சத்து) நிறைந்துள்ளது. மீன் கழிவுகள் கிடைக்காத பட்சத்தில் முழு மீன்களையும் பயன்படுத்தலாம். எனினும் முழுமீனை விட மீன் கழிவுகளில் இருந்து தயாரிக்கும் மீன் அமிலம் சிறப்பானதாகும். மீன் அமினோ அமிலத்தை எளிதாக கிடைக்கும் மீன் கழிவுகள், நாட்டுச்சர்க்கரை மற்றும் வாழைப்பழத்தை கொண்டு இயற்கை முறையில் நாமே வீட்டில் தயார் செய்யலாம் .

தேவையான பொருட்கள் :

மீன் கழிவுகள் – 1 கிலோ

பனை வெல்லம் (அ) நாட்டுச்சர்க்கரை – 1 கிலோ

கனிந்த வாழைப்பழம் – 5

தயாரிக்கும் முறை :

  • ஒரு பிளாஸ்டிக் வாளியில் உணவுக்கு பயன்படாத மீன் கழிவுகளுடன், சம அளவு பனை வெல்லம் மற்றும் அதனுடன் நன்கு கனிந்த வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக கலக்கி காற்று புகாமல் மூடி வைக்கவும் .
  • கெட்ட வாயுக்கள் வெளியேறுவதற்காக தினமும் இதனைத் திறந்து மூடவேண்டும்.
  • நாற்பது நாட்கள் கழித்து தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் வாளிக்குள் இருக்கும். இந்த திரவத்திலிருந்து பழவாடை வீசும். இப்படி பழவாடை வீசினால் மீன் அமினோ அமிலம் தயார் என்பதை தெரிந்து கொள்ளலாம் .

பயன்படுத்தும் அளவு :

  • இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம் .
  • ஒற்றை நாற்று நடவாக இருந்தால் 40 ஆம் நாள் ஏக்கருக்கு 1 லிட்டர் அமிலத்தை, 120 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம். சாதாரண நடவுக்கு 25 ஆம் நாளிலிருந்து தெளிக்கலாம். இப்படித் தெளிக்கும் போது தண்டுப் பகுதி உறுதியாக இருக்கும்.
  • கரும்பு பயிருக்கு 250 மில்லி என்ற அளவில் 15 -20 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம் .
  • கம்பு , சோளம் ஆகிய பயிர்களுக்கு 150 மில்லி என்ற அளவில் 15 லிட்டர் தண்ணீர் கலந்து அடிக்கவும் .
  • தீவனப்புல் வளர்ப்பவர்கள் மீன் அமிலம் தெளிப்பதன் மூலம் அதிகமான விளைச்சல் பெற முடியும் .
  • ஒரு முறை தயார் செய்த மீன் அமினோ அமிலத்தை ஆறு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
  • தேவைப்படும் போது இதனை எடுத்துக்கொண்டு, அதன்பின் அந்த பிளாஸ்டிக் வாளியை காற்றுப் புகாமல் மூடிப் பாதுகாக்க வேண்டும் .

பயன்கள் :

  • மீன் அமினோ அமிலம் வளர்ச்சி ஊக்கியாக செயல்படும் தன்மை கொண்டது .
  • பயிருக்கு தழைச்சத்துத் தேவையை பூர்த்தி செய்ய யூரியாவை பயன்படுத்துவதற்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம் .
  • இதனை பூக்கும் தருணத்தில் பயன்படுத்தும் போது பூக்கள் நன்றாக பூக்கும் மேலும் மகரந்த சேர்க்கை நன்றாக நடைபெற்று காய்க்கும் திறன் அதிகரிக்கும் .
  • இந்த அமிலம் சுற்றுச்சுழலுக்கு எந்த விதமான பாதிப்புகளையும், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது .
  • மீன் அமிலம் 75 சதவீதம் வளர்ச்சி ஊக்கியாகவும், 25 சதவீதம் பூச்சி விரட்டியாகவும் செயல்படக் கூடியது.
  • மீன் அமிலம் தெளிக்கும் போது பயிர்கள் நன்கு பச்சைபிடித்து வளரும்.
  • வரப்பு மற்றும் வேலி ஓரங்களில் தெளித்தால் மயில், முயல் மற்றும் எலி தொந்தரவு தெளித்த ஐந்து நாட்கள் வரை இருக்காது, தேவைப்பட்டால் மீண்டும் தெளிக்கலாம்.

 செய்யக்கூடாதவை:

மீன் அமிலம் கொடுக்கப்பட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும், அதற்கு மேல் பயன்படுத்தினால் பயிர்கள் வாடிவிடும்.

கட்டுரையாளர்: ர.நிவேதா, இளமறிவியல் வேளாண் மாணவி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். மின்னஞ்சல்: nivethanishi2304@gmail.com

1 thought on “மீன் அமினோ அமிலத்தின் பயன்கள் மற்றும் தயாரிக்கும் முறைகள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news