மிளகாயில் ஆந்த்ராக்னோஸ் நோயை கட்டுப்படுத்தும் முறைகள்

0
826

மிளகாய், நம் அன்றாட உணவில் தவிர்க்க முடியாத நான்காவது மிக முக்கியமான பயிராகும். இது உலகின் மிக வெப்பமண்டல மற்றும் துணைவெப்பமண்டல பகுதிகளில் பயிரிடப்பட்டு வருகின்றனது. இந்த மிளகாய் பச்சை மற்றும் பழுத்த வரமிளகாயாகவும் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. இது சிவப்பு நிறமாக மாறுவதற்கு காரணம் “கேப்சிசின்” என்ற நிறமியாகும். அதுமட்டுமின்றி மிளகாயிலிருந்து அல்கலாய்டுகள் பிரித்தெடுக்கப்பட்டு அவை மருதத்துவ தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

அந்த மிளகாயினை பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் மற்றும் நூற்புழுக்கள் போன்றவை அதிகளவில் தாக்கி பயிர்களின் வளர்ச்சியை பாதிப்பு அடையச் செய்து மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. அதில் ஆந்த்ராக்னோஸ் என்னும் நோய் இந்தியாவில் பெரும் அளவில் பரவி மிளகாய் பயிர்களை அழித்து வருகிறது.

இந்தியாவில் சாதகமான சுற்றுச்சூழல் நிலை இருப்பதால், இந்த நோய் எளிதாக பரவி பயிர்களில் 84 சதவீதம் வரை இழப்பு ஏற்படுத்தி, பயிர்களின் சக்தியையும், காய்களின் எடையையும் குறைத்து வருகின்றது. இதனால் விவசாயிகளுக்கு மிகவும் பெரிய பின்னடைவு ஏற்படுகிறது.

தற்போது ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை முறைகளான உழவியல், உயிரியல் மற்றும் வேதியியல் நோய் கட்டுப்பாட்டு முறைகளைப் பின்பற்றி எவ்வாறு இந்நோயை கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து கீழே காண்போம்.

நோயின் அறிகுறிகள்:-

நோய் ஏற்பட்ட பயிர்களில் உள்ள பூவானது உதிர்ந்துவிடும். பின்னர் இந்நோய் தண்டு வழியாகப் பரவி கிளைகளின் மூலம் பூவை சென்று அடையும்.

பழத்தொற்று தாக்குகளின் அறிகுறிகள்:

 • இந்த நோய் ஏற்படும் பகுதிகள் இலை, தண்டு மற்றும் பழம் ஆகும்.
 • சிவப்பு நிறமாக உள்ள பழுத்த மிளகாய் பழங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
 • சிறிய கருப்பு வட்டப் புள்ளிகள் பழத்தோலில் காணப்படும்.
 • மோசமான நோயுற்ற பழங்கள் வைக்கோல் நிறம் (அ) வெளிர் வெள்ளை நிறமாக மாறி காரமூட்டும் தன்மையை இழக்கிறது.
 • நோயுற்ற, பழங்களை வெட்டினால் விதை துரு நிறத்தில் பூஞ்சாண் மூலம் பாய்போல் மூடப்பட்டிருக்கும்.
 • மிளகாய் செடிகள் ஆரம்ப கட்டத்தை விட ஆந்த்ராக்னோஸ் (அ) பழ அழுகல் தொற்று முதிர்ந்த பயிர்களில் அதிகமாக இருப்பதை காண முடியும்.
 • இந்த நோய் காற்றில் மற்றும் விதை மூலம் பரவுகிறது. இந்த நோய் விதை முளைப்பு மற்றும் வீரியத்தை அதிக அளவில் பாதிக்கிறது.

நோய்க்கு சாதகமான சூழ்நிலைகள்:

 • மிளகாய் சாகுபடிக்கு மிகவும் சிறந்த காலநிலையான 20 – 25°C வெப்பநிலையும் மற்றும் ஆண்டு சராசரி பருவமழை சுமார் 850 – 1200 மி.மீ தேவை.
 • இந்த வெப்ப நிலை (28°C) மற்றும் ஈரப்பதம் (95 சதவீதம்) நோய் பரவுவதற்கு சாதகமான நிலை ஆகும்.
 • பயிர் சுழற்சி முறையை பின்பற்றாமல் ஒரே ரகத்தை தொடர்ந்து பயிரிடுவதும் இந்நோய் பரவுவதற்கு சாதகமாக உள்ளது.

 

உழவியல் மேலாண்மை

 • நோய்த் தொற்று இல்லாமல் ஆரோக்கியமான பழங்களிலிருந்து மட்டுமே விதைகளை சேகரிக்க வேண்டும்.
 • நோய் ஏற்பட்ட இலை, தண்டு மற்றும் மிளகாய்ப் பழம் சேகரிக்கப்பட்டு அழிக்கப்பட வேண்டும்.
 • நிலத்தில் விதைப்பதற்கு தரச்சான்று பெற்ற விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
 • தேவையற்ற களைகள் மற்றும் தாவரங்களை அகற்ற வேண்டும்.

 

உயிரியல் மேலாண்மை

 • ஒரு ஏக்கருக்கு தேவையான விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் கலந்து விதை  நேர்த்தி செய்ய வேண்டும். பயிர் நடவு செய்தபின் சூடோமோனாஸ் 0 சதவீத கரைசலை 60 வது மற்றும் 75 வது நாளில் தெளிக்கும் போது இந்நோயை கட்டுப்படுத்த முடியும்.

வேதியியல் மேலாண்மை

 • விதை நேர்த்தி செய்ய கார்பன்டசிம் 2 கிராம் / கிலோ (Carbendazim 2g / Kg) பயன்படுத்த வேண்டும்.
 • 1 சதவீத கார்பன்டசிம் (1 கிராம்/லிட்டர்) கரைசலை மூன்று முறை தெளிக்க வேண்டும்.
 • முதல் முறை பூ பூக்கும் முன்பும், இரண்டாவது முறை பழம் உருவாகும் போது மற்றும் மூன்றாவது முறை இரண்டாவது தெளிபுக்கு பிறகு 14 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.
 • விதை நேர்த்திக்கு அசோக்ஸிஸ்ட்ரோபின் 23 சதவீதம் எஸ்சி (Azoxystrobin 23% SC) @ 3 மி/லி மற்றும் அசோக்ஸிஸ்ட்ரோபின் @0.1% கலந்து பயிர்களுக்கு தெளிப்பதன் மூலமும் இந்த நோயை கட்டப்படுத்தலாம்.

கட்டுரையாளர்: ஞா. அக்க்ஷய ஸ்ரீ, உதவிப் பேராசிரியர் (பயிர் நோயியல் துறை) அதியமான் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஓசூர். மின்னஞ்சல் : akshayasri0196@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here