Skip to content

தேனீ வளர்ப்பு பகுதி – 4

தேனீக்களின் சமூக பழக்கவழக்கங்கள்  மற்றும் நடனம்

சமூக பழக்கவழக்கங்கள்

பல நன்மை செய்யும் பூச்சிகளில் தேனீக்கள் மிக முக்கியானவை, இவை பல தலைமுறைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து ஒரே கூட்டில் வாழும் தன்மை உடையதாகும். இவை தமது தகவல்களை பல்வேறு வகையான நடனங்கள் மற்றும் ட்ரோபல்லாக்ஸிஸ் மூலம் பகிர்ந்துகொள்கின்றன.

ட்ரோபல்லாக்ஸிஸ் என்பது உணவு பரிமாற்றம் ஆகும். இது வேலைக்காரத் தேனீ முதல் ராணி மற்றும் ஆண் தேனீக்கள் வரை பொதுவானதாகும். இது உணவு மற்றும் நீர் கிடைப்பது தொடர்பான தகவல் மற்றும் ஈர்ப்பு திரவத்தை (ஃபெரமோன்) மாற்றுவதற்கான ஒரு ஊடகம் ஆகும்.

தேனீக்களின் நடனங்கள்

1788 ஆம் ஆண்டில் ஃபாதர் ஸ்பிட்ஸ்னர் (Father Spitzner) தான் முதல் முறையாக தேனீ நடனங்களை, உறுப்பினர்களிடையே தேன் ஓட்டத்தின் அளவு மற்றும் தேன் மூலத்தின் இடம் பற்றி தொடர்பு கொள்ளும் முறை என்று விவரித்தார். ஃபிரிஷ் (Frisch) (1920) தனது பதிப்பை வெளியிடும் வரை தேனீக்களின் இந்த பழக்கங்கள் கவனிக்கப்படாமல் இருந்தன. 1973 ஆம் ஆண்டில் வெளியான அவரது படைப்பின் அடிப்படையில் இக்கண்டுபிடிற்காக கார்ல் வான் ஃபிரிஷ் (Karl von Frisch) 1973 ஆம் ஆண்டில் உன்னதமான நோபல் பரிசைப் (Noble prize) பெற்றார்.

நடனங்களின் வகைகள்:

          மொத்த தேனீக்களின் எண்ணிக்கையில் 5-35% தேனீக்கள் வழிகாட்டும் தேனீக்களாக செயல்படுகின்றன. இந்த தேனீக்கள் விவசாயப் பகுதிகளில் 100 மீட்டர் மற்றும் வனப்பகுதிகளில் சுமார் 2 கிலோமீட்டர்  வரை பயணம் செய்து தமக்கான உணவை தேடிப் பெறுகின்றன. வழிகாட்டும் தேனீக்களின் பல்வேறு வகையான நடனங்கள் மூலம் மலர்களின் தூரம், திசை மற்றும் தரம் ஆகியவற்றை மற்ற தேனீக்கள் அறிந்து கொள்கின்றன; இதன் விளைவாக மற்ற வேலைக்கார தேனீக்கள் சிறந்த ஆதாரங்களிலிருந்து சிறந்த உணவைப் பெறுகின்றன. வழிகாட்டும் தேனீக்கள் ஆடும் நடனம் இரண்டு வகைப்படும்.

  1. i) சுற்று அல்லது வட்ட நடனம்
  2. ii) உடம்பை வளைத்து ஆடும்வாக்கிள் நடனம்

 

சுற்று அல்லது வட்ட நடனம் (Round dance):

உணவு ஆதாரம் அருகிலேயே இருந்தால் இந்த வகை நடனம் நிகழ்த்தப்படுகிறது (ஏ. மெல்லிஃபெரா – 100 மீட்டருக்குள் மற்றும் ஏ.செரனாவில் – 10 மீட்டர்). முதலில் வழிகாட்டும் தேனீ தான் சேகரித்து வந்த தேனினை கூட்டில் உள்ள மற்ற தேனிக்களுக்கு ஊட்டுகிறது. பின்பு, கூட்டின் உள்ளே வட்டமாக நடனமாட ஆரம்பிக்கிறது; ஒருமுறை வலப்புறம் பின்னர் இடதுபுறம் பின்னர் வலப்புறம் என பல  விநாடிகள் மீண்டும் மீண்டும் இந்த நடனம் அரங்கேற்றப்படுகிறது. இந்த நடனம் தேனீக்களை உற்சாகப்படுத்துகிறது, மேலும் அவை தங்கள் கச்சைகளால் வழிகாட்டும் தேனீயைத் தொட்டு, பின்னர் உணவு மூலத்தைத் தேடி கூட்டை விட்டு செல்லும். இந்த நடனத்தில் உணவின் திசைப் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை, அதனால் அவை எல்லா திசைகளிலும் 100 மீட்டருக்குள் தேடும். வழிகாட்டும் தேனீ ஊட்டிய தேன் மற்றும் அதன் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும் மகரந்த்த்தைப் பயன்படுத்தி மலர் இருக்கும் திசையை அறிகின்றன.

உடம்பை வளைத்து ஆடும்  வாக்கிள் நடனம் (Wag-tail dance):

கூட்டிலிருந்து 100 மீட்டருக்கு மேல் உணவு மூலத்தின் தூரம் இருக்கும்போது இந்த நடனத்தை ஆடுகின்றன. இந்த நடனத்தில் தேனீ, அடையின் ஒரு பக்கத்திற்கு அரை வட்டம் ஒன்றை உருவாக்கும், பின்னர் திரும்பி ஒரு நேர் கோட்டில் பயணித்து தொடக்க புள்ளியை நோக்கி ஓடுகிறது. அதன் பிறகு ஒரு முழு வட்டத்தை முடிக்க எதிர் திசையில், மற்றொரு அரை வட்டத்தில் ஓடுகிறது. மீண்டும் தேனீ தொடக்க புள்ளியை வந்து அடைகிறது. நேராக ஓடுகையில், நடனமாடும் தேனீ தனது முழு உடலையும் அசைத்து ஆடுகிறது; அதனால்தான் இந்த நடனம் வாக்-டெயில் நடனம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இதன் மூலம் உணவு கிடைக்கும் இடத்தையும் அங்கு செல்வதற்கு வேண்டிய ஆற்றல் குறித்தும் மற்ற தேனீக்களுக்கு உணர்த்துகிறது. அதாவது, ஆற்றல் என்பது ஒரு சுற்று சுற்றி வருவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் குறிக்கும். நேர் கோட்டில் ஓடும் திசையால் உணவின் இடம் குறிக்கப்படுகிறது. உணவின் திசை சூரியனுடன் ஒத்துப்போகிறது என்றால், தேனீ வாக்-வால்கள் மேல்நோக்கியும், சூரியனிடமிருந்து விலகி இருந்தால், அது கீழ்நோக்கியும் செயல்படுகிறது. உணவு மூலமானது சூரியனின் இடதுபுறத்தில் இருந்தால், தேனீக்கள் நேர்க்கோட்டுக்கு இடதுபுறத்தில், அதேசமயம் அது சூரியனின் வலதுபுறத்தில் இருந்தால் தேனீக்கள் நேர்க்கோட்டின் வலதுபுறத்திலும் நடனமாடுகின்றன.

 

உணவின் தூரமானது, தேனீ 15 வினாடிகளுக்கு எத்தனை நேர் ஓட்டம் மேற்கொள்கின்றன என்பதை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுகிறது

கூட்டிலிருந்து உணவின் தூரம் (மீட்டர்) நேரான ஓட்டங்களின் எண்ணிக்கை / 15 நொடி.
100 9-10
600 7
1000 4
6000 2

 

…..தொடரும்

 

கட்டுரையாளர்: பா. பத்மபிரியா, முதுநிலை வேளாண் மாணவி, பூச்சியியல் துறை,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம். மின்னஞ்சல்: priyabaluagri@gmail.com

1 thought on “தேனீ வளர்ப்பு பகுதி – 4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news