தமிழ்நாட்டுக்கு ஏற்ற சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் இரகங்கள் (பகுதி-2)

0
24

 

திருச்சி 1: (TRY 1)

இதன் வயது 130-140 நாட்கள். சாயாத இரகம். அரிசி குட்டையாக, பருமனாக, வெள்ளையாக இருக்கும். எக்டருக்கு 5.3 டன் விளைச்சல் கிடைக்கும். இது களர் மற்றும் உவர் நிலத் தன்மையை தாங்கி வளரக்கூடிய நெல் இரகமாகும்.

திருச்சி 3: (TRY 3)

இது 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இரகமாகும். ஏடிடீ 43 மற்றும் சீரகச் சம்பாவை ஆதாரமாகக் கொண்டது. வயது 130-135 நாட்கள். சாய்வதில்லை. அரிசி நடுத்தரப் பருமனாக, வெள்ளையாக இருக்கும். இட்லி தயாரிக்க ஏற்றது. தண்டுத் துளைப்பான், இலைச்சுருட்டுப் புழு மற்றும் குலை நோயைத் தாங்கி வளரும். இது களர் மற்றும் உவர் நிலத் தன்மையை தாங்கி வளரக்கூடிய நெல் இரகமாகும். எக்டருக்கு 5.8 டன் மகசூல் கிடைக்கும். அரவைத் திறன் 82%. முழு அரிசித் திறன் 66%.

கோ 52 (எம்ஜிஆர் 100): (CO 52)

இந்த கோ 52 என்ற நெல் இரகமானது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தினால் 2017  ஆம் ஆண்டு  வெளியிடப்பட்டது. பிபிடி 5204 மற்றும் கோ 50 இரகத்தை ஆதாரமாகக் கொண்டது. வயது 130-135 நாட்கள். நடுத்தர உயரம் கொண்டது. எக்டருக்கு 6.2 டன் மகசூல் கிடைக்கும்.

டிகேஎம் 13: (TKM 13)

இவை திரூர்குப்பம் நெல் ஆராய்ச்சி நிலையத்தினால் வெளிடப்பட்டுள்ள இரகமாகும். இதன் வயது 130 நாட்கள். உயரம் நடுத்தரமாக இருக்கும். நன்கு தூர் கட்டும். சாயாது. அரிசி மத்திமமாக, சன்னமாக இருக்கும். எக்டருக்கு 5.9 டன் மகசூல் கிடைக்கும். ஆயிரம் மணிகள் 13.8 கிராம் இருக்கும். அரவைத்திறன் 75.5%. முழு அரிசித் திறன் 71.7%. சமைக்கும் போது அரிசி நீளும். சோறு உதிரியாகவும் மென்மையாகவும் இருக்கும். இலைச்சுருட்டுப்புழு, குருத்துப்பூச்சி மற்றும் தத்துப்பூச்சித் தாக்குதலை ஓரளவும், குலை நோய், துங்ரோ, செம்புள்ளி மற்றும் இலையுறை அழுகலைத் தாங்கும் திறன் நடுத்தரமாகவும் இருக்கும். இது ஆந்திரா பொன்னிக்கு மாற்றாக வெளிடப்பட்ட இரகமாகும்.

நெல் வி ஜி டி 1: (VGD 1)

இந்த நெல் இரகமானது வைகைடேம் ஆராய்ச்சி நிலையத்தினால் 2019  ஆம் ஆண்டு  வெளியிடப்பட்டது. இதன் வயது 130 நாட்கள். உயரம் நடுத்தரமாக இருக்கும். அதிக தூர்கள்,  சாயாத தன்மை உடையது. அரிசியின் தரம் சீரக  சம்பா அரிசியின் தரத்திற்கு ஒத்துள்ளது. இது சீரக  சம்பா மற்றும் டிகேஎம் 13 இரகங்களை காட்டிலும் அதிக மகசூல் கொடுக்க கூடியதாகும். இந்த  இரகம் பிரியாணி செய்ய உகந்தது. இலைச்சுருட்டுப் புழுவிற்கும், குலை நோய் மற்றும் செம்புள்ளி  நோய்களுக்கும் மிதமான எதிர்ப்புத் தன்மை உடையது. இந்த இரகம் தர்மபுரி, திருச்சி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு ஏற்றது.

வீரிய ஒட்டு நெல் இரகம்

கோ வீரிய ஒட்டு 4: (CORH 4)

இதன் வயது 130-135 நாட்கள். எக்டருக்கு 7.4 டன் விளைச்சல் கிடைக்கும். அரிசி மத்திமமாக, சன்னமாக, வெள்ளையாக இருக்கும். குலை நோய், பழுப்புப் புள்ளி நோயை முழுமையாகவும், இலையுறைக் கருகல், இலையுறை அழுகல் மற்றும் துங்ரோ நோயை ஓரளவு தாங்கியும் வளரும். எனவே தமிழ்நாடு விவசாயிகள் மேற்கண்ட இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்கள் பயிரிடுவதன் மூலம் அதிக மகசூல் மற்றும் அதிக இலாபம் பெறலாம்.

-முற்றும்…

கட்டுரையாளர்கள்: இரா. வினோத்,  வ. பாஸ்கரன், சீ. விஜய்,  ஜோ. மேரி லிசா மற்றும் க. அண்ணாதுரை, வேளாண் கல்வி நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம், குமுளூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம். மின்னஞ்சல்: rvinothagri@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here