Skip to content

நெற்பயிரில் புகையானைக் கட்டுப்படுத்த ஒருகிணைந்த கட்டுப்பாட்டு முறைகள்

உலகிலேயே அதிகபட்ச உணவு உற்பத்தியில், நெல் “இரண்டாவது இடத்தை பிடிக்கின்றது. நெல் மூலமாக ஒருவருக்கு 50% கலோரி கிடைக்கிறது. தானிய வகைகளின் உற்பத்தியிலும், நெல் இரண்டாவது இடத்தை பிடிக்கின்றது, எனினும் 10க்கும் மேற்பட்ட பூச்சிகளின் தீவிர தாக்குதலுக்கு உள்ளாகிறது. இதில் மிக முக்கியமான தாக்குதல்களில் ஒன்றான புகையான் பற்றி இத்தொகுப்பில் காண்போம். இதை ஆங்கிலத்தில் Brown plant hopper (BPH)  என்று அழைக்கிறோம். இது “ஹீமிப்டரா” என்னும் குடும்பத்தை சேர்ந்தது. மேலும் இது 60% நெல் உற்பத்தியை குறைகின்றது.

முட்டை:

பெண் பூச்சியானது வெண்மையான நீண்டு உருண்ட மற்றும் நுனியில் சிறிது பெருத்த 9 முதல் 33 முட்டைகளை குவியலாக இலையின் உரையில் வரிசையாக இடும். ஒரு பெண் பூச்சியானது 200 முதல் 300 முட்டைகள் வரை இடும்.

இளம் குஞ்சுகள்:

முட்டையில் இருந்து ஐந்து முதல் ஒன்பது நாட்களில் இளம் குஞ்சுகள் வெளிவரும். முதல் நிலை குஞ்சுகள் வெள்ளை நிறமாகவும், பின்பு பழுப்புநிறமாகவும் மாறும். 5 வளர்ச்சி நிலைகளை உடைய இவை 13 முதல் 15 நாட்களில் முழு வளர்ச்சி அடைந்து பூச்சிகளாக மாறும்.

பூச்சி :

பழுப்பு நிறமுடைய முழு வளர்ச்சியடைந்த புகையான்கள் தூர்களின் அடி பகுதிகளில் காணப்படும். ஒவ்வொரு பயிர் காலத்திலும் மூன்று அல்லது நான்கு தலைமுறைகள் தோன்றும்படி இதன் வாழ்க்கை சுழற்சி அமைந்துள்ளது. இதன் வளர்ச்சி பருவம் 10 முதல் 20 நாட்களைக் கொண்டது.

தாக்குதலுக்கு சாதகமான சூழ்நிலை:

  • அதிகமான தழைச்சத்து உரங்கள் இட்ட வயல்களில் இதன் தாக்குதல் காணப்படும்.
  • வயலில் தண்ணீர் தேங்கியிருந்தால் இதன் தாக்குதலுக்கு வாய்ப்புகள் அதிகம்.
  • பொதுவாக நெருக்கமாக நடவு செய்யப்பட்ட வயல்களில் போதுமான சூரிய வெளிச்சமானது தூர்களில் படாமல் போவதால், போதிய காற்றோட்டம் இல்லாத சூழ்நிலையிலும் புகையான் தாக்குதல் காணப்படும்.

சேதத்தின் அறிகுறிகள்:

  • இதன் தாக்குதல் பயிரின் ஆரம்பம் முதல் அறுவடை வரை நீடிக்கும். இளம் குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் கூட்டங்கூட்டமாக தூர்களிலும், குத்துக்களின் அடிப்பாகத்தில் காணப்படும். தூர்  பாகத்தைத் தட்டினால் புகையான் பூச்சிகள் பக்கவாட்டில் நகர்ந்து செல்வதைக் காணலாம்.
  • குஞ்சுகளும், தாய் பூச்சிகளும் தரைமட்டத்தில் இருந்து சற்று மேலே பயிரின் தண்டுப் பகுதியில் இருந்துகொண்டு அடிப்பாகத்தை தாக்கி சாற்றை உறிஞ்சுவதால் ஃபுளோயம் செல்கள் மூலம் சத்துக்கள் செல்வது தடைபட்டு நெற்பயிர் முழுவதும் பழுப்பு அல்லது மஞ்சள் நிறமாக மாறி காய்ந்துவிடும். தாக்குதல் அதிகமாக காணப்பட்டால் தண்டுப் பகுதியானது செயலிழந்து ஒடிந்து பயிரானது வலுவிழந்து இறுதியாக மடிந்து சாய்ந்துவிடும் அப்பொழுது தண்டுப் பகுதியில் துர்நாற்றம் வீசும்.
  • மேலும் அவை சாற்றை உறிஞ்சும்பொழுது அதன் நச்சு உமில் நீரானது உட்செலுத்தபடுவதனால் இலைகள் காய்ந்துவிடும்.
  • இதன் தாக்குதல் அதிகமாக இருக்கும் போது வயல்களில் அரை வட்டவடிவமாக பயிர் புகைந்தது போன்று ஆங்காங்கே திட்டுத்திட்டாக காணப்படும்.
  • இந்தப் புகையான் நெற்பயிரில் புல் குட்டை, வாடல் குட்டை ஆகிய நச்சுயிரி வைரஸ் நோய்களைப் பரப்புகிறது.
  • இதன் தாக்குதலால் 10 முதல் 70 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

பொருளாதார சேத நிலை:

  • ஒரு தூருக்கு ஒரு பூச்சி அல்லது ஒரு குத்துக்கு ஒரு சிலந்தி காணப்படும் இடங்களில்  தூருக்கு இரண்டு பூச்சிகள் காணப்படுதல்.

பூச்சி கட்டுப்பாடு:

  • 8 அடிக்கு 1 அடி இடைவெளி இட்டு நடவு செய்து பயிர்களை பிரித்து வைக்கவேண்டும்.
  • தண்ணீர் தேங்கி நிற்காமல் வயலை சீராக சமப்படுத்துதல் வேண்டும்.
  • வயலில் காணப்படும் நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க வேண்டும்.
  • இதன் தாக்குதலின் அறிகுறிகள் தென்பட்ட உடனே வயலில் தேங்கியுள்ள தண்ணீரை சுத்தமாக வடித்து விட வேண்டும்.
  • அதிகமான தழைச்சத்து உரங்கள் இடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் தழைச்சத்து உரங்களை மேலுரமாக 3 அல்லது 4 முறை பிரித்து பயிருக்கு அளிக்க வேண்டும்.
  • வயல்களில் களைகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
  • நெற்பயிர் பூப்பதற்கு முன்பாக 5 சத வேப்பங்கொட்டைக் கரைசல் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
  • புகையானுக்கு எதிர்ப்பு சக்தி மற்றும் மறு உற்பத்தித்திறனை உண்டாக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளான செயற்கை பைரீத்திராய்டுகள், மீதையல் பாரத்தியான், குயினல்பாஸ் போன்ற மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்த்து விட  வேண்டும்.
  • பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் போது அவற்றை  தூர்களின் அடிப்பகுதியில் படுமாறு தெளிக்க வேண்டும் .
  • IR 50 மற்றும் ASD 39 போன்ற இரகங்கள் பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
  • எதிர்ப்பு சக்தி தன்மை கொண்ட இரகங்கள்: PY3, PTB33, CO42, CO46, IR33, IR72, ADT33 போன்ற இரகங்களை பயிரிடலாம்.
  • சகிப்புத் தன்மை கொண்ட இரகங்களான ஜோதி, பாரதி, விக்ரம், சுரேகா, அருணா போன்ற இரகங்களையும் பயிரிடலாம்.
  • தாக்குதல் அதிகமாக இருக்கும் போது இமிடாகுலோபிரிட் 40 மி.லி/ஏக்கர், பிப்ரோனில் 40 மி.லி/ஏக்கர், குளோரான்ட்ரேனி ப்ரோல் 60 மி.லி/ஏக்கர் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

கட்டுரையாளர்கள்: 1. ச.பாலமுருகன். உதவிப்பேராசிரியர் (பூச்சியியல் துறை), பிரிஸ்ட் பல்கலைக்கழகம், தஞ்சை. மின்னஞ்சல்: sbala512945@gmail.com.

2. சி.சக்திவேல், இளநிலை வேளாண் மாணவர், பிரிஸ்ட் பல்கலைக்கழகம், தஞ்சை. மின்னஞ்சல்: duraisakthivel999@gmail.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news