Skip to content

நெற்பயிரைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் பூச்சிக் கட்டுப்பாடு

இந்தியாவில் வாழும் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் நெல் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஒரு ஆண்டில் இந்தியாவில் சுமார் 106.7 மில்லியன் டன் நெல் உற்பத்தி செய்து வருகின்றோம். அயல்நாட்டிற்கும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நெல்லில் ஏறத்தாழ 10 க்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்குதல் ஏற்படுகின்றது. நெல்லின் உற்பத்தியும் இதனால் குறைகின்றது. அதில் மிக முக்கியமான ஒன்று தண்டுத்துளைப்பான் ஆகும். அதைப்பற்றி பின்வரும் தொகுப்பில் காண்போம். இவை முக்கியமாக நெல் பயிரின் தண்டைக் தாக்குகிறது. இது நெற்பயிர் மற்றும் அதனைச் சார்ந்த காட்டு இரகங்களை மட்டுமே தாக்கும், வேறு எந்த பயிரையும் இந்த நெல் குருத்துப் பூச்சி தாக்காது. இதில் தற்போது வரைக்கும் 8 சிற்றினங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

முட்டை :

தாய் அந்துப்பூச்சியானது தட்டையான வெளிர் மஞ்சள் நிறத்தில் 60 முதல் 100 முட்டைகளைக் கொண்ட குவியலை இலையின்  மேற்பறப்பில் நுனியில் இட்டு, அதனை பழுப்பு கலந்த மஞ்சள் நிறரோமங்களைக் கொண்டு மூடி வைக்கும். இதன் முட்டையின் கால அளவானது 5 முதல் 8 நாட்களாகும்.

இளம் புழுக்கள் :

முட்டையில் இருந்து 5 முதல் 8 நாட்களில் வெளிறிய வெள்ளை நிறமும், அடர்ந்த பழுப்பு நிறமுடைய தலையும் கொண்ட இளம் புழுக்கள் வெளிவரும். இந்த இளம் புழுக்கள் தண்ணீரில் நீந்தியும் பக்கத்துத் தூர்களை அடைந்து அவற்றை தாக்கும். புழுப் பருவமானது 28 முதல் 30 நாட்கள் வரை நீடிக்கும். நன்கு வளர்ச்சியடைந்த புழுவானது வெள்ளை அல்லது மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் இருக்கும்.

கூட்டுப்புழு : கூட்டுப்புழுவானது அடர்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். அவை தண்டின் அடிப்பகுதியில் காணப்படும். கூட்டுப்புழு பருவமானது 8 முதல் 10 நாட்கள் வரை நீடிக்கும்.

அந்துப்பூச்சி:

பெண் அந்துப்பூச்சி பழுப்பு கலந்த மஞ்சள் நிறமுடையது. அவற்றின் முன்னிறக்கைகளின் மத்தியில் ஒரு சிறிய கருப்புப் புள்ளி காணப்படும். ஆண் அந்துப்பூச்சியின் முன்னிறக்கைகளில் கருப்புப் புள்ளி காணப்படாது. ஒவ்வொரு பயிர் காலத்திலும் இரண்டு தலைமுறைகள் உண்டாகும்படி இதன் சுழற்சி அமைந்துள்ளது. இவை நெற்பயிரில் குறைந்தபட்சமாக 5 முதல் 10% இழப்பையும், அதிகப்பட்சமாக 90% இழப்பையும் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு சாதகமான தட்பவெப்பநிலை:

குளிர்ந்த கால நிலையுடன் கூடிய அதிக ஈரப்பதம் மற்றும் குறைந்த வெப்பநிலை இதன் தாக்குதலுக்கு சாதகமாக அமையும்.

சேதத்தின் அறிகுறிகள்:

நாற்றங்கால் மற்றும் நடவு வயலில் உள்ள இளம் பயிர்களின் தூர்கட்டும் பருவம் வரை தண்டுகளில் நுளைந்து வளரும் தண்டுப் பகுதிகளை உண்பதால் “நடுக்குருத்து காய்ந்துவிடும் அல்லது “இறந்தகுருத்துகள்உண்டாகும். அதனை பிடித்து இழுத்தால் எளிதாக கையோடு வந்துவிடும். இளம் பயிரின் கீழ்ப்பகுதியில் உள்ள இரண்டாவது கணுவிலும் வளர்ந்த பயிரில் மேல் பகுதியிலலுள்ள  கணுக்களிலும் புழு நுழைந்த துவாரம் காணப்படும். தாக்கப்பட்ட தண்டின் உள்ளே ஒரே ஒரு வெளிர் மஞ்சள் நிற புழு மட்டுமே காணப்படும். துவாரங்களில் புழுவின் கழிவிணையும் காணலாம். பயிர் நன்கு வளர்ந்து பால் பிடிக்கும் பருவத்தில் தாக்குதல் காணப்படும் போது, நெற்கதிருக்கு செல்லும் உணவு தடைப்பட்டு,  நெல்மணிகள் பால் பிடிக்க முடியாமல் வெளிவரும் கதிர்கள் அனைத்தும்   வெண்கதிராக அல்லது சாவியாக மாறிவிடும்.

பொருளாதார சேத நிலை:

இளம் பயிரில் ஒரு சதுர மீட்டருக்கு இரண்டு முட்டை குவியல்கள் இருக்க வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குருத்துப்பூச்சி காணப்படுதல். வளர்ச்சி பருவத்தில் 10% நடுக்குருத்து காய்ந்து விடுதல். 2 சதவீத வெண் கதிர்கள் காணப்படுதல்.

பூச்சி கட்டுப்பாடு முறைகள்:

  • கோடையில் ஆழமாக உழவு செய்தல் வேண்டும்.
  • நெல் பயிரை அறுவடை செய்யும் போது தரை பரப்பினை ஒட்டி அறுத்து பின்பு அடித்தாள்களை நீக்கி விட வேண்டும்.
  • நாற்றுகளை வயலில் நடும்போது முட்டைக் குவியல்கள் உள்ள இலைகளின் நுனிகளைக் கிள்ளி விட்டு நடவு செய்ய வேண்டும்.
  • ஏக்கருக்கு 20 முதல் 25 வரை பறவைகள் உட்காருமாறு குச்சிகளை நட வேண்டும்.
  • இரவில் விளக்குப் பொறி வைத்து வளர்ச்சியடைந்த அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
  • டிரைக்கோகிரம்மா  ஜப்பானிக்கம்- முட்டை ஒட்டுண்ணியை ஒரு ஏக்கருக்கு 5சிசி என்ற அளவில் இருமுறை அதாவது நடவு நட்ட 35 மற்றும் 42 வது நாட்களில் வயலில் வெளியிட வேண்டும்.
  • இனக்கவர்ச்சிப் பொறிகளை நடவு செய்த 10 நாட்களுக்குப் பிறகு ஏக்கருக்கு 5 என்ற அளவில் வைத்து ஆண் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.  பொறியில் இனக்கவர்ச்சி குப்பியை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.
  • வேப்பெண்ணை 3% அல்லது 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசல் தெளிக்க வேண்டும்.
  • வயலில் காணப்படும் நன்மை செய்யும் பூச்சிகளான தரை வண்டுகள்,  ஒட்டுண்ணிக் குளவிகள்,  தட்டான்கள்,  நீர்தாண்டி, நீள்கொம்பு  வெட்டுக்கிளிகள், நீர்மிதிப்போன், இடுக்கிவால் பூச்சிகள் மற்றும் பூச்சி இனம் அல்லாத சிலந்திகள் போன்றவற்றை பாதுகாத்து பெருக்குதல் வேண்டும்.
  • தண்டுதுளைப்பானால் அண்டவிடுப்பைக் குறைக்க பேசிலஸ் துரிங்ஜென்சிஸ்  ஹெக்டருக்கு 2.5 கிலோ பயன்படுத்த வேண்டும்.

கட்டுரையாளர்கள்: 1. சி.சக்திவேல், இளநிலை வேளாண் மாணவர், பிரிஸ்ட் பல்கலைக்கழகம், தஞ்சை. மின்னஞ்சல்: duraisakthivel999@gmail.com.

2. ச.பாலமுருகன். உதவிப்பேராசிரியர் (பூச்சியியல் துறை), பிரிஸ்ட் பல்கலைக்கழகம், தஞ்சை. மின்னஞ்சல்: sbala512945@gmail.com.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news