Skip to content

புதினாக்கீரை பயிரிடும் முறைகள் மற்றும் பயன்கள்

கீரை வகைகளில் ஒன்றான புதினா நல்ல நறுமணம் கொண்ட ஒரு மருத்துவ மூலிகையாகும். கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. புதினா வருடம் முழுவதும் அறுவடை செய்யக்கூடிய பயிர்களில் ஒன்றாகும். இதற்கு காலநிலை எதுவும் கிடையாது. ஆனால் ஜூன் ஜூலை மாதங்களில் நடவு செய்ய சிறந்த பருவம் ஆகும்.

பயிரிடும் முறை:

நிலத்தை நன்கு பண்படுத்தி மக்கிய தொழு உரம் இட வேண்டும். பின்பு சாகுபடிக்கு ஏற்றவாறு பாத்திகள் அமைத்துக் கொள்ளவேண்டும். பாத்திக் கட்டிப் புதினா நாற்றை நடவு செய்ய வேண்டும். இது பொதுவாக பத்தியங்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யக்கூடியது. சிறிது வேர் இருந்தாலும் நன்கு தழைத்து வளரும் தன்மை உடையது. தயார் செய்துள்ள பாத்திகளில் 40 x 40 செ.மீ இடைவெளியில் புதினாவை நடவு செய்ய வேண்டும். புதினா சாகுபடிக்கு உப்பு நீரை பாய்ச்சினால், அது விளைச்சலை பாதிக்கும். எனவே நல்ல நீரை மட்டும் பாய்ச்ச வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சும் போது புதினா நன்றாக வளரும். ஒரு எக்டருக்கு தழைச்சத்து 30 கிலோ, மணிச்சத்து 60 கிலோ மற்றும் சாம்பல் சத்து 10 கிலோ கொடுக்கக்கூடிய உரங்களை அடியுரமாக இட வேண்டும். நடவு செய்த 60 மற்றும் 120 வைத்து நாளில் ஒரு எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து உரத்தை இரண்டு முறை பிரித்து இடவேண்டும். ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் உரமிட வேண்டும். தேவைக்கேற்ப கைக் களை எடுத்து களைகளை கட்டுப்படுத்த வேண்டும். பூச்சித் தாக்குதல் அதிகமாக இருக்காது. சில இடங்களில் வெள்ளைப் பூச்சி அல்லது புருட்டோனியா கருப்புப் புழு தாக்குதல் காணப்பட்டால் இஞ்சிப் பூண்டுக் கரைசல் தெளிக்கலாம். நடவு செய்த 5வது மாதத்தில் முதல் அறுவடையும் அதன் பின்னர் மூன்று மாத கால இடைவெளியிலும் அறுவடை செய்ய வேண்டும். நல்ல முறையில் பராமரிப்பு செய்தால் நான்கு ஆண்டுகள் வரை நல்ல மகசூல் எடுக்கலாம். ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரிலிருந்து 15 – 20 டன் புதினா கிடைக்கும்.

பயன்கள்:

உடலுக்கு நோய் எதிர்புச் சக்தி அளிக்கக்கூடியது. உணவை செரிமானம் செய்யவும், உணவு செரிமானம் சம்மந்தமாக வரும் வெப்பத்தையும் காய்ச்சலையும் நீக்கவல்லது. வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும். மூச்சுத்திணறல் நிற்க புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் அந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் பிரச்னை நீங்கும். புதினாவை உலர்த்திப் போடி செய்து பற்பொடியாக உபயோகப்படுத்தினால் பற்களுக்கு நல்லது. ஈறுகளும் வலிமை பெரும். மஞ்சள் காமாலை, வாதம்,வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

கட்டுரையாளர்கள்:

மு. ஜீவா, முதுகலை மாணவர் (உழவியல் துறை),

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

கோ.சீனிவாசன், முனைவர் பட்ட படிப்பு மாணவர்(உழவியல் துறை),

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Murali Selvaraj

Murali Selvaraj