கால்நடை

திருவள்ளூர் மாவட்டத்தில் 2.80 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி

திருவள்ளூர் அடுத்த, கோவூரில், கோமாரி நோய்த் தடுப்பூசி முகாமை, மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர் சுந்தரவல்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோமாரி நோயானது பசு மற்றும் எருமைகளைத் தாக்கும் வைரஸ் நோயாகும். இந்நோயால் மாடுகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு கால் மற்றும் வாயில் கொப்புளங்களும், மடி காம்புகளில் புண்ணும் உருவாகும். கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறையும். சினை மாடுகளுக்கு சில சமயம் கருச்சிதைவு எற்படும். நோயால் பாதித்த கறவை மாடுகளில் பால் குடிக்கும் கன்றுகள் இறக்க நேரிடும். எனவே, கோமாரி நோயை தடுப்பதற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாடுகளுக்குத் தடுப்பூசி போடப்பட வேண்டும்.

திருவள்ளுர் மாவட்டத்தில், இதுவரை 13 சுற்று தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. தற்போது, கால்நடை பராமரிப்புத் துறையினரால் 14வது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் வரும் 21ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

தடுப்பூசி போடப்படாமல் விடுபட்ட கால்நடைகளுக்கு மார்ச் 22 – 31 வரை, தடுப்பூசி போடப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் 84 கால்நடை மருந்தகங்கள், 25 கால்நடை கிளை நிலையங்கள், ஐந்து கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. 73 கால்நடை மருத்துவக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

முகாமில், 2,25,028 பசுக்கள், 55,322 எருமையினங்கள் என, மொத்தம் 2,80,350 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. கால்நடை மருத்துவக் குழுவினர் அனைத்து கிராமங்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு வருகை தர உள்ளனர். அச்சமயத்தில் விவசாயிகள், தங்களது பசு மற்றும் எருமை மாடுகளுக்குத் தடுப்பூசி போட்டு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 Comment

1 Comment

  1. Undefined

    September 11, 2018 at 11:30 pm

    nice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படிக்கப்பட்டவை

To Top