மருத்துவ குணங்கள்

தும்பையும் தமிழரும்..!

இருபெரும் வேந்தர்களும் நாள் குறித்து, பொதுவிடத்தில் போர் செய்தல் தும்பைத் திணை ஆகும். இவ்வீரர் இரு பக்கத்தவர்களும் தும்பைப் பூமாலை சூடிப் போர் செய்வர். மேலும் சங்கத்தமிழில் தும்பைச் செடி, தும்பைப்பூவைப் பற்றி ஏராளமான குறிப்புகள், தமிழரும் தும்பைச்செடியும் எப்படி இரண்டறக் கலந்து வாழ்ந்தனர் என்பதை இன்றும் பறைசாட்டுகிறது.

தமிழகமெங்கும், கிராமங்களில் சாதாரணமாகக் காணப்படும் செடி வகைகளில் தும்பைச் செடியும் ஒன்றாகும். பச்சைப்பசேல் நிறத்தில், கத்திபோல் நாலாபுறமும் நீட்டிக் கொண்டிருக்கும். கரும்பச்சை நிறமான இலைகள், நான்கு பக்கங்களைக் கொண்ட தண்டு, நடுவில் மஞ்சரித் தொகுப்பில் சுற்றி மலர்ந்துள்ள வெண்மையான, தேன்சத்து நிறைந்த நாக்கு வடிவ மலர்கள் இவற்றைக் கொண்டு தும்பைச் செடியை அனைவரும் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

பெரும்பாலும் மணற்பாங்கான நிலத்திலேயே தும்பை விரும்பி வளர்கின்றது. விவசாய நிலங்களில் இந்தச் செடி மழைக்காலங்களில் மிகச் சாதாரணமாகக் காணப்படும். முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. தும்பை இலை, பூக்கள் மருத்துவப் பயன் அதிகமானவை. தும்பை மலர்களில் உற்பத்தியாகும் தேனைக் குடிக்க எப்போதும், எறும்பு, வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பிறவகைப் பூச்சிகள் காத்துக் கொண்டிருக்கும். தும்பை செடியைப் பிடுங்கினால் எளிதில் வேருடன் வந்துவிடும். வேரில் மண் ஒட்டாமல் வெண்மையாகவே காணப்படுவது தும்பையின் சிறப்பு அம்சமாகும். மேலும், எளிதாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரவும் தன்மையுடையது.

கடவுள் வழிபாட்டிற்கு தும்பைப் பூக்கள் பயன்படுகின்றன. காலையில், புதிய பூக்கள் சேகரிக்கப்பட்டு, மனத் தூய்மையின் அடையாளமாக வணங்கப்படுகின்றன. முருகக் கடவுளுக்குத் தும்பை மலர்களால் சிறப்பாக அர்ச்சுனை செய்யப்படுவதுண்டு. இப்படியான தும்பைச்செடிகள் இன்று இல்லாமற்போய் வருகின்றன. தமிழரின் வாழ்வாதாரமும் முன்னேற்றமும் சீரழிவதற்கு, தும்பைச் செடிகள் ஒழிந்து வருவதே காரணமாகும்

தும்பைச்செடிகள் இருக்கிற இடத்தில் வண்ணத்துப்பூச்சிகள் வெகுவாக இருக்கும். வண்ணத்துப்பூச்சிகள் வெகுவாக இருக்கும் இடங்களில் மகரந்தச்சேர்க்கை விரைவாகவும் செறிவாகவும் இடம் பெறும். அயல்மகரந்தச் சேர்க்கையானது காடுகள் செழித்திருக்க இன்றியமையானதாகும். காடுகளும் மரங்களும் செழிக்கும் போது அதனதன் பருவம் தவறாமல் மழை பொழியும். பருவந்தப்பாத மழையிருந்தால், தமிழரின் வாழ்வாதாரமான வேளாண் தொழில் சிறப்புறும் தமிழர் வாழ்வு செழித்திடவும், இனப்பெருமை காத்திடவும் தும்பைச்செடிகளை பாதுகாக்க முன் வருவோம். எனவேதான் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னமே வாழ்வியலின் ஒரு கூறாய் தும்பையை வைத்தான் ஆதித்தமிழன்.

தும்பை காப்போம்! தமிழர் வாழ்வாதாரம் மீட்டெடுப்போம்!!

#SaveThumbai

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படிக்கப்பட்டவை

To Top