Skip to content

விவசாய நூல் – ஜந்தாம் அதிகாரம்

நிலமும் அதன் உற்பத்தி அமைப்பு முதலியன.

நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை

பசுமரத்தின் வேருக்கு நெக்கு விடும்.

    வெவ்வேறு ஜில்லாக்களிலும், கிராமங்களிலும், ஒரே கிராமத்தில் வெவ்வேறு புலன்களிலும் உள்ள நிலங்கள் தங்கள் குணத்திலும், வளப்பத்திலும் வித்தியா சப்படுகின்றன வென்பது யாவரும் அறிந்தவிஷயம். இவ்வேறுபாடுகளால் சில நிலங்கள் ஒர்விதப் பயிரைப் பயிரிடுவதற்கும் இன்னும் சில நிலங்கள் வேறுவகைப் பயிரைப் பயிரிடுவதற்கும் தகுதியாகின்றன. வெகுவாய்ப் பலவகை மண்களின் உற்பத்தியினாலும். சிறிதளவு நிலங்களின் ஸ்தானத்தினாலும் மேற்குறித்த பேதங்கள் உண்டாகின்றன. ஏறக்குறைய எல்லா மண்ணாக மாறியிருக்கும் கல்லின் அணுக்கள் இதர பொருள்களுடன் சேர்ந்து அநேக மாறுதல்களை அடைந்தபோதிலும், அந்நிலங்களின் இயற்கைக்குணம், அவைகளின் உற்பத்திக்குக் காரணமான பாறைக்குத் தகுந்தவாறு பேதப்படுகின்ற தென்பது தெளிவாகும்.

    மிக உறுதியான கற்கள்கூட கால சுபாவத்தால் (காற்று, மழை, வெயிலால்) நாளடைவில் தேய்ந்துபோம். திருஷ்டாந்தமாக, வெகு நாளாயுள்ள புராதனமான கோவிலிலும், மசூதியிலுமுள்ள கற்சுவர்களில் வெட்டி எழுதப்பட்டிருக்கும் வாசகங்களைப் பரிசோதித்துப் பார்க்கையில் முழுவதும் அழிந்துபோகாமல் சொற்ப மீதியிருக்கும் எழுத்துக்கள் கூட பாதி அழிந்துபோயிருப்பதால் அவ்வெழுத்துக்களைப் படிப்பதற்குப் பிரயா சமாயிருக்கும். அக்கற்கள் மிகக் கெட்டியாயிருந்தாலொழிய அவ்வெழுத்துக்கள் சொற்ப காலந்தான் அழியாமலிருக்கும். பொதுவாய்ப் பயிர்வகைகள் கற்பாறைகளில் வளரமாட்டா. ஆனால் நிலத்தில் படிந்திருக்கும், மிருதுவாயும் இளக்கமாயுமுள்ள புரையாகிய மண்ணில் அவைகள் வளர்கின்றன. இம்மண்ணைப் பரிசீலனை பண்ணினால் பொடியாக்கப்பட்ட கல்தூளுக்கு மிகவும் ஒத்திருப்பதாகத் தெரியவரும். உதாரணமாக:- தரையைப் பசுமாட்டுச் சாணத்தால் மெழுகினபிற்பாடு, விசித்திர கோலங்களை இடுவதற்கு அநேகம் இந்துக்கள் வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும் கோலப்பொடிக்கல்லைப் பொடியாக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு அதிக தண்ணீரை விட்டு நன்றாய்க் குலுக்கினால் ஜலம் கலங்கி அழுக்காய்விடும். இக்கலக்கமான தண்ணீரை வெளியே கொட்டிச் சுத்தமான ஜலத்தைச் சேர்த்துத் திரும்பியும் பாத்திரத்தைக் குலுக்கித் தண்ணீரிலுள்ள அழுக்குப் போகிறவரையில் இவ்வாறு திரும்பத் திரும்பச் செய்துவந்தால், கடைசியில் சில கெட்டியான சுணையுள்ள அணுக்கள்மாத்திரம் பாத்திரத்தில் தோன்றும். இதுதான் மணல். சேற்றுநீரை வெளியே கொட்டினாலும், அதை வேறொரு பாத்திரத்தில் ஊற்றித் தங்கவைத்தாலும், கொஞ்சமளவு மிருதுவாயும் பிசுபிசுப்புள்ள மண் காணப்படும். இது களிமண். இவ்வாறு ஒர் கல்லை மணலாகவும் களிமண்ணாகவும் பிரிக்கலாம். பின்னும் கொஞ்சம் மண்ணையெடுத்து மேற்குறித்தவண்ணம் கழுவினால் அதுவும் அநேகம் கற்களைப்போல மணலாகவும் களிமண்ணாகவும் பிரிபடுவதைப் பார்க்கலாம். ஆயினும், சில கற்களைத் தூளாக்கினால் உளி முதலிய கருவிகளைத் தீட்டுவதற்குத் தச்சனால் உபயோகப்படுத்தப்படும் பொடிபோன்றமணல் மாதிரிக் கிடைக்கின்றது. வேறு சில கற்களைத் தூளாக்கினாலே களிமண் மாத்திரம் அகப்படுகின்றது. நிலத்தின் குணம், மண்ணில் கலந்துள்ள மணல், களிமண் ஆகிய இவைகளின் பரிமாணங்களால் வேறுபடுகின்றது. இப்பரிமாணங்களோ மண்ணிற்கு ஆதாரமான கற்களால் நிர்ணயிக்கப்படுகின்றது.

    கல்தூளை, மண்ணுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மண் அதிக கருமை நிறமுள்ள தாயிருப்பதாகத் தெரியவரும், கொஞ்சம் மண்ணை எடுத்து. ஒரு பாத்திரத்தில்போட்டு அடுப்பின்மேல் வைத்துச் சிவக்கக் காய்ச்சி அதைப் பிறகு குளிரச் செய்வதினால் அது பொதுவாய் முன்னிலும் மங்கல் நிறமாயும் குறைந்த பளுவுள்ளதாயு மிருக்கும். இதனால் மண்ணில் சில பாகம் எரிந்து போகப்பட்டிருப்பதாகத் தெளிவாகிறது. இவ்வாறு எரிந்து போன பகுதியில் நிலத்தில் வளர்ந்து இறந்துபோன சிறிய ஜீவஜந்துக்களும் சில தாவரங்களும் அழுகிமட்கின பொருள்களும் அடங்கியிருக்கின்றன. மண்ணில் எரிந்து வெளிச்சென்ற பாகத்திற்கு இந்திரவஸ்து வென்றும் பின்னால் தங்குவதற்கு அநிந்திரவஸ்துவென்றும் பெயர், இவ்வாறு, மண் களிமண், இந்திரவஸ்து ஆகிய பொருள்கள் வெவ்வேறு பரிமாணங்களாக இருக்கின்றன. கற்களைத் தூள் செய்து மண் ஆக்குவதற்குச் சாதனமாயுள்ள மார்க்கங்கள் பலவற்றுள் பின் வருபவை சில உள. அவையாவன:-

  • கற்களை மாறி மாறி உஷ்ணப்படுத்தலும் குளிர்ச்சியாக்கலும்.

  • ஜலத்தால் ஊறி நனையும்படி செய்வது.

  • கற்களிலுள்ள சில தாதுப்பொருள்களில் காற்று உட்சென்று அவற்றுடன் கலப்பதும்.

  • ஒடுந்தண்ணீரால் அடிக்கடி மோதப்பட்டுக் கற்கள் அறைபடுதலும்.

  • தாவரங்களின் வேர்களால் பிளவு படுதலுமேயாம்.

    ஒர் பாறாங்கல்லில் நெருப்பு வளர்த்து எரித்துச் எரித்துச் சூடானவுடன் அதன்மேல் குளிர்ந்த ஜலத்தை வார்த்து அதை வெகு விரைவில் குளிரப்படுத்தினால் அது அநேகயிடங்களில் வெடிக்கிறது. பாறைகள் சூரிய வெப்பத்தால் உஷ்ணிக்கப்பட்டுக் குளிர்ந்த மழையால் உடனே குளிர்ச்சியடைவதிலும், வெயில் உக்கிரமாயுள்ள பகலுக்குப்பிறகு குளிர்ச்சியான இரவுகள் வருவதிலும், மேற்கூறியவண்ணம் சிலவாறு சம்பவிப்பதைக் காணலாம். பிறகு நாளடைவில் அவ்வாறு விரைவாயும் இடைவிடாமலும் சம்பவிக்கும் மாறுதல்களால் பாறைகள் அநேக துண்டுகளாகப் பிளவுபடுகின்றன.

     மழைஜலம் பாறையில் விழுந்தவுடன், அது அதற்குள் கொஞ்சம் ஊறி நனைந்து அதை மிருதுப்படுத்துகிறது. இதுகாரணத்தால் பாறைகள் மற்றச் சாதனங்களால் சுலபமாய் உடையும்படியான நிலைமையை அடைகின்றன. உறைபனி கடுமையாயுள்ள பிரதேசங்களில் அவ்வுறைபனியே பாறைகளை உடைப்பதில் வெகு வலுவுள்ளவைகளில் ஒன்று. அந்நாடுகளில் பாறை வெடிப்புகளுக்குள் தேங்கியுள்ள ஜலம் உறையும்போது, அதிக இடம் வேண்டுவதால் கற்களைப் பிளக்கின்றது.

     ஆற்றங்கரைகளில் சாதாரணமாய்ப் பாறைகளின் மேற்புறம் மிருதுபட்டு வட்டவடிவை யடைந்து அதில் அநேகம் சிறிய கோடுகளும் குழிகளும் உண்டாக்கப்பட்டிருப்பதைக் காணலாம். நதிகள் மேல்இடங்களிலிருந்து ஒடிச் செல்லும்போது உடைந்த கற்களையும் கல்தூளையும் கொண்டுவருவதால் இவ்வாறு நேரிடுகிறது. மணலும் கற்களும் ஆற்றுத்தரை வழியாகவும் ஒடை வழியாகவும் ஜலத்தால் அடித்துக்கொண்டு வரப்பட்டு அவைகள் செல்லும் தரையில் கிடக்கும் பாறைகளைச் சால்களாகவும் குழிகளாகவும் அறைத்து அப்பாறைகளின் மேற்புறத்தையும் மிருதுவாக்கி அதனால் அதிக கல்தூள்களையும் உண்டாக்குகின்றன. இத்தோற்றம் சிறு நீரருவிகளிலும் காணலாம். தவிர ஜலம் கல்தூள்களை மணலாகவும், களிமண்ணாகவும், பிரிப்பதையும் பார்க்கலாம். பெரும்பாலும் களிமண், விசேஷமாய் நீரோட்டம் விரைவாயிருக்கும்போது ஜலத்தோடுகூடக்கரைந்து அத்துடனேயே செல்லுகிறது. நீரோட்டம் மிக விரைவாயும் பலமாயுமிருந்தால்மட்டுமே மணலும் நீருடன் கலந்து செல்லும்; அன்றியில் அது ஆற்றின் அடியிற் போய்ச் சேர்ந்து மிக மெதுவாய் ஒடும் ஜலத்தால் தள்ளப்படுகிறது. இவ்வாறு ஒடுந்தண்ணீரால் மேற் குறித்த பொருள்கள் பிரிக்கப்படுகின்றன. இதைப் பற்றி மறுபடியும் சொல்வோம்.

     ஒரு இரும்புத்துண்டை வெளியே காற்றாடப் போட்டிருந்தால் அதன் மேற்புத்தில், விசேஷமாய் ஆகாயம் நமிர்ப்பாயிருக்கும்போது, கபில நிறம் துரிதமாகப் படிகிறது. நாளடைவில் ஊதா நிறமுள்ள பொடியான செதிள்கள் வெளியே உதிருகின்றன. இம்மிருதுவான பொடிக்கு இரும்புத்துரு என்று சொல்லுவார்கள். அது, இரும்புடன் காற்று சேர்வதால் உண்டாகின்றது. அநேக பாறைகளும் வெளிப்புறத்தில் கபில நிறமாயிருப்பதைக் காணலாம். இது அவைகளிலுள்ள இரும்பு துருப்பிடிப்பதால் உண்டாகின்றது.

    ஏறக்குறைய எல்லாப் பாறைகளிடத்தும் அநேக பிளவுகள் இருக்கின்றன. அப்பிளவுகளுக்குள் காற்று பிரவேசிப்பதால் அது பாறையின் வெடிப்புகளுள் அநேக இடங்களில் தாக்குகிறது.

    மழைஜலம் இப்பாறைகளில் விழுந்தவுடன், அது துருப்பிடித்த பாகத்தின் சிலவற்றை அடித்துச் சென்று, பாறையின் மற்றோர் பாகத்தை ஆகாயத்திற்கு வெளிப்படுத்தி அதையும் துருப்பிடிக்கச் செய்கிறது.

[துருப்பிடித்தல்” என்ற தனிப்பதம் எளிதில் அறிந்துகொள்வதற்கு உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. வாஸ்தவமாக நடப்பது என்னவெனில். ஆகாயத்தின் ஒர் பாகமாகிய பிராணவாயு இரும்புடன் கலந்து ஒரு புதிய பொருளாகிறது. மேலும் பிராணவாயுவாகிய இக்காற்று இதர பொருள்களுடனும் சேர்ந்து பாறைகளை உடைப்பதற்குச் சாதனமாகின்றது.]

    இவ்வாறு இடைவிடாமல் நடந்துகொண்டேவருகிது. நாளடைவில் பாறை தன் அணுக்களின் சிலவற்றை இழந்து மிருதுபட்டுத் தூளாகிறது. இவ்வாறு சம்பவிப்பதால் முன் விவரித்தவண்ணம் ஒடுகிற ஜலத்தின் சக்தியால் மிக எளிதில் அது மாறுபடுகிறது.

     பாறைகளில் தோன்றும் சில பொருள்கள், சாதாரண உப்பும் சர்க்கரையும்போல், ஜலத்தில் வெகு சுலபமாகக் கரையுந்தன்மையுள்ளன. வேறு சில பொருள்கள் வெகு மெதுவாய்ப் கரைகின்றன. மேலும், அவைகள் அவ்வாறு கரைவதற்கு ஏராளமான ஜலம் வேண்டியிருக்கிறது. இன்னும் வேறு சில பொருள்கள் ஆகாயத்தில் இருக்கும் கரியமிலவாயு (Carbonic acid gas) என்று கூறப்படும் பொருளின் உதவியால் ஜலத்தில் கரைபடும். கரியமிலவாயு நமது கண்ணுக்குப் புலப்படாவிடினும் ஆகாயத்திலிருப்பதாகச் சுலபமாய் நிரூபிக்கக்கூடும். மனிதர்களும், ஜீவராசிகளும் வெளியேவிடும் மூச்சுக்காற்றில் இவ்வாயு இருக்கிறது. விறகையாவது, கரியையாவது எரித்தால் கரியமிலவாயு உண்டாகிறது. இவ்விருவிதங்களில் தோன்றும் கரியமிலவாயு சுற்றுப்புறத்திலுள்ள ஆகாயத்தில் கலக்கிறது.

     மழை பொழியும்போது கரியமிலவாயு கொஞ்சம் ஆகாயத்திலிருந்து அடித்துக்கொண்டு வரப்பட்டுக் கற்களுக்குள்ளாவது மண்ணிற்குள்ளாவது செல்லுகின்றது. பிறகு அவ்விடத்துள்ள பொருள்களில் சிலவற்றுடன் கலந்தும், வேறு சிலவற்றைக் கரைத்தும்,கடினமான பாறைகளின் மேற்புறத்தைக் கவனித்துப் பார்த்தால் அவைகளில், மிக நுட்பமான புல் பூண்டு செடிவகைகள் வளர்வதைக் காணலாம். வெறுங் கண்ணுக்குப் புலப்படும் இத்தாவரங்கள் தோன்றும் முன் பூதக்கண்ணாடியினாலே இன்னும் மிக நுட்பமான பொருள்களையும் பார்க்கக்கூடும் கற்களைப் சாதாரணமாக மிருதுவாக்கி வெகு எளிதில் ஜலம் அக்கற்களைக் கரைத்து அடித்துக்கொண்டு போகும்படி செய்கின்றது.

[புதிதாய்ச் சுடப்பட்ட சுண்ணாம்புக்கல் அல்லது கிளிஞ்சல் இவைகளை அதிகமான ஜலத்தில் போட்டு ஆற்றும்போது சுண்ணாம்பு கொஞ்சம் கொஞ்சமாக அடியில் தங்கி மேலே ஜலம் தெளிவு அடைகிறது. இத்தெளிவான சுண்ணாம்புத்தண்ணீரின் சொல்ப அளவை ஒரு கிண்ணத்தில் ஊற்றித் துவாரமுள்ள இறகு அல்லது நாணல்போன்ற ஒரு சிறு குழல் மூலமாய் அதற்குள் ஊதினால் ஜலம் உடனே பால்போன்ற நிறத்தை அடைகிறது. நாம் வெளிவிடும் சுவாசத்தில் தோன்றும் கரியமிலவாயு ஜலத்திலுள்ள சுண்ணாம்புடன் கலப்பதால் இப்படிச் சம்பவிக்கிறது.]

     தமிழ்ப்பாஷையிலுள்ள ஒர் செய்யுளாகிய நல்வழியில் கூறியபடி மேற்குறித்த செடிவகைகளின் வேர்களால் பாறைகளின் மேற்புறம் கொஞ்சமளவு பிளவுபடுகின்றது. ஒர் மரத்தின் வேர்களால் பாறைகள் எவ்வாறு பிளவுபடுமென்பது கெட்டியாய்க் கட்டப்பட்டுள்ள சுவரில் மரம் வேரூன்றிப் பிளக்கும்வகையால் அறியலாம். வேர்கள் சுவரினுள் நுழைந்துசென்று, வளர்ந்து, பருமனில் அதிகரித்து சுவரை நாளடைவில் அநேக துண்டுகளாக வெடிக்கச் செய்கின்றன. சுவரின் கட்டடம் மிக உறமுள்ள பசையான சிமட்டி (Cement) சாந்தால் கட்டப்பட்டிருந்தபோதிலும், அதிலுள்ள கற்கள் இவ்வாறு வெவ்வேறாகப் பிரிவுபடுகின்றன. முதலில் மிக நுட்பமான புல் பூண்டுகள் பாறையில் வளர்ந்து தங்கள் தொழிலை முடித்து நசித்தவுடன் கொஞ்சம் பெரிய செடிகள் முளைத்து அவைகளும் தங்களுக்குரிய வேலையை நடத்தி மடிகின்றன. இவைகளுக்குப்பின் இன்னும் பெரிய செடிகள் உண்டாகி அவைகளும் வளர்ந்து கீழே தள்ளுண்டு நசிகின்றன. இவ்வாறு கடைசியில் பாறை அநேகம் துண்டுகளாக உடைபட்டுத் தூளாகி அதில் வளர்ந்து இறந்து மட்கிக்கிடக்கும் அநேக கணக்கற்ற தாவரங்களுடன் கலந்து பயிரிடுதற்குத் தகுந்த மண்ணாய்விடுகிறது.

      ஆயினும் , மண் எப்போதுமே அது உண்டாகும் இடத்திலுள்ள பாறையின்மேலே படிந்துகிடப்பதில்லை. மண் அவ்வாறு தங்கியிருந்தால் அது ‘தங்கும் மண்’ (Sedentary soli)என்று கூறப்படும். ஆனால் ஒடும் ஜலத்தில் ,அதிக நுட்பமாயுள்ள கல் அணுக்கள் அடித்துக்கொண்டு போகப்படுதலால் மேற்குறித்த மண்வகைகள் அவைகளுக்கு மூலாதாரமானதாய்ப் பாறையை மிக மெல்லிய புரையாய்ச் சாமான்னியமாய் மறைத்து, அநேகமாகப் பெருங்கல்லோடும், ஜல்லியோடும் கலக்கப்பட்டே இருக்கின்றன. இவ்வகை மண்களில் சாதாரணமாய் நயமான மண் அதிக சொற்பமா யிருப்பதாலும். பயிர்களின் வேர்கள் தரைக்குள் வெகு ஆழம் பிரவேசிக்க முடியாமல் கல்தரையை வெகு சீக்கிரம் எட்டுவதாலும், அவைகளில் பயிர்வகைகள் செழிப்பாய் வளரமாட்டா. இம்மண்ணணுக்கள் பருமனாயிருப்பதால் மழை ஜலம் விரைவில் அவைகளின் வழியாய் ஒடிச் சீக்கிரம் உலர்ந்துபோகிறது. உள்நாட்டில், மேட்டுப்பாங்கான இடங்களில், அம்மண்வகைகள் வெகுவாய்க் காணப்படும். அவைகள் படிந்துள்ள பூமிகளிலே பூர்வீகப் பாறைகளின் அநேக பாகங்களையும் காணலாம்.

      மேற்குறித்ததைவிட மண்வகையினுள் அதிக சாமானியமானது )) என்று கூறப்படுவதே. இவ்வகை மண்கள் அவைகள் இருக்குமிடத்திலிருந்து வெகுதூரத்திற்கு அப்பால்கிடக்கும் பாறைகள் பிளவுபடுதலால் ஆன கல்தூள்களின் சேர்க்கையால் உண்டாக்கப்பட்டவை. வெகுவாய், ஒடும் ஜலமே மண் இடம்மாறுதலுக்கு முக்கிய சாதனமாயிருக்கிறது. சிற்சில சமயங்களில் காற்றின் உதவியாலும் மண் இடம்மாறுகிறது. காற்றினால் இப்படி மண் இடம் மாறுவதை சாதாரணமாகப் பெரிய நதிகளின் கரைகளிலும் அல்லது கடற்கரைக்கு அருகாமையிலும் பார்க்கலாம். காற்று, ஆற்றங்கரை ஒரங்களிலும் கடற்கரைக்கு அருகிலும் மணைலை வாரி அடிப்பதால் அவ்விடத்திலுள்ள நிலங்கள் பொதுவாக மணற்பாங்கானவை. ஒடும் ஜலத்தால் அடித்துவரப்பட்டு இடம் மாறுதலை அடையும் மண் பலவகையாயிருக்கும். உள்நாட்டு மேட்டுப்பாங்கான இடங்களில் உயர்ந்த தரைகளிலிருந்து அடித்துவரப்பட்டு, நயமான மண் படிந்துள்ள பள்ளத்தாக்குகளின் அடியில் தோன்றும் மண் வகைகளும், பெரிய நதிகளால் கொண்டுவரப்பட்ட கழிமுகத் தெதிர்நிலங்களில் (Deltaic)கிடக்கும் முகச் சத்துள்ள மண்வகைகளும், அவைகளில் அடங்கும்.

      பின் கூறப்பட்ட நிலங்களுக்குப் படுகை நிலம் அல்லது அடைமண் தரை (alluvial)என்று பெயர். பெரும்பான்மை இவ்வகை நிலங்கள் பற்பலவகைக் கற்களின் அணுக்கூட்டங்களின் சேர்க்கையினால் உண்டாக்கப்பட்டிருக்கிறபடியால் அதிகக் கொழுமையுள்ளவைகளாக விருக்கின்றன.

     ஒரு நதி, உள்நாட்டிலிருந்து கடலுக்குச் செல்லுகையில் அநேக விதமான கல்லாந்தரையின் வழியாய் ஒடி அங்கங்கிருக்கும் பலவித கல், மண் இவைகளைக் கரையச்செய்து. அவ்வண்டல்களை நீரோட்டத்தின் வேகத்துக்குத் தகுந்தவாறு தூரமாயும் சமீபமாயுமுள்ள இடங்களுக்கு அடித்துச் செல்லுகின்றது. தரைமட்டம் சமன் ஆகஆக நதி தன் வேகம் குறைந்து மெள்ள மெள்ள ஒடித் தான் அடித்துக்கொண்டுபோகும் கல்தூளையும், வண்டலையும் அதிகமாகக் கீழே படியும்படி விடுகின்றது. இவ்வண்டல், நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாகப் புதுநிலமாகித் தகுந்த அநுகூலமான நிலைமைகளில் நாவின் வடிவுபோன்ற பூமியைக் கடலுக்குள் செலுத்துகின்றது. அந்நிலத்தின்வழியாய் நதி மெள்ள வளைந்து செல்லுகின்றது. இந்னாக்கு வடிவமான பூமிக்குக் கழிமுகத் தெதிர்நிலம் என்று பெயர்; இது ஆற்று வண்டலால் உண்டாக்கப்பட்டது. பளுவான மணல் அடியிலும், நயமாயும் நுட்பமாயுமுள்ள களிமண் மேலேயும் படிந்திருக்கும். கழிமுகத் தெதிர்நிலம்வழியாய் நதி சாதாரணகாலத்தில் அநேக வாய்க்காலாகப் பிரிந்து பக்கத்திலுள்ள பூமியின் மட்டத்துக்கு அதிக கீழே ஒடுகிறது. நதியின் பிரவாககாலத்தில் வெள்ள ஜலம் கொஞ்சம் மணலையும் அதிக களிமண்ணையும் அடித்துக்கொண்டு இருகரையும் புரண்டு ஒடுகிறது. தண்ணீர் அதிகமாகப் பரவப்பரவ நீரோட்டத்தின் கதிகுறைந்து முதலில் மணலும் அதன்பிறகு களிமண்ணும் தரையில் படிகின்றன. பிரவாக காலங்களில் நதிகள் விஸ்தாரமாகப் பரவிச் செல்லுகையில் களி மண்ணை அதிகமாய் அடித்துக் கொண்டுபோய் நிரம்பவும் செழிப்புள்ள வண்டலைப் புரையாகத் தங்கவிடுகின்றன. இவ்வித வண்டல், மழைகாலத்தில் உயர்ந்த தரைமட்டத்திலிருந்து மழைஜலம் புரண்டுவந்து குளத்திற்குள் விழுப்போதும் அக்குளத்திலேயே படிவதையும் பார்க்கலாம். நதியில் வெள்ளம் பெருகி, பின் நீர் வடிந்துபோது அதன் கரைகளில் இம்மிருதுவான வண்டல் படிவதால், கரைகளை வழுக்குநிலமாகச் செய்கிறது. நீரோட்டத்தின் வேகம் குறையும் போது மேற்கூறியபடி வண்டல் படிவதை நதியின் எல்லா விடங்களிலும் காணலாம். இதற்கு வண்டல் மண் அல்லது அடைமண் என்று பெயர். இந்த வண்டல் நிலம் சரியானபடி கல்தூளாகிய மணல், மண் இவற்றுடன் கூடியிருந்தால் நிரம்பச் செழிப்புள்ளது. மணல் அதிகமாயுள்ள நிலங்களோ வளப்பத்தில் மிகவும் தாழ்ந்தவை இவ்வித நிலங்களை நீரோட்டம் வெகு விரைவாயிருக்கும் இடங்களில் காணலாம்.

1 thought on “விவசாய நூல் – ஜந்தாம் அதிகாரம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news