உப்பு நீரில் வாழும் உயிர்!!!

0
3596

       வாழ்க்கை முழுக்க முழுக்க உப்புத்தண்ணீரை குடித்து யாராவது உயிர் வாழ முடியுமா? யாரேனும் உயிர் வாழ்ந்திருக்கிறார்களா? வாழ்ந்திருக்கிறார்கள். சில தாவரங்கள் இப்படி தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இயற்கை அதிசயங்களில் இதையும் ஒன்றாக கருதலாமே!

     உலகம் முழுவதிலும் ஒரு சில பகுதிகளில் மட்டுமே வளரக்கூடிய அரிய வகை மரங்களின் தொகுப்பே அலையாத்தி காடுகள்

       தமிழில் அலையாத்தி அல்லது கண்டல் காடுகள் என்றழைக்கப்படும் Mangrove forest உப்புத்தன்மை மிகுந்த கடல்நீரிலும் வளரும் அதிசயத் தன்மை கொண்ட தாவரங்களாக இருக்கிறது. நிலமும் கடலும் சேரும் பகுதியில், களிமண் நிறைந்த சகதி மண்ணில் இந்த அலையாத்திக் காடுகள் வளர்கின்றன

காணப்படும் இடங்கள்

     தமிழ்நாட்டில் முத்துப்பேட்டை, பிச்சாவரம் ஆகிய பகுதிகளிலும் மேற்குவங்கத்தில் கங்கை பிரம்மபுத்திரா ஆறுகளின் முகத்துவாரப் பகுதிகளிலும் இத்தகைய காடுகள் காணப்படுகின்றன.இந்த பகுதிகளில் கடல் நீரோடு ஆற்றுநீர் கலக்கும் போது உப்பின் அளவு குறைகிறது. இதை உவர் நீர் என்றழைக்கிறார்கள். இந்த நீர் நிறைந்துள்ள உவர் நிலங்களில் அலையாத்தி காடுகள் அடர்ந்து வளர்கின்றன.

மரங்களின் வகைகள்

     உவர் நிலப்பகுதிகளில் 60 வகையான மரங்கள் உள்ளன. பிச்சாவரத்திலும் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள தில்லைக்காடுகளிலும் 12 வகையான மரங்கள் உள்ளன. இதில் சுரபுன்னை ,வெண்கண்டல், கருங்கண்டல், ஆட்டுமுள்ளி, பண்டிக்குச்சி, நரிக்கண்டல், சிறுகண்டல் ,காகண்டல், தில்லை ,திப்பாரத்தை ,உமிரி என்ற மரங்களும் செடிகளும் மண்டியுள்ளன.

மரங்களின் சிறப்பு

     சுரபுன்னை வகையைச் சேர்ந்த மரங்களின் தண்டுகளில் இருந்து உருவாகும் வேர்கள் மணல் சேற்றுக்குள் இறங்கி விடுகின்றன. இவற்றுக்கு தாங்கு வேர்கள் என்று பெயர். வெண்கண்டல் மற்றுமு் உப்பாத்தா மரங்களின் வேர்கள் ஈட்டி போல பூமிக்கு வெளியிலும் நீட்டிக்கொண்டிருக்கும். இந்தத் தாவரங்கள் உப்பை எப்படிச் சகித்துக்கொண்டு வாழ்கின்றன? இந்த மரங்களின் வேர்கள், நீரிலுள்ள உப்பை வடிகட்டும் தன்மை கொண்டவை என்பதுதான் சூட்சுமம். அதையும் தாண்டி தாவரத்தில் புகும் உப்பை, இலையிலுள்ள உப்புச்சுரப்பிகள் வெளியேற்றி விடுகின்றன.

     அது மட்டுமில்லாமல் சிறிதளவு உப்பைக் கிரகித்துக்கொண்டு, இலைகள் தடிமனாகின்றன.சதுப்பு நிலப்பகுதியில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கும்.எனவே சுவாசிப்பதற்காக இந்த வேர்கள் பூமிக்கு வெளியே தலையை நீட்டுகின்றன. ஆக்ஸிஜனை உள்ளிழுத்து மரங்கள் வாழ உதவி செய்கின்றன. இந்த அதிசய வேர்களை சுவாசிக்கும் வேர்கள் என்றும் அழைப்பர். இப்படி நிலத்துக்கு அடியிலும் நிலத்திற்கு வெளியிலுமாக காணப்படும் வேர்கள் மண்ணோடு பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.இந்த வேர்கள்தான் சுனாமியில் இருந்து முத்துப்பேட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளை காப்பாற்றியிருக்கின்றன.80 முதல் 100 மைல் வேகத்தில் வருகிற புயல் காற்றைக்கூட தடுத்து நிறுத்தும் வலிமை அலையாத்தி மரத்திற்கு உண்டு.கடலோட சீற்றத்தை தான் வாங்கிக்கொண்டு கடல் நீரின் வேகத்தை கட்டுப்படுத்தி விடும்.

மரங்களின் பயன்

   மணல் அரிப்பை தடுக்கிறது.அலையாத்தி மரங்களின் வேர்கள் கடலோர மணலை இறுகச் செய்து மணல் அரிப்பை

தடுக்கிறது.

தமிழ்நாட்டிலுள்ள அலையாத்தி காடுகளில் ஒன்றைப் பற்றி இங்கு காண்போம்!

அலையாத்தி காடுகளும் தில்லை மரமும்!

     பிச்சாவரம்… கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலிருந்து 14 கிலோமீட்டர் தூரத்துல இருக்கு. வெளிநாட்டுப் பறவைகளுக்கும், வெளிநாட்டுக்காரங்களுக்கும் இந்த இடத்தோட அருமை பெருமை தெரியுது. அதனாலத்தான். தமிழ்நாட்டு பக்கம் வந்தா, பிச்சாவரம் மண்ணை மிதிச்சுட்டு போறதை பெரும்பாலும் வழக்கமா வெச்சிருக்காக வெளிநாட்டுக்காரங்க. இங்க ஒடி வந்து, இதோட இயற்கை அழகை ரசிச்சு பார்க்குகள். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், இங்க வர்ற மக்களுக்கு பாதுகாப்பான படகுகள் மூலமா சுத்தி காட்டுற வேலையை செய்யுது.

     பிச்சாவரத்துல இருக்கிற அலையாத்தி (மாங்குரோவ்) காடுங்கதான், உலகத்திலேயே ரெண்டாவது பெரிய அலையாத்தி காடுன்னு புள்ளிவிவரம் சொல்லுது. கடல் சீற்றம் மூலமா பெரிய அலைகள் உருவனா, அந்த அலைகளோட வேகத்தைக் கட்டுப்படுத்துற வேலையைத்தான் இந்த அலையாத்தி காடுங்க செய்யது. அலையோட வேகத்தை குறைக்கிறதாலதான், அலையாத்தி காடுனு தமிழ் மொழியில பேரு வெச்சிருக்காங்க. அரிய வகை மீன் இனங்கள் வாழவும், சில வகை மீன்கள் குஞ்சு பொரிக்கவும் அலையாத்தி காடுகளோட வேர்தான் அடைக்கலமா இருக்கு.

    பிச்சாவரம் காட்டுப்பகுதியோட பரப்பளவு 2,800 ஏக்கர், இந்தப் பகுதியில சின்னச் சின்ன தீவுங்க சுமார் 50 உண்டு, 177 வகையான பறவைங்க இந்தப் பகுதியில வந்து போறதா, புள்ளிவிவரம் சொல்லுது. இந்திய அளவுல சதுப்பு நிலக்காட்டுப் பகுதி சுற்றுலாத் தலமா இருக்குன்னா, அது பிச்சாவரத்துல மட்டும்தாங்க.

    விதவிதமான மரம், செடி கொடிங்க, மயில், மீன்கொத்தி, நாரை, பருந்ததுனு விதவிதமான பறவைகளும், குள்ளநரி, நீர் நாய்… என ஏராளமான உயிரினங்களும் உண்டு. இந்தக் காடு தமிழ்நாடு வனத்துறை பாதுகாப்புல இருக்கு. இந்தப் பகுதியில சினிமா படப்பிடிப்பும் நிறைய நடக்குது. படத்துல பார்த்தா, அது எங்கேயோ வெளிநாட்டுல எடுத்து மாதிரி பசுமையா, பிரமாண்டமா இருக்கும். ஆனா அத்தனையும் பிச்சாவரம் சதுப்புநிலப்பகுதியில எடுத்ததாத்தான் இருக்கும்.

    இந்த மாங்குரோவ் காடுகளில் சுமார் 1100 ஹெக்டேரில் நீர் வழிப்பாதைகள் உள்ளன.செயற்கைக்கோள் படங்களை கொண்டு இக்காடுகளை பார்க்கும் போது நீலக்கடலில் பச்சை மாமலை பவளச் செங்கண் மேனியனான திருமால் ஆனந்தமாய்ச் சயனித்திருப்பது போல் தோற்றம் தருகிறது. சுற்றுலா பயணிகள் ஒரே இடத்திலிருந்து பிச்சாவரம் வனப்பகுதியை பார்க்கும் வண்ணம் உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மரங்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை பூத்துக்குலுங்கும்.

     எம். ஜி.ஆர் நடிச்ச ‘இதயக்கனி’ திரைப்படத்தோட காட்சியை, இங்க இருக்கிற, ஒரு திட்டுல படம் புடிச்சிருக்காங்க, அதுல இருந்து, அந்த திட்டுக்கு எம்.ஜி.ஆர் திட்டுன்னு பேரு வெச்சு மக்கள் கூப்பிடறாங்க.

      இந்த பிச்சாவரத்துக்கும், சிதம்பரம் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு. அதாவது, சிதம்பரம் நடராஜர் கோயிலோட தலவிருட்சம் ‘தில்லை’ மரம். இந்த மரம் பிச்சாவரம் அலையாத்தி காட்டுப்பகுதியில நிறையவே இருக்கு. அதாவது, ஒரு காலத்துல கடற்கரைப் பகுதி சிதம்பரம் நடராஜர் கோயில் வரையிலும் இருந்ததாகவும், காலப்போக்குல கடல் உள்வாங்கி பிச்சாவரம் பகுதியோட இப்போ நிக்குதுன்னும் சொல்றங்க. இதுக்கு ஆதாரமாத்தான், நடராஜர் கோயில்ல இப்பவும், தில்லை மரம் நின்னுக்கிட்டிருக்கு. சிதம்பரத்துக்கு ‘தில்லை’ன்னும் இன்னொரு பேரு உண்டு.

    கூடவே, இன்னொரு கதையும் உலா வருது. முதலாம் பராந்தக சோழ மன்னருக்கு தொழுநோய் பாதிப்பு ஏற்பட்டுச்சாம். பலவிதமான ராஜ மருத்துவம் பார்த்தும் நோய் குணமான மாதிரி தெரியல. கடைசியா சித்தர்கள் வழிகாட்டல் மூலமா 48 நாள் சிதம்பரம் நடராஜர் கோவில தங்கி, தல விருட்சமான தில்லை மர இலையோட தீர்த்தத்தை (தண்ணீர்) குடிச்சாராம். இதுக்குப் பிறகு, பராந்தக சோழனுக்கு தொழுநோய் குணமாயிடுச்சுன்னும் சொல்றாங்க. இந்த முதலாம் பராந்தக சோழந்தான், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குப் பொன்னாலேயே கூரை செய்து கொடுத்திருக்கார். இவருக்கு’ பொற்கூரை வேய்ந்த சோழன்’னும் பட்டப் பெயர் உண்டு. பிச்சாவரம் அலையாத்தி காட்டுப்பகுதியில உள்ள சுரபுன்னை தில்லை மரங்களோட மருத்துவக் குணம் அந்த பகுதி தண்ணில கலந்திருக்காம். இதனால, அங்க மீன் பிடிக்குற மீனவர்களுக்கு, தொழுநோயோ, புற்றுநோயோ வரதில்லைன்னும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிங்க ஆய்வு மூலமா கண்டுபிடிச்சிருக்காங்க.

    தில்லை மரத்துல ஏராளமான மருத்துவக் குணம் இருந்தாலும், இந்த மரத்துக்கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்துக்கணும்னு சொல்றாங்க ஏன்னா, இந்த மரத்தோட பால் கண்ணுல பட்டா, கண் எரிச்சல் ஏற்பட்டு பார்வை குறைபாடு வந்துடுமாம், இதனாலத்தான், குருடாக்கும் மரம்னு (Blinding Tree) இதுக்கு இன்னொரு பேரு வெச்சிருக்காங்க. இனி சிதம்பரம்னு சொன்னா, நடராஜர் மட்டுமில்லீங்க, தில்லை மரமும் கண்ணு முன்னால வந்து நிக்கும்தானே!

நன்றி

பசுமை விகடன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here