Skip to content

தென்பெண்ணை ஆறும் விவசாய நிலமும் – பகுதி 2

5 மாவட்டங்களுக்கு அபாயம்:-

இந்நிலையில், வலதுபுற கால்வாயை, தர்மபுரி மாவட்டத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, 2006ல் ஜெகதாப்பில் இருந்து, 13 கி.மீ.,க்கு கால்வாய் வெட்டி, காரிமங்கலம், திண்டல், சாதிநாயக்கன்பட்டி ஏரிகளுக்கு தண்ணீர் விடப்படுகிறது.

இதேபோல், 14.2 கி.மீ., உள்ள இடதுபுற கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர், பாளேகுளி வரை செல்கிறது. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது, தண்ணீர் வீணாக செல்வதால், பாளேகுளி ஏரியில் இருந்து, சந்தூர் ஏரி வரை, புதிய கால்வாய் வெட்டி, பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, 2014 ல் பாளேகுளி ஏரியில் இருந்து நாகரசம்பட்டி, வீரமலை, புட்டனூர் வழியாக, சந்தூர் ஏரி வரை, 11.கி.மீ.,க்கு கால்வாய் வெட்டப்பட்டு தண்ணீர் செல்கிறது.

மேலும், காவேரிப்பட்டினம் நெடுங்கல் தடுப்பணையில் இருந்து, 11.2 கி.மீ., கால்வாயில் பாரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இதன் மொத்த கொள்ளளவு,248 மில்லியன் கன அடியாகும். இந்த ஏரியில் இருந்து பலகிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன.

பாரூர் ஏரியில் இருந்து கால்வாய் வழியாக, பெனு கொண்டாபுரம் ஏரி மற்றும் பாளேதோட்டம் ஏரி வரை தண்ணீர் செல்கிறது. கே. ஆர்.பி., அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரால், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கே.ஆர்.பி., அணை நிரம்பி, தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் திறந்து விடும் போது, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம்,கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ளம் அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் அகரத்தில் உள்ள நெடுங்கல் அணைக்கட்டு வழியாக, தர்மபுரி மாவட்டம் எச்.ஈச்சம்பாடி அணைக்கட்டிற்க்கு வந்தடைகிறது. இந்த அணைக்கட்டால், 41 கிராமங்களில்,6,250 ஏக்கர் பாசனம் பெறுகிறது. இந்த அணைக்கட்டில் இருந்து வெளியேறும் தண்ணீர்,57கி.மீ.,க்கு, தர்மபுரி மாவட்ட எல்லையான கீழ் செங்கப்பாடி வழியாக, திருவண்ணாமலை மாவட்டத்திற்க்கு செல்கிறது.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news