Skip to content

இறால் வளர்ப்பு

      இறால் (prawn) பொதுவாக நன்நீரிலும், உவர்நீரிலும் காணப்படும் ஒரு நீர் வாழ் உயிரினம் ஆகும். இது இறால் மீன் எனவும் அழைக்கப்படுகிறது. மாந்தர்களால் விரும்பி உண்ணப்படும் இறைச்சியாகவும் இறால் விளங்குகிறது. இறால்கள் கூட்டமாக வாழும் தன்மையுடையது. நீரில் இது பின்புறமாகவும் நீந்தக்கூடியது. பெரிய மீன்கள் மற்றும் திமிங்கிலங்களுக்கு இறால்கள் நல்ல உணவாக அமைகிறது.

     கடல் வாழ் உயிரினங்களின் இறந்த உடல்கள் கடல் நீரில் கழிவுப்பொருட்களாக மாறுகின்றன. இவற்றில் கழிவுப்பொருட்களை கடலில் உள்ள இறால் மீன்கள் உண்டு வாழ்கின்றன. எனவே இவற்றை கடலின் தூய்மையாளர்என அழைப்பர். பெரிய வளர்ச்சியடைந்த இறால் மீன்கள் ஆழ்கடல் பகுதியில் உள்ளன. ஆழ்கடல் பகுதியில் தான் இவை முட்டையிடுகின்றன. முட்டைகளும் அங்கேயே முதிர்ச்சியடைகின்றன.

      முட்டையில் இருந்து வெளிவரும் குஞ்சுகள் கடல் அலைகளால் அடித்து வரப்படுகின்றன. இந்த குஞ்சுகள் சதுப்பு நிலக்காடுகளிலும், கடலோர கரையிலும் ஒதுங்குகின்றன. சதுப்பு நிலக்காடுகள், கரையோரங்களில் மீன்பிடி தொழில் நடப்பதால் இறால் மீன்கள் இளம் பருவத்திலேயே அழிந்து விடுகின்றன. இதனால் இவை குறைவதால் ஆழ்கடல் பகுதியில் வளர்ச்சியடைந்த இறால் மீன்களும் குறைகின்றன.

      மற்ற கடல் உணவுப் பொருட்களைப்போல் இறாலில் அதிகமாக கால்சியம், அயோடின் மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. இறால்களில் அதிகப்படியான கொழுப்பு காணப்படுகிறது. இந்த கொழுப்பானது நல்ல கொலஸ்டிரால் எனப்படும் கொழுப்பு வகையைச் சேர்ந்ததால், இதனை உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.தற்போது உலகின் பண்ணைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் இறால்களில் 70% ஆசிய நாடுகளிலிருந்து வருகின்றன.

       ஆசிய நாடுகளில் இறால் உற்பத்தியில் முன்னணியில் இருப்பவை சீனா மற்றும் தாய்லாந்து ஆகும். இந்தியாவில், ஆந்திர மாநிலத்தில் அதிக அளவிலான இறால் உற்பத்தி செய்யப்படுகிறது.

      இறால் வளர்ப்பினை நெல் விவசாயத்துக்கு இணையாகவே பேசுவார்கள். இதிலும் விதை, அறுவடை என்ற வார்த்தைகள் அடிக்கடி பயன்படுத்தப்படும். கடற்கரையோரம் உப்பு நீரில் இறால் வளர்ப்பு என்பது பரவலாக பல இடங்களில் நடைப்பெற்றுவருகிறது. ஆனால் நன்னீர் இறால் வளர்ப்பு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே உள்ளது. நல்ல தண்ணீர் உள்ள வயல்வெளிகளுக்கு நடுவே கூட இந்த நன்னீர் இறால் வளர்ப்பு நடைபெறுவதுதான் குறிப்பிட்டத்தக்க விஷயம்.

      நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் அழகிய வயல்வெளிகளுக்கு நடுவே சுமார் 5 ஏக்கரில் குட்டை வெட்டப்பட்டு நன்னீர் இறால் வளர்க்கப்படுகிறது. இந்த இறால் குட்டைகளின் உரிமையாளர் வரதராஜனிடம் பேசினோம். ”விஜயவாடாவில் நன்னீர் இறால் வளர்ப்பிற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்த விவசாயி ஒருவருக்கு விருது வழங்கினார்கள். அந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அப்போது பொன்னேசிரியைச் சேர்ந்த அந்த விவசாயி எனக்கு பழக்கமானார்.

       அவரது இறால் குட்டைக்குச் சென்று ஒரு வாரம் இருந்து அனைத்தையும் தெரிந்துகொண்டேன். அதன் பின்னர்தான் நன்னீர் இறால் வளர்ப்பதற்காக இந்த 5 ஏக்கர் நிலத்தை இரண்டரை லட்ச ரூபாய்க்கு வாங்கினேன். அதை ஆறு குட்டையாக பிரிந்துக்கொண்டேன். இடத்தை ஜேசிபி வைத்து குட்டையாக வெட்டினால் ரூபாய் ஐந்து லட்சம் வரை செலவாகும். அதனால் புதுச்சேரி மாநிலம் மரக்காணம் பகுதியில் தற்காலிகமாக தங்கி வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் டிராக்டரைக்கொண்டே குட்டை அமைத்தேன். ஒரு மணிக்கு ரூ.210 என்றபடி மொத்தம் இரண்டு லட்சத்துப் பத்தாயிரம் ரூபாய் செலவானது.

       குட்டையின் கரையும் பலமாக இருக்கும்படி அமைத்துத்தருவார்கள். உப்பு நீரில் இறால் குஞ்சுகள் உள்ள நீர் என்பது சன்லிட்டி 17 பிபிடி [உப்புத்தன்மை]க்கு மேல் இருக்கும். பிபிடி அளவின் தன்மையை இரண்டிரண்டாகக் குறைத்து கடைசியில் 1 பிபிடி உள்ள நீரில் அந்த இறால் குஞ்சுகள் வைக்கப்படும். அந்த குஞ்சுகளை வாங்கி வருவோம். ஒரு ஏக்கருக்கு இரண்டு லட்சம் குஞ்சுகள் விடலாம். இரண்டு லட்சத்துக்கு பத்து சதவீகிதம் போனஸ் குஞ்சுகள் இருக்கும். இதனை குஞ்சுகள் என்பதற்க்கு பதிலாக ‘சீட்’ அதாவது ‘விதை’ என்றுதான் சொல்வார்கள்.

       நன்னீர் இறால் விதைகளுக்கென்று புதுவை மாநிலம் மரக்காணம் பகுதியில் நிறைய ‘ஹேட்சரீஸ்’ இருக்கிறது. முன்னதாக நம்முடைய தண்ணீரை அவர்களிடம் கொடுத்து பரிசோத்திக்கவேண்டும். அவர்கள் அந்த நீரில் பிஹெச் மற்றும் சன்லிட்டி ஆகியவற்றைக் கண்டறிந்து அதற்க்கேற்றவாறு இறால் விதைகள் தயார் செய்து கொடுப்பார்கள்.

      முதலில் நூறு விதைகளை மட்டும் வாங்கிவந்து குட்டையில் வலைகட்டி அதில் விட்டுவிடுவோம். 48 மணி நேரம் அதனைக் கண்காணித்து எல்லாம் உயிரோடு இருந்தால் திரும்பவும் சென்று நமக்கான இறால் விதைகளை வாங்கிவந்துவிடுவோம். ஒரு இறால் குஞ்சின்விலை 40 பைசா. ஒருமுறை இறால் குஞ்சுகள் விட்டு வளர்ந்தபின்னர் அறுவடை நடத்தி முடிப்பதற்கு ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ஆறு லட்ச ரூபாய் தேவைப்படும். இறால் குஞ்சுகள் விட்டவுடன் ஒரு மாதத்திற்கு அதில் குஞ்சுகள் இருக்கிறதா? இல்லையா? என்பது எதுவும் தெரியாது. இரண்டு வேளை தீவனங்கள் மட்டும் போட்டுவருவோம்.

       இறால் குஞ்சுகளுக்கு என மூன்று சைஸில் தீவனங்கள் உள்ளது. ஒரு கிலோ 74 ரூபாய். இதில் புரோட்டீன் அதிகம். வாரம் ஒரு முறை ‘நெட்டிங்’ செய்து குஞ்சுகளை எடுத்து அதன் சைஸீக்கேற்றவாறு தீவனம் போடவேண்டும். இறால் வளர்ப்பு என்பதே மொத்தம் 90 நாட்கள்தான் இறால் குஞ்சுகளில் வனாமி, டைகர் என்ற இரண்டு வகை உள்ளது. வானமி வகைதான் நன்னீரில் நன்கு வளரும். இந்த வகை இறால் குஞ்சுகளுக்கு நோய் எதிர்ப்புத்தன்மை அதிகமாக இருக்கும். இதற்க்கான தாய் இறால் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சுமார் 18 வகையான நோய்கள் வராத அளவிற்கு அந்த ‘புரூடர்’ எனப்படும் தாய் இறலை வளர்த்து அதன்பிற்குதான் விற்ப்பனை செய்கிறார்கள்.

       இந்திய அரசு இந்த இறாலை இறக்குமதிசெய்து இங்கே பதிவு செய்த ‘ஹேட்சரீஸ்’ நபர் ஒருவருக்கு சென்னையிலுள்ள ‘மரைன் புராடக்ட் அத்தாரிட்டி’ மூலம் 850 ஜோடி தாய் இறாலை அவர்கள் ஆறு மாதம்வரை வைத்து குஞ்சு பொரிப்பிற்காக பயன்படுத்திக்கொள்ளலாம். அதன்பிறகு அந்த தாய் இறால்களை இந்திய அரசாங்கத்திடமே திருப்பிக்கொடுத்துவிடுவோம். அரசாங்கமே அதனை அழித்துவிடும். அதன்பிறகு வேறு தாய் இறால் பெற்றுக்கொள்ளலாம். ஏன் இப்படியொரு விதிகள் வைத்திருக்கின்றார்கள் என்றால் ‘ஹேட்சரீஸ்’ நபர்கள் ஆறு மாதத்திற்கு மேல் அந்த தாய் இறாலை வைத்து குஞ்சு பொரித்தால் வீரியம் குறைந்து நோய்யெதிர்ப்புத்தன்மை இல்லாத ஒட்டுமொத்த இறால் வர்த்தகமே கெட்டுவிடும் என்பதால்தான். இப்படியான வீரியம் குறைந்த இறால் 50 கிராம் எடை வளர்க்கவேண்டியது வெறும் 5 கிராம்தான் வளரும்.

       ஒரு கல்ச்சர் [அறுவடை] முடிந்தபிறகு குட்டைகளை ஒரு மாதம் வெயில்படும்படி காயவைக்கவேண்டும். அதன்பிறகு மேலே உள்ள பழைய இறாலின் கழிவுகளை அகற்றிவிட்டு டிராக்டர் மூலம் உழுது அக்ரிமைட், டோலமைட் போன்ற சுண்ணாம்புச் கலவைகளை தெளித்து இரண்டடி தண்ணீர் விடவேண்டும். இந்த சுண்ணாம்புச் சத்துகள் இறாலின் ‘ஷெல்ஃபார்மேஷனுக்கு’ பெரிதும் உதவும்.

       அஷ்டமி, நவமி, பெளர்ணமி, அமாவாசை இந்த நான்கு சமயங்களிலும் இறாலானது தன்னுடைய தோலை உரித்துக்கொள்ளும். இப்படி தோல் உரிக்க உரிக்கத்தான் அது பெரிதாக வளர்ச்சியடையும். குட்டையில் தண்ணீர் விட்டவுடன் ஆங்காங்கே மீதமிருக்கும் கழிவுகள் சக்திவாய்ந்த பாக்டீயாவை உற்ப்பத்தி செய்யும். அதற்கு வெறும் பிளீச்சிங் பவுடரை தெளித்தால் போதும். அனைத்தும் இறந்துவிடும். அதன்பிறகு நீரில் ‘புளும்’ டெவலப் செய்து நீரின் நிறத்தை பச்சையாக மாற்றவேண்டும். இது மிகவும் எளிதான பிராசஸ்தான்.

      பச்சரிசித் தவிடை பவுடர் போல் அரைத்து 200 லிட்டர் பேரலில் 20 கிலோ தவிடு, 10 கிலோ கடலைப் புண்ணாக்கு, 2 கிலோ மைதா, கால் கிலோ ஈஸ்ட் போட்டு மூடி வைத்து ஒருநாள் முழுவதும் நொதிக்கச் செய்யவேண்டும். பின்னர் அதனைப் பிழிந்து சக்கரையை வெளியே எடுத்துவிட்டு நீரில் இதனைக் கலந்துவிட்டால் அடுத்த ஒருநாளில் ‘புளூம்’ டெவலப் ஆகிவிடும். இயாற்க்கையாகவே நீரானது சூரிய ஒளியுடன் வேதிவினை பிரிந்து பச்சைம் எனப்படும் தாவர நுண்ணுயிரியை [பைட்டோ பிளாண்டோன்] உருவாக்கும்.

       ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் அதுவே விலங்கின நுண்ணுயாக [சூபிளாண்டோன்] மாறும். இதுதான் இறால் குஞ்சுகளின் முக்கிய உணவாக இருக்கும் இயற்க்கையாகவே நீரில் இப்படி உருவாவதை நாம் டெவலப் செய்கிறோம். அவ்வளவுதான். இதனால் தீவனச் செலவு குறையும். குஞ்சுகளின் வளர்ச்சியும் நன்ரிறாக இருக்கும். இதுமாதிரியான பிராசஸ் செய்யாமல் இறால் குஞ்சுகள் விடும்போதுதான் அவற்றிற்கு நோய்கள் உண்டாகும். இறாலின் உணவுக்குழலில் கட்டி ஏற்பட்டு பிரச்னை ஆகிவிடும். இதற்கு தீவனத்தில் தயிரைக்கலந்துக் கொடுத்தால் சரியாகிவிடும். அதிகமாக பாக்டீரியல் இன்ஃபெக்‌ஷன் இருந்தால் ஒரு கிலோவிற்கு ஐந்துகிராம் என்றபடி மஞ்சள் தூளை தீவனத்தில் கலந்து கொடுக்கவேண்டும். கண்ட்ரோல் ஆகிவிடும்.

        அதுபோல் ‘ஏரேட்டர்’ மூலம் நீரில் செயற்கையாக ஆக்சிஜன் உண்டாகும் ‘ஆஸ்மோடிக் ரெலுலேஷன் பிராசஸ்’ என்பது மிகவும் அவசியம். நாம் கொடுக்கும் தீவனத்தை அப்படியே இறால் சாப்பிடும் என்று சொல்லமுடியாது. மோல்டிங் நேரத்தில் அதாவது தோல் உரிக்கும் நேரத்தில் உணவே எடுத்துக்கொள்ளாது. ஆறு மணி நேரம் அப்படியே நீருக்கு அடியில் அமர்ந்துவிடும். அப்போது போடும் தீவனங்கள் அம்மோனியாவாக மாறிவிடும். இது இறாலுக்கு எரிச்சல் தன்மையை ஏற்படுத்தி மிகப்பெரிய தொல்லையை உண்டாக்கிவிடும். தாவர நுண்ணுயிரிகள் அழிந்துவிடும். அப்போது ‘ஏரேட்டர்’ மூலம் ஆக்சிஜனை உருவாக்கி ஆஸ்மோடிக் ரெகுலேஷன் பிராசஸ் நடந்தால் அம்மோனியாவானது நைட்ரேட், ஆக மாறி நைட்ரேட், நைட்ரைடு வாயவாக வெளியேறிவிடும்.

         ஒரு ஏக்கரில் இரண்டு லட்சம் இறால் குஞ்சுகள் விடும்போது எப்படியும் 20 சதவீத இறால் குஞ்சுகள் அழிந்துவிடும் மீதமுள்ள 1 லட்சத்தது 600,000 இறால் குஞ்சுகள் 90 நாளில் இருபது கிராம் வளர்ச்சியடைந்தாலே மூன்றரை டன் இறால் கிடைக்கும். இப்போதைய மார்க்கெட் விலை ஒரு டன் நன்னீர் இறால் இரண்டு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாய். இதுதான் மிககுறைந்த விலை. ஆனால் ஒரு டன் நான்கு லட்சம் வரை விலைபோகும். நல்ல விலை போகும் நேரத்தில் ஒரு ஏக்கருக்கு 15 லட்சம் ரூபாய் வரை ரேட் குறைந்தாலும் நஷ்டம் என்பது இந்தத் தொழிலில் கிடையாது.

       எனக்கு ஒருமுறை ஜெனரேட்டர் ரிப்பேராகி ஏரேட்டர் வேலை செய்யாததால் போதிய ஆக்சிஜன் இறாலுக்கு கிடைக்காமல் இறந்து நஷ்டமேற்பட்டுவிட்டது. மற்றொருமுறை அம்மோனியா உற்பத்தி ஆகி எவ்வளவு ‘புளூம்’ ஏற்றியும் சரியாகாமல் இறால்கள் இறந்துவிட்டது. மிகமிக ஜாக்கிரதையாக ஒரு கைக்குழந்தையை வளர்ப்பதுபோல் அடிக்கடி கண்காணித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்படி சரியாக இந்தத் தொழிலைச் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

           இது இரண்டர்நேஷனல் மார்க்கெட் என்பதால் அன்றைய தின விலைப்படி இறாலைக் கொள்முதல் செய்வார்கள். இதற்கான புரோக்கர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் எங்களிடம் இறாலை வாங்கி ஏஜென்சி நிறுவனங்கள் மூலம் கொச்சின் துறைமுகத்திற்கு அனுப்பி அங்கேயிருந்து வெளிநாடுகளுக்கு எக்ஸ்போர்ட் ஆகிவிடும். அதிக தொகை முதலீடு செய்து அதிக லாபம் பெறக்கூடிய தொழில் இது. ஆரம்பத்தில் ஒரு ஏக்கர் குட்டை வெட்ட 50,000 ரூபாய் ஆகும். அதன்பிறகு முக்கியச் செலவு என்றால் ஏரேட்டர்தான். ஒரு ஏக்கர் குட்டைக்கு நான்கு ஏட்டர் வேண்டும். ஒரு ஏரேட்டரின் விலை 35,000 ரூபாய் ஆகும். அதன்பின்னர் இறால் குஞ்சுகள் என்றபடி ஆக மொத்தம் ஒரு ஏக்கர் குட்டைக்கு ஆறு லட்ச ரூபாய் செலவிடவேண்டும். அப்படியே தொடர்ந்து தொழில் செய்துவந்தால் வருடத்திற்கு இரண்டு அறுவடை என்றபடி கை நிறைய பணத்தைப் பார்க்கலாம்.” என்றார் விரிவாக.

நன்றி

வரதராஜன் போன் நெம்பர்: 9943556121

மண்வாசனை

3 thoughts on “இறால் வளர்ப்பு”

  1. நன்றி குமுதம் மன்வாசனையில் பிரசுரம் ஆன எனது கட்டுரையை வெளியிட்டதற்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news