Skip to content

ஆகாயத்தாமரை அகற்றும் கருவி!

ஆகாயத்தாமரை அகற்றும் கருவி!

மாணவனின் அசத்தல் முயற்சி!

இது முழுக்க முழுக்க சூரிய ஒளியில் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த கருவி மூலமாக பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்றலாம்.

ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை அடர்ந்து இருப்பதைப் பார்த்திருப்போம். இதை அகற்றுவதற்கு அரசு சார்பில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், பெரும் பொருட்செலவு காரணமாக ஆகாயத்தாமரையை அகற்றுவதில் பின்னடைவு ஏற்படுகிறது.

இந்நிலையில், நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்றுவதற்காக கருவி ஒன்றைக் கண்டுபிடித்து அசத்தி இருக்கிறார் ஊட்டியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் அருண். இது சம்பந்தமாக அவரிடம் பேசியபோது, “புதுசு புதுசா ஏதாவது பொருளைக் கண்டுபிடிக்கறதுல எனக்கு ஆர்வம் அதிகம். இதுக்கு முன்ன பெட்ரோல், டீசலுக்கு பதிலா தண்ணியிலேயே இயங்குற மாதிரியான வாகனத்தை உருவாக்கினேன். இந்த வாகனத்துல பொருத்துற இஞ்ஜின், தண்ணியில் இருக்கிற ஹைட்ரஜன், ஆக்சிஜன் மூலக்கூறுகளைப் பிரிச்சு, இயங்குற மாதிரி வடிவமைச்சிருந்தேன். இந்தக் கண்டுபிடிப்புக்கு, மாவட்ட அளவுல நடந்த அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசும் கிடைச்சது.

இதேபோல, கடல்ல மீன்பிடிக்கப் போற மீனவர்கள் எல்லை தாண்டுறதைத் தடுக்கக் கூடிய கருவியையும் கண்டுபிடிச்சிருக்கேன். இதுக்கு, மாநில அளவில் நாலாவது பரிசும், மாவட்ட அளவுல ரெண்டாவது பரிசும் கிடைச்சது” என்று தனது கண்டுபிடிப்புகள் பற்றி பேசியவர், ஆகாயத்தாமரை அகற்றும் கருவி பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

செலவைக் குறைக்க சோலார்!

ஒருமுறை கோயம்புத்தூர்ல நடந்த கண்காட்சிக்குப் போனபோது, வழியில ஒரு குளத்தைப் பார்த்தேன். குளம் முழுக்க தண்ணியே தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரை அடைஞ்சு கிடந்தது. இப்படி அடைஞ்சு இருக்கிறதால, நீர்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும்னு எப்பவோ படிச்சது நினைவுக்கு வந்துச்சு. இவ்வளவு கெடுதி செய்ற ஆகாயத்தாமரையை ஏன் அகற்றாம இருக்காங்கன்னு எங்க சார்கிட்ட கேட்டேன். ‘ஆகாயத்தாமரைகளைச் சுலபத்துல அகற்ற முடியாது. அதுக்கு நிறைய செலவாகு’னு சொன்னாரு. அப்பத்தான் ‘இதை அகற்றுவதற்கு ஒரு கருவியை உருவாக்கினா என்ன’ன்னு தோணுச்சு. உடனே அது சம்பந்தமான தகவல்களை சேகரிச்சு, ஆய்வு பண்ணி, கருவியை உருவாக்குற முயற்சியில இறங்கினேன்.

பல சோதனைகளுக்குப் பிறகு, ஆசிரியர்கள் உதவியோட ஆகாயத்தாமரை அகற்றுற கருவியை வடிவமைச்சேன். இது முழுக்க முழுக்க சூரிய ஒளியில இறங்குற மாதிரியாவும் வடிவமைச்சிருக்கேன். இதுமூலமா ஆகாயத்தாமரையை அகற்றும்போது செலவு குறையும். இதை ரிமோட் மூலமாவும் இயக்கலாம்ங்கிறது, கூடுதல் சிறப்பு. தூரத்துல இருந்தே திசையையும் சுலபமா மாத்தி அமைக்கலாம்” என்ற அருண், கருவி செயல்படும் விதம் குறித்து விளக்கினார்.

எப்படி இயங்குகிறது..?

இந்தக் கருவியில ரெண்டு முக்கியமான பகுதி இருக்கு. முன்பகுதியில இருக்கற ஒரு அமைப்பு ஆகாயத்தாமரைகளைச் சின்னச் சின்ன துண்டுகளா வெட்டும். ரெண்டாவது, பெல்ட மூலமா சுழலக்கூடிய பக்கெட். இது, வெட்டுன துண்டுகளை சேகரிச்சு, கழிவுகளை சேமிக்குற இடத்துல கொட்டும். இது முழுக்க முழுக்க சூரிய ஒளியிலேயே இயங்கும்.

இந்தக் கருவி மூலமா நீர்நிலைகள்ல இருக்கிற பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்றலாம். இதை ஊட்டி படகு இல்லத்துல என்னோட ஆசிரியர் சுந்தரம் உதவியோட செயல்படுத்தி காட்டியிருக்கேன். இதே கருவியை பெருசா செஞ்சு, பயன்படுத்தினா ஆகாயத்தாமரைகளை சுலபமா அகற்றலாம். அரசாங்கமோ, தனிநபர்களோ நிதியுதவி செஞ்சா, இதேபோல பல கருவிகளை என்னால கண்டுபிடிக்க முடியும்” என்று கண்களில் நம்பிக்கை மின்ன சொல்கிறார் அருண்.

நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றுவதற்கு அரசு பல லட்சங்களை செலவிட்டு வரும்நிலையில் ஒரு மாணவர், எடுத்துள்ள இந்த முயற்சி பாராட்டத்தக்கது இதுபோன்ற மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு நிதி உதவியுடன், பயிற்சியும் அளித்தால் எதிர்காலத்தில் தமிழகத்தில் இருந்து நிறைய விஞ்ஞானிகளை உருவாக்கலாம்.

ஆகாயத்தாமரையின் தீமைகள்:

ஆகாயத்தாமரை அல்லது வெங்காயத்தாமரை ஒரு நீர்வாழ் தாவரமாகும். இத்தாவரம் வெப்பமண்டல தென்அமெரிக்காவை சேர்ந்தது. அழகுக்காக வடஅமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்கா போன்ற கண்டங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இளவரசி விக்டோரியா, கொல்கத்தாவிற்கு வந்தபோது, லண்டனில் உள்ள தேம்ஸ் நதிப்போல் காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக, கொல்கத்தாவில் உள்ள ஊக்ளி நதியில் ஆகாய தாமரை விட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நாடுமுழுவதும் உள்ள ஏரி, குளங்களில் ஆகாயதாமரை வளர ஆரம்பித்தது.
இனப்பெருக்கத்திற்கு இடையூறு மாசு அடைந்த தண்ணீரில் வேகமாக வளரும் ஆகாயதாமரை இலைகளின் வழியாக நீராவிப்போக்கு வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதால் நீரின் அளவு வெகு விரைவாக குறைந்து விடுகிறது.
அடர்ந்த புதர்போலப் பரவியிருக்கும் ஆகாயதாமரையால் சூரிய ஒளி நீரினுள் ஊடுருவுவதற்குத் தடையாக இருப்பதால், அந்நீரில் வாழும் தாவரங்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத்திற்கு ஆகாய தாமரை இடையூறாக உள்ளது. கால்நடைகள் நீர் அருந்த முடியாமல் ஆகாய தாமரையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடக்கிறது. கொசுக்கள் உற்பத்திக்கு நல்ல சூழ்நிலை, பாம்புகளின் புகலிடம், வெள்ளக்காலங்களில் சேதம் அதிகரிப்பு, படகுப் போக்குவரத்து மீன் பிடிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளும் ஆகாயதாமரைகளால் ஏற்படுகிறது.
ஏரி, குளங்கள் வேதி கொல்லிகளை பயன்படுத்தி இவைகளை அகற்ற முடியும், ஆனால் இவை நீரில் வளரக்கூடிய தாவரம் என்பதால் நீர்நிலைகளும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதால் சோதனை அடிப்படையில் ‘‘கிலன் கீளினிங் எந்திரம்’’ என்ற நவீன எந்திரம் மூலம் நாட்டிலேயே முதன் முறையாக ஆகாய தாமரை அகற்றப்படுகிறது.

நன்றி

அருண்

பசுமை விகடன்

2 thoughts on “ஆகாயத்தாமரை அகற்றும் கருவி!”

  1. இந்த தந்திரம் செய்ய எவ்வளவு செலவு ஆகும். இந்த கருவியின் புகைப்படம் அனுப்புங்கள்.

  2. இந்த, இயந்திரம் போட்டோ அனுப்புங்க
    விலை சொல்லுங்க. உங்க contact number
    send பண்ணுங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news