Skip to content

பசுமைப் பணியில் திண்டி மா வனம்!

ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, கடைசியில மனுசனையே கடிக்கிறயா? எனக் கிராமங்களில் சொல்வார்கள். ஆனால், உண்மையில் மனிதந்தான் இயற்கை வளங்கள் அனைத்தையும் அழித்து, இறுதியாகப் பூமிக்கு மழையைக் கொண்டுவரும் மழைத்தூதர்களான மரங்களையும் அழித்தொழித்து விட்டான். அதன் விளைவு, பருவம் தவறிய மழை; வாட்டி எடுக்கும் வெயில்; அடிக்கடி மிரட்டும் புயல்… எனத் தன் சீற்றத்தைப் பல வகைகளிலும் காட்டத் தொடங்கியுள்ளது இயற்கை.

ஒரு பக்கம் இயற்கை வளங்களை அழித்துக் கொண்டே போனாலும் இன்னொரு பக்கம் இயற்கை வளங்களை மீட்டெடுப்பதில் ஈடுபடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தச் சமன்படுத்தும் பணியால்தான் பூமிப்பந்து குற்றுயிரும் கொலையுயிருமாவது இன்னமும் சுற்றிக்கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில் பூமியைக் காப்பதற்காகத் திண்டுக்கல்லைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பலரும் ஒருங்கிணைந்து ஏற்படுத்திய அமைப்புதான் ‘திண்டி மா வனம். திண்டுக்கல்லைப் பசுமையாக்குவதும் நீர்நிலைகளைக் காப்பதும்தான் இந்த அமைப்பின் முக்கியமான பணிகள். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கிய இந்த அமைப்பு மூலமாக, இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

திண்டுக்கல்லில் உள்ள எம்.வி.எம் முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லூரியின் பின் பகுதியில், இந்த அமைப்பின் சார்பாக முதன்முதலில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. ஏழு மாதங்களுக்கு முன்பாக நடவு செய்யப்பட்ட கன்றுகள் தற்போது வேர்பிடித்து நன்றாக வளர்ந்து வருகின்றன.

இப்பகுதியில் அழியும் தருவாயில் இருக்கும் 50 வகையான மரங்கள் உள்பட 104 வகையான மரங்களில் மொத்தம் 3,600 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. அத்தனை கன்றுகளுக்கு டிராக்டர் மூலம் தினமும் தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறார்கள் இந்த அமைப்பினர்.

அதேபோல இந்த இடத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தாவரவியல் அறிஞர் ‘அகிரா மியாவாகி’ என்பவரால் உருவாக்கப்பட்ட மியாவாகி முறையில் இரண்டு மாதிரிகளையும் உருவாக்கி இருக்கிறார்கள். இந்த முறையில் மிகக் குறைவான இடத்தில் அடர்வனத்தை உருவாக்க முடியும். இந்த அமைப்பில் உள்ள தன்னார்வலர்களின் தன்னலமற்ற உழைப்பால் இந்தக் கல்லூரியில் நடப்பட்ட அனைத்துச் செடிகளும் தற்போது மரமாகி வருகின்றன. இன்னும் ஒரிரு ஆண்டுகளில் இந்த இடத்தில் ஒரு கானகத்தை எதிர்பார்க்கலாம்.

திண்டுக்கல் ஆயுதப்படை மைதானம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், விவசாய நிலங்கள் என அனைத்து இடங்களிலும் மரக்கன்றுகளை நடவு செய்து கொடுப்பதுடன், மரங்கள் நடப்பட்ட இடங்களில் முறையாகத் தண்ணீர் கொடுக்கிறார்களா என்பதையும் கண்காணித்து வருகிறார்கள். தண்ணீர் வசதி இல்லாத இடங்களில் நடவு செய்த கன்றுகளுக்கு இவர்களே தண்ணீர் கொடுத்துப் பராமரிக்கிறார்கள்.

இந்த அமைப்பின் சமீபத்திய சாதனை 50 வயதான அரசமரம் ஒன்றை வேரோடு பிடுங்கி, மற்றொரு இடத்தில் நடவு செய்ததுதான். ஒரு வணிக வளாகத்தில் இருந்த மரத்தைக் கட்டட விரிவாக்கத்துக்காக வெட்டத் தயாரானது வணிக நிறுவனம். அந்த நிறுவனத்தின் அனுமதியுடன் அந்த மரத்தை வேரோடு பிடுங்கி, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடவு செய்தனர் திண்டி மா வன அமைப்பினர். தற்போது அந்த அரச மரம் துளிர்த்துப் புதுத் தளிர்களுடன் இவர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறது.

திண்டுக்கல் நகருக்குப் பசுமைப் போர்வையை நெய்து கொண்டுள்ள இவர்களின் சீரிய முயற்சியால் இன்னும் சில ஆண்டுகளிலில் திண்டுக்கல் பசுமையான நகரமாக மாறும் என்று நம்புகிறோம்.

வாழ்த்துக்கள்… அவரவர் தங்களுடைய மாவட்டத்தை கவனித்து முறையாக பராமரித்து வந்தாலே பசுமை நம் மாநிலத்தில் மட்டுமல்ல நம் நாடு முழுவதும் துளிர் விட்டிருக்கும். இயற்கை அரணாகவும் இருந்திருக்கும். விவசாயம் பொய்த்து போயிருக்காது.விரைவில் மீட்டெடுப்போம் விவசாயத்தை… பசுமையான காடுகளை

வெல்க உங்கள் முயற்சி!!!

நன்றி

திண்டி மா வனம் குழுவினர்களுக்கு

பசுமை விகடன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

editor news

editor news