முருங்கை சாகுபடி!!!

1
7639

   ஒரு ஏக்கர் பரப்பில் நாட்டு முருங்கை சாகுபடி செய்ய மரியராஜ் சொல்லும் தகவல்கள் இங்கே!!!

   நிலத்தை முதலில் சட்டிக்கலப்பையால் ஒரு சால் உழவு செய்து, 15 நாள் காயவிட வேண்டும். பிறகு டிரில்லரால் ஒரு உழவு செய்து அடுத்த நாள் செடிக்கு செடி 20அடி இடைவெளியில், ஓர் அடி ஆழத்தில் குழி எடுக்க வேண்டும். ஏக்கருக்கு 100 குழிகள் வரை எடுக்கலாம். முருங்கையை போத்தாக நடவு செய்தால் விரைவாக மகசூலுக்கு வரும்.

   நன்றாக வளர்ந்த முருங்கை மரத்தில் இருந்து, ஒன்றரை அடி உயரத்தில் போத்துகளை வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 100 லிட்டர் தண்ணீர் 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்து கொள்ள வேண்டும். போத்துகளில், எந்த முனையை மண்ணுக்குள் நடவு செய்யபோகிறோமோ, அதை அரை அடி அளவுக்கு பஞ்சகவ்யா கரைசலில் நனைத்து எடுத்து பத்து நிமிடம் நிழலில் வைத்து பிறகு, குழிக்குள் நடவு செய்ய வேண்டும். இதனால் வேர் வளர்ச்சி தடைபடாமலும், வேர்ப்பகுதி அழுகாமலும் இருக்கும். நடவுக் குழிக்குள் அரை கிலோ அளவு மட்கிய சாணத்தைப் போட்டு அதில் போத்து பாதியளவு குழிக்குள் மூழ்குமாறு நடவு செய்து மண் அணைத்து முதல் நீர் விட வேண்டும். பின் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வந்தால் போதும்.

   நடவு செய்த அடுத்த நாள் பசுஞ்சாணத்தை மருதாணி வைப்பது போல் போத்துக்களின் நுனியில் ஒரு இஞ்ச் அளவுக்கு சுற்றிலும் வைக்க வேண்டும். 10 முதல் 15-ம் நாளில் தளிர் தெரியும். 30-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும். பிறகு ஒவ்வொரு 15 நாள் இடைவெளியிலும் இதே அளவில் பஞ்சகவ்யாவை தெளிக்க வேண்டும்.

பூக்கும் நேரத்தில் பிண்ணாக்கு கரைசல்!

  6-ம் மாதத்தில் பூ பூக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் பாசிப்பயறு 5 கிலோ, தட்டைப்பயறு 5 கிலோ, கொள்ளுப்பயறு 5 கிலோ, கொண்டைக்கடலை ஆகியவற்றை மாவாக திரித்து இதனுடன் கடலைப் பிண்ணாக்கு 80 கிலோ, வேப்பம் பிண்ணாக்கு 10 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் கொள்ளளவுள்ள டிரம்மில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கிவிட்டு டிரம் நிரம்பும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் இதை இரண்டு நாள் வரை வைத்திருந்து, ஒரு குழிக்கு 2 லிட்டர் அளவு தூரில் ஊற்றி மண் அணைக்க வேண்டும். இதனால் பூ உதிராமல் காய் பிடித்து நன்கு வளரும்.

கம்பளிப் பூச்சி தாக்குதலுக்கு வசம்புபொடி கரைசல்!

   குளிர் காலத்தில் கம்பளிப்பூச்சி தாக்குதல் இருக்கும். அந்த நேரத்தில் 10 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி வேப்ப எண்ணெய், 200 கிராம் வசம்புப் பொடி கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். வருடம் ஒருமுறை மழை நேரத்தில், மரத்தில் இருப்பதிலேயே உயரமான கம்பை வெட்ட வேண்டும். அதில் கட்டை காய்கள்தான் வரும். காய்கள் உச்சிக்குப் போனால் பறிக்க முடியாது. தவிர அதிக காற்று வீசும்போது மரம் முறிய வாய்ப்பு உள்ளது. எனவே, உயரமான கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். இதனால், கிளைகள் வளர்ந்து அதிக பூ பூத்து காய்பிடிக்கும். நல்ல முறையில் பராமரித்தால் 8 ஆண்டுகள் வரை கூட நல்ல மகசூல் பார்க்கலாம்…

நன்றி, மரியராஜ்

தொடர்புக்கு : 8904256076

1 COMMENT

  1. முருங்கைக்காய்,சிவப்பு நிறத்தில் இருப்பது காரணம் என்ன தயவு செய்து சொல்லுங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here